மெல்லச் சாகும் மனிதம்

மெல்லச் சாகும் மனிதம்
முதுபெருங் கிழத்தி முப்பது பாகை முக்கோணமாய் முழங்காலைத் தொட்ட முகம் தூக்கி
“செவாசிக்குப் போகுமா?”
என்று கேட்டதற்கு
“போகாது ….போகாது “ என்று பதில் சொல்லிச் சென்றது சிவகாசிக்குப் போய்க்கொண்டிருந்த பேருந்து.
அடுத்த பேருந்தில் அவளுக்கான இருக்கை தேடினேன். அது நெடுஞ்சாலையின் இடை நிருத்தம் என்பதால் எல்லாப் பேருந்துகளுமே நிரம்பித் ததும்பின. இருந்த போதும் மூத்த குடிமக்களுக்கான இருக்கை ஒதுக்கித் தருமாறு முட்டாள் தனமாக உரிமை கோரினேன்.
நடத்துனர் நல்லவர் போலும், முறைத்துப் பார்த்தபடியே முன்னிருந்த இருக்கையைச் சுட்டிக்காட்டி
‘அவர்களிடம் எழுந்திருக்கச் சொல்லுங்கள்’. என்றார்.
“இந்த மாத உமது ஊதியம் எனக்கா?: என்றேன்
விசில் அடிக்குமுன்னே விருட்டென்று பேருந்து கிளம்பியது என்னையும் ஏற்றிக்கொண்டு.
சைகையே காட்டாமல் வலப்புறமாகச் சட்டென்று திரும்பிய ஆட்டோவின் கரிசனத்தால் இறங்கிக்கொண்டேன்.
பாட்டியிடம் வந்து
”பேரென்ன?.
முகம் தூக்கினாள். அவள் முகச் சுருக்கங்கள் மூகவரி சொன்னது.”குறிச்சியார்பட்டி பெருமாள் நாயக்கர் மனைவி கோதம்மாள்”
இரண்டடி அகலத்தில் இடுப்புச் சேலை அதில் இறுகத் திணிக்கப்பட்டிருந்தது ஒரு சுருக்குப் பை. அதை அவிழ்ப்பதற்கான அவளது முயற்சியை தடங்கல் செய்தது கை நடுக்கம்.
உதவி செய்தேன்.
உனக்குத் தான் என்று நீட்டினாள். நான்காய் மடித்த பத்து ரூபாய்.
“காபித் தண்ணிக்கும், குடிதண்ணிக்கும்”
“அதுக்கு நீ 25 ரூபாய் ல தரணும்”
“எங்கிட்ட 100 ரூபாய் தான் இருக்கு. சிவகாசி ஆஸ்பத்திரிக்கு போய்த் திரும்பனும். வந்து ஒனக்கு குடுத்துருவேன்.”
அவள் சாதிக்கான பேச்சு வழக்கை வாய் மறந்திருந்தது.
“பாட்டி நானும் ஒம் பேரன் தான். ஆஸ்பத்திரிக்கு போய் திரும்பி வந்து குடு போதும்”
சரியென்பதாக ஆட்டிய அவள் தலை, செத்தது மனிதாபிமானம் தான், தன் மானம் இல்லை என்று சொல்வதாக இருந்தது.
“பேராண்டி உன் போன் நம்பரக் கொடேன்”
உன்னையும் செல்போன் விட்டுவைக்கவில்லையா என்று நான் எனக்குள் சிரித்துக்கொண்டதை பார்த்த பாட்டி
“ஏன் சிரிக்கிற , என் பேத்தி போன் வச்சிருக்கா. அவ ரொம்பப் படிச்சவ. அவகிட்ட சொல்லி நான் உனக்கு பேசுதேன்.”
மருந்துச் சீட்டில் எழுதப்பட்டிருந்த அலைபேசி எண்ணைக் காட்டினாள்.ஏனோ எனக்கு அந்த எண்ணைப் பார்க்கவே பிடிக்கவில்லை.
பாட்டியின் கழுத்தில் ஒரு குழாய் செருகப்பட்டிருந்தது. காரணம் கேட்டேன்.
“ஆகாரந் தண்ணி எல்லாமே இந்தக்கொழாய் வழியாத் தான். செத்துப் பொழச்சேன். ஏன் வூட்டுக்கார்ரு என் பேர்ல அன்னவஸ்திரத்துக்குனு 2 ஏக்கர் புஞ்சய எழுதி வச்சார்.பட்டா கூட எம்பேர்ல தான் இருந்துச்சு. எம் மவன் கையெழுத்துக் கேட்டான்.போட்டுட்டேன். அதுக்கப்பொரந்தான் ஆஸ்பத்ரில சேத்தான்.வயித்தக் கிழிச்சு தச்சாக. இப்ப இந்தக் கொழாய புடுங்கனும். அதுக்குத் தான் போறென்.
“சார் மணி என்ன” குரல் கேட்டு திரும்பினேன். இந்த நேரத்துல சிவகாசிக்கு பஸ் ஃப்ரீயா வருமா?அந்தப் பாட்டிய எத்தனை பஸ்ல தான் ஏத்தி எறக்குவீங்க.புது பஸ்டாண்டு போய்ருங்க .சீட்டு கிடைக்கும்.
அவனது மேற்சட்டை அவனை ஆட்டோ ஓட்டுனராக அறிமுகம் செய்தது.
“எவ்வளவு?”
ஃபிக்ஸ்டு தான் சார், நாற்பது ரூபா”
எனது இரு சக்கர வாகனத்தை அங்கேயே விட்டு விட்டு ,பாட்டியுடன் புதுபஸ்டாண்டில் இறங்கினேன்.
எனது ஆறு மாதக் குழந்தயை நடத்திப் பழக்கியது ஞாபகம் வந்தது. ஸ்ரீ ராம் பஸ் 4557 காலியாகத்தான் வந்தது. பாட்டியை அதிலேற்ற மிகவே சிரமப்பட்டேன். ஏறுவதற்குள்ளாகவே பஸ் கிளம்பியது.
அடுத்து வந்த பேருந்தில் மிகப் பெரிய விவாத்திற்குப் பின் பாட்டி ஏற்றிக்கொள்ளப்பட்டாள். யார் இறக்கிவிடுவது என்ற கேள்வியே அவர்களின் தயக்கத்திற்குக் காரனம் என்று அறியும் போது இதயம் கொஞ்சம் கனத்துத்தான் போயிருந்தது.
ஆட்டோக்காரன் பாராட்டினான். நற்செயல் ஒன்று புரிந்தமைக்காக சந்தோசப்பட்டவனாய் இரண்டு 20 ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தேன்.
ஆட்டோக்காரனின் முகம் இறுகியது.
சார்…………………………………..என்று இழுத்தான்.
“சார் அப்புக்குத் தான் 40, ரிடனுக்கு 40 வெயிட்டிங் 20 , 100 ரூபாய் கொடுங்க”
நான் சட்டைப் பையில் தேடிக்கொண்டிருந்தேன்
“சார் அந்தப் பாட்டி உங்களுக்கு வேண்டியவங்களா?”
……………………………………………………………….
பேருந்து கிளம்பியது. பாட்டியுடன் எனது அலைபேசி எண்ணும் பயணம் செய்தது.
பாட்டியின் ரிங்க் டோனை எதிர்பார்த்தவனாய் திரும்பி வந்தேன்.
(இது ஒரு உண்மைக் கதை)