சமத்துவப் பொங்கல் பொங்கணும் பொங்கல் கவிதைப் போட்டி

***சமத்துவப் பொங்கல் பொங்கணும்!***
(பொங்கல் கவிதைப் போட்டி.)


மாற்றான் சிரமதில் மணிமுடி சூடி
==மறவன் என்றவன் புகழ்தினம் பாடி
போற்றும் நிலையதன் கதவுகள் மூடி
==புதுமை சரித்திரம் படைப்பதை நாடி
காற்றில் புயலாய் தமிழின மெழுந்து
==காலில் செருப்பாய் கிடப்பதைத் தவிர்த்து
ஆற்றல் வளமுள ஊற்றாய்ச் சுரந்து
==அவனியி லுரிமை பொங்கல் பொங்கணும்.

சிதறியத் தேங்காய்த் துண்டெனத் தமிழினம்
==சிதைத்திடச் செய்தவர் நகைப்பினைக் கண்டும்
பதறிடா திருந்திடும் மனநிலைக் கொண்டு
==பலிக்கடா போலவே வாழ்வதை விடுத்து
கதறியக் கண்ணீர்த் துளிகளைத் துடைத்து
==கடலினில் நீராய் ஓரிடம் சேர்ந்து
முதலிடம் தமிழன் முகவரி யாகிட
==முனைவது தமிழரின் மூச்செனக் கொள்வோம்

பன்னிரு கோடிகள் சனத்தொகை மிகுந்த
==பழங்குடி தமிழினம் ஐக்கியம் தொலைத்து
தன்னிறை வெய்திடா திருப்பத னாலொரு
==தனித்துவ மிழந்துத் தரணியில் இன்னும்
பின்னடை வடைந்து செல்வதைத் தடுத்து
==பின்வரும் சந்ததி கைகளில் தமிழின்
சந்நிதி வாசலின் திறவுகோல் கொடுத்து
==சமத்துவப் பொங்கல் வைப்பது அவசியம்!

மெய்யன் நடராஜ் (இலங்கை)

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (18-Jan-14, 2:31 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 51

மேலே