- கருத்திலே பூத்ததுதிருமதி திலகவதிக்குப் பாராட்டு

173184 என்ற எண்ணில் திருமதி திலகவதி அவர்கள் எழுதிய கவிதையைத் திருத்தி எழுதிய கவிதை இது.
இதன் கருத்தாக்கத்திற்கு உண்டான பாராட்டு அவர்களையே சேரும். இரண்டையும் படிப்பவர்கள் புதுக்கவிதைக்கான சொல்லொட்டத்தைப் புரிந்துகொள்ள உதவும் என்ற நோக்கத்திலேதான் இது இங்கு பதிவு செய்யப்படுகிறது. யாருடைய மனத்தையும் புண்படுத்துவது இதன் நோக்கமல்ல.
இனி கவிதைக்குச் செல்லலாம்:

சொல்லளவில் நான் பேத்தி..

ஏரோட்டும் உழவனுடன்
தேரோட்ட வந்தவள்தான்!
நீரோட்ட வாழ்வினையும்
நீந்தியே கடந்தவள்தான்!

எட்டுப் பிள்ளை பெற்றாலும்
கட்டழியா மேனியினள்!
கட்டியுள்ள சேலைக்குள்
கள்ளமிலா நெஞ்சத்தள்!

ஊதி ஊதி எரியாத
உள்வீட்டின் அடுப்பிருந்தும்
சேதிகளில் எரியாத
சிந்தனைதான் மனத்திருக்கும்!
இல்லாமை இருந்தாலும்
இல்லாத சுற்றமில்லை!

வெற்றிலை அரைத்தவாய்
வெறுப்புகளை அரைத்ததிலை!
பற்றெனவே வந்தவர்கள்
பசித்தவராய்ச் சென்றதில்லை!

அலுத்துச் சலித்தலிலை!
அடிமையெனும் நினைப்புமிலை!
உழைத்தும் களைப்பதிலை!
உறவுகளைக் களைந்ததிலை!

புள்ளி யிட்ட கோலத்தில்
துள்ளு தாயக் கட்டையினில்
தள்ளிடுவாள் நாட்களினை!
தங்கவிடாள் குறைகளினை!

நல்லதங்காள் கதைகேட்டே
சொல்லயில்லாத் துயர்கரையும்!
கல்வியில்லப் போதும்,மனக்
கவலையெலாம் அதில்மறையும்!

ஆடு,மாடு கழனியென
அவருலகம் ஆனாலும்
வீடு,பாடு அடுப்படியில்
விரிந்திருக்கும் அவளுலகம்!

என்னகுறை? நான்ராணி!
என்மச்சான் மகராசன்!
சொன்னது,என் அம்மாச்சி!
சொல்லளவில் நான்பேத்தி!
===== =====
திலகவதிக்கு எனது பாராட்டுக்கள்.

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (23-Jan-14, 6:34 am)
பார்வை : 81

மேலே