கடவுள் காலம்
கடவுளர்களுக்கான கண்காட்சி...
தேர்தல் காலங்களில்தான் துவங்குகிறது.
எல்லாக் கடவுள்களும்...
மனிதர்களைக் கும்பிடுவதும் அப்போதுதான்.
கடவுள்கள் தெரு சுற்றும் காலங்களில்தான்...
ஒரு கடவுளின் மாண்பை...
இன்னுமொரு கடவுள் புட்டுப் புட்டு வைக்கிறது.
எல்லாக் கடவுள்களின்
மீதான வழக்குகளும்...ஒழுக்கமும்...
ஊடகங்களிலும்..தெருத் தெருவாயும்... விலாவாரியாய் விமர்சிக்கப்படுவதும்
இந்தக் காலங்களில்தான்.
நீங்கள் எப்போதும் கேட்கும்..
குடி தண்ணீரும், மின்சாரமும்...இருப்பதற்கான இடமும்..
அடுத்த ஐந்தாண்டுகளில் நிறைவேற்றப் படுமென
எல்லாக் கடவுள்களும்..எல்லாக் கூட்டங்களிலும் பேசும்.
போன ஐந்தாண்டில் நீங்கள் கேட்ட
புறம்போக்கு இடங்களை... பட்டாவாய்..
இப்போது உள்ள கடவுள்
மாற்றிக் கொண்டதென பழைய கடவுள்
ஆதாரங்களுடன் பேசும்.
தனக்கொரு பொன்னான வாய்ப்புத் தரும்படி...
பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவன் காலிலெல்லாம் விழும்.
கடவுளாயிருந்தாலும்...காசிருந்தால்தான் வாழ்வு...
என்பது எல்லாக் கடவுள்களுக்கும் தெரிந்துதான் இருக்கிறது.
இலவச பிரியாணிகளில் தன்னை இழந்து விடும்
மனிதர்களுக்குத்தான் தெரிவதில்லை...
கடவுளாயிருப்பதன் அருமை.