வாழ்க தமிழ்

முட்டைகள் பொரிந்தே குஞ்சுகள் வந்தது - தாயின்
சிறகுக்குள் அடங்கி தன் குளிர் வென்றது....!!
நினைவுக்குள் இருந்தே கவிதைகள் வந்தது-தமிழின்
நேர்த்தியில் அடங்கி என் சிந்தையும் வளர்ந்தது..!!
இமைகளை மூடி நான் இன்தமிழ் ரசித்தேன்
இன்பமே இன்பமே இன்பமே என்று.......!!!
படாரென்று ஒரு சத்தம்.......
நீ என்ன பெரிய அப்பா டக்கரா.......? அப்படின்னு
எப் எம்மில் ஒரு டமில் பாட்டு.....
சத்தத்தை கூட்டி இன்னும்
சந்தோசமாகப் பாடினாள் என் அன்பு மகள்....
நீ என்ன பெரிய அப்பா டக்கரா......?
திருப் புகழையும்
திரு வாசகத்தையும் படித்த எனக்கு
அப்பா டக்கர் என்ற வார்த்தைக்கு
அரும் சொற் பொருள் தெரியாமல்....
அங்கிருந்து எழுந்து சென்றேன்
வீட்டின் மொட்டை மாடிக்கு.......
பக்கத்து வீட்டு ஸ்டீரியோவில்
படு பயங்கரமாய் ஒலி எழுப்பியபடி கேட்டது....
மறுபடியும் அதே பாடல்......
நீ என்ன பெரிய அப்பா டக்கரா........
அருணகிரி நாதரே - இந்த
அடியேனுக்குப் புரிந்து விட்டது....
நீங்களும் கொஞ்சம் கேளுங்கள்....
டப்பாங் குத்தில்
ஒரு ட்ரம்ஸ் இசை கேட்கிறது இல்லையா ?
அது வேறு ஒன்றும் இல்லை......
உங்களது
முத்தை திரு பக்தித் திருநகைதான் - இப்படி
முட்டி மோதி தட்டுத் தடுமாறி நமது
முத்தமிழை வளர்க்கப் பாடுபடுகிறது.......
வாழ்க தமிழ்......!!!
என்னையும் அறியாமல்
என் உதடுகள் பாட ஆரம்பித்தது......
நீ என்ன பெரிய அப்பா டக்கரா..........