தத்துவத்தின் மேடை மேலே உறங்குகின்றான் உழைப்பாளி

இவன்
வழித்தடங்கள் எல்லாமும்
வெறும் பாறைகளும் முட்களும்தான்..!!

இருந்தும்
நடக்க மறுப்பதில்லை
இந்த வறுமையின் பாதங்கள்..!!

அந்த
சுவடுகள் சொல்லிவிடும்
இவன் சுமந்துவந்த காயங்களை..!!

உழைத்து வாழும் மூச்சு இது
உலகம் இவனுக்கு பெரும் வீடு..!!

களைத்து
உறங்கிப் போனால் அது இரவு
கண் விழித்திருந்தால் பகல் இவனுக்கு..!!

லஞ்சப் பிச்சை எடுக்கும்
எச்சில் வாதியே அறிவாயா..?
நீ பிய்த்துத் தின்பது
இவனது இரத்தச் சதையைத்தான்..!!

ஊழல் கொறித்துத் தின்னும்
பெருச்சாளியே உணர்வாயா..?
உன் ஊளைச்சதை எல்லாம்
இவனது உழைப்பின் திருட்டுதான்..!!

எல்லாம் தெரியும் அவனுக்கு
இருந்தும் உறங்குகின்றான் அவன்
ஒன்றும் அறியாத சிறு குழந்தை போல்..!!

இந்த
உலகத்தில்
எதுவும் நிரந்தரம் அல்ல
என்ற தத்துவத்தின் மேடை மேலே..!!

இன்று
இந்த இடம்
நாளை எந்த இடமோ
என்ற கவலை ஏதும் இன்றி..!!

எழுதியவர் : வெ கண்ணன் (18-Jan-14, 2:52 pm)
பார்வை : 516

மேலே