குடியரசே குடியரசு

இன்றைய நாள் ஏற்றிடுவோம்
இனியதொரு சூளுரையை ;
கற்றவர்கள் எல்லோரும்
கல்லாதான் மனைசென்று
பொற்புடைய கல்விதனைப்
போதிப்போம் என்று இன்றே ;
உற்றவராய் கொண்டு அவரை
உயர்த்த முனைந்திடுவோம்!

பாமரரின் குடியரசாய்ப்
பன்னாளும் இருந்திட்டோம் ;
நாமிதனை மாற்றி விட
நாடி மனம் வைப்போம் ;
ஊமைச் சனங்க ளென
உறங்கிக் கிடப்பதற்கு
நாமினியும் சோதரரை
நன்றோ அனுமதித்தல் ?

அப்ரகாம் லிங்கனது
அழகான விளக்கம் தான்
எப்போதும் ஏற்றது என்று
எல்லோரும் சொல்லிடுவார் !
குப்பத்துக் கருப்பனுக்கும்
குடியரசில் பங்குண்டு ;
குப்பத்துக் கருப்பனது
குடியரசே குடியரசு !!!

எழுதியவர் : சரஸ்வதி பாஸ்கரன் (21-Jan-14, 4:08 pm)
சேர்த்தது : sarabass
பார்வை : 56

மேலே