மௌனப் பதியங்கள்

ஊருக்கு வடக்கால
ஒத்தயாதா படர்ந்திருக்கு
நா எட்டுக்கட்டி பாடப்போற
பழம்பேறு மொட்டப்பாற.....!

ஆண்டாண்டு காலமாதான்
அகண்டு வளந்து நாங் கெடக்கேன் ..
எதுக்கால குடியேறி
எனக்காலே தெசகுறிச்சேன்னு
உருட்டி நீ அழிச்சிருந்தா
தடயமில்ல எங்களுக்கு....!

உருளாமப் பெரளாம
ஒரேநெலையா நீ நிக்க...!
ஒம்மேல நா ஏறி ஓடியாடி
களச்சி நிக்க...! இப்படியாத்
தொடருமிங்க
நம்மளோட கல்லுச் சொந்தம்...!

நரகாசுரத் தீனியில
தெறிச்சி விழுந்த பணியாரம்
உருண்டுவந்து இங்க நின்னு
வளந்து நீயா ஆகிட்டதா
பேச்சிப் பாட்டி சோறூட்ட.....!

மூச்சடக்கி செத்த மிருக - மிச்ச
முதுகு முட்டு இதுதான்னு
முனியத் தாத்தா வெத்தலைக்கி
சுண்ணாம்பு பச தடவி
சுருட்டியமுக்கி கடவா திணிக்க...!!

வருசக் கணக்கா பரதமுனி
பொதஞ்சிருந்து தவங் கெடக்க
அவஞ் சுருட்டிக் கட்டிய
கொண்டமுடின்னு
புராணமொண்ணு புளுகித்தள்ள....

எப்போதும் எங்களுக்கு நீ
முடிவில்லா மொட்டப் பாற....!

மாடுசுத்தி மேயயில
குச்சிமூங்கி கொடஞ்செடுத்து
குமரேசன் ஊதயில
பெருங்காத்து நொழஞ்செழுந்து
பெருகிவழியும் ராகத்துக்கு
ஒம் உச்சிமண்ட மேடையாகும்...
ஊர்கூடி வாழ்த்திப் போகும்..!!

செல்லமுத்து வாத்தியாரு
சின்னத்தாயி ஆச்சியோட
கொழந்தயில்லாக் கொடுஞ்சொல்லு
தாங்காம ஒனத் தழுவியழ
அடுத்த பத்தில்
பொறந்திருச்சி அழகா ஒரு
சீதையம்மா...!!!

ஒனக்குமொரு கொறையிருக்க
ஒருநாளு ஒருமூல
நீர்க்கசிவா நீ அழுதுவெக்க..
புரிஞ்சிகிட்ட காக்காவொண்ணு
அரசமரப் பழமுரிச்சி
அதக் கடந்த வெதமுழுங்கி
அதிராமப் பிதுக்கி வெக்க .....

தத்தெடுத்த ஒம்பெளவு
தாலாட்டி வளத்ததுல
தளிர்விட்டிருச்சி மொத எல....!

மொட்டத்தல உச்சிமேல
பச்சக்குடுமி அரசமரம்..
ஒனக்குன்னு ஒறவு சொல்லி
ஒந்தல மேல ஒம்புள்ள...!
எந்தத் தாய்க்கு வாய்ச்சிருக்கும்
இப்படியொரு கொடுப்பினைடி...?
இப்ப நீ எங்களுக்கு
பச்சக்குடுமி உருட்டுப்பாற.....!

(படைப்பில் வரும் பெயர்களும் கதாபாத்திரங்களும் முழுக்க முழுக்க கற்பனையே... யாரையும் எந்த ஊரையும் குறிப்பிடுவன அல்ல...)

எழுதியவர் : சரவணா (23-Jan-14, 8:06 pm)
பார்வை : 89

மேலே