கடல் கடந்த கவலைகள்
தேசம் விட்டு
தேசம் வந்து
தேகம் தேய
உழைக்கிறோம்!
பேசும் மொழிகள்
பலவானாலும்
தமிழைத் தாயாய்
மதிக்கிறோம்!
பிறந்த நாட்டைப்
பிரிந்து வாழும்
பிழைப்பை எண்ணி
நோகிறோம்!
அந்நிய நாட்டை
அண்டிப் பிழைத்தும்
இந்தியராய்த்தான்
வாழ்கிறோம்!
கடன் சுமைகள்
கழுத்தை நெறிக்க
கடல் கடந்து
பிழைக்கிறோம்!
கண்ணீரோடு
கவலையனைத்தையும்
கைக்குட்டைக்குள்
மறைக்கிறோம்!
கருவில் சுமந்த
தாயின் முகத்தை
கணினித் திரையில்
காண்கிறோம்!
அன்பாய் வளர்த்த
தந்தையின் குரலை
அலைபேசி வழி
கேட்கிறோம்!
சொர்கம் போன்ற
நாட்டிலிருந்தும்
சொந்தங்களின்றித்
தவிக்கிறோம்!
இனிவரும் காலம்
இனிதாய் அமைய
இன்றைய வாழ்வைத்
தொலைக்கிறோம்!
மகிழ்ச்சி வாழ்வென
மற்றவர் நினைக்க
மனதிற்குள் கண்ணீர்
வடிக்கிறோம்!
ஊரில் உறவுகள்
உயிர்விடும்போதும்
தூரத்தில் நின்றே
துடிக்கிறோம்!
விடுமுறை கிடைத்தால்
விமானம் பிடித்து
வீடு வந்துவிடத்
துடிக்கிறோம்!
இறைவனின் சந்நிதி
இதுவென நினைத்தே
இந்திய மண்ணை
மிதிக்கிறோம்!