கறிக்கொழம்பு

மலையேறியம்மன் விழாக்காலம் கோலாகலமாகத் தொடங்கியது. பய பக்தியோடு அம்மனை நேர்ந்து கொண்டோரும் ஏனையோரும், ஊரையும், தெருவையும் வீட்டையும் சுத்தம் செய்து காப்பு கட்டும் நிகழ்வைத் தொடங்கினார்கள்.

காப்பு கட்டும் போது இருந்தவர்கள் மது எடுக்கும் போது கட்டாயம் இருக்கவேண்டும் என்பது இந்த சமூகத்தின் விதி. இதில் சாதி வித்தியாசம் ஏதும் கிடையாது. இது கிராமங்களின் பொதுப் பண்பாடு. இந்த நிகழ்வை அந்தந்த சமூகம் சார்ந்த பூசாரிகளே செய்து கொள்வார்கள்.

இந்தக் காலங்களில் காப்பு கட்டிய ஊரில் இருந்து யாரும் வெளியூர் செல்ல மாட்டார்கள். வெளியூரில் இருந்து இந்த ஊருக்கு யார் வந்தாலும் இரவு தங்கமாட்டார்கள். கணவன் மனைவி கூட நெருக்கமாக நின்று பேசிக் கொள்ளமாட்டார்கள். கொடுக்கலும் வாங்கலும் அந்தந்த சமூகத்திற்குள்ளேதான் நடைபெறும். இப்படியாக பதினைந்து நாள் கடுமையான விரதம் இருந்து அம்மன் விழாவைக் கொண்டாடுவார்கள்.

காப்பு அறுத்து மது காட்டும் விழா-தொடங்கியது. தஞ்சை மாவட்டம் பல கிராமங்களை உள்ளடக்கியதாக இருந்தாலும் பல நாடுகளை உள்ளடக்கியது. (நாடு பதினெட்டு கிராமங்களைக் கொண்டது). இதில் பிரித்யேகமாக ஒரு பெரும் கிராமம் மட்டுமே ஒரு நாடாகவும் இருக்கும். பதினெட்டு கிராம மக்களின் மகிழ்ச்சி வெள்ளத்தில் அம்மன் பவனி வருவாள். மேள தாளங்கள் பல இருந்தும் தாழ்த்தப்பட்ட மக்களின் தாரை தப்பட்டை தான் இந்த விழாவிற்கு அழகு சேர்க்கும்.

மது எடுக்கும் இந்த நிகழ்வு எல்லோர் மனதிலும் ஓர் இன்ப நிகழ்வாக இருந்தாலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டும் இன்பம் கலந்த வேதனைதான். மது எடுக்கும் பாதையும் இவர்களுக்கு தனி பாதைதான். பொதுப்பாதையில் இவர்கள் செல்ல இயலாது. கல்லும் முள்ளும் நிறைந்த இந்தப்பாதையை திருவிழா காலத்தில் மட்டுமே பயன்படுத்துவார்கள். திரு விழாக்காலங்களில் மது எடுத்து செல்வோர் நேராகச் சென்றால் கோவிலுக்கு மிக அருகிலேயே சென்று விட இயலும். இவர்கள் நேராகச் செல்ல இயலாத நிலையில் சற்று கூடுதலான தூரங்களை கடந்தே செல்ல வேண்டியிருந்தது.

மேலும் மது எடுக்கும் பெண்கள் அல்லது ஆண்கள் யாராக இருந்தாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மேலாடை அணிய முடியாது. ஆணோ, பெண்ணோ இடுப்புக்கு மேல் துணியே போடக்கூடாது. அப்படிப் போட்டால் சாமிக் குற்றம் வந்துவிடும் என்ற சொல் வழக்கு தான் இவர்களை இப்படியே கட்டிப்போட்டு இருந்தது. சிறு பெண்கள், மேலாடை இன்றி மது எடுத்துச் செல்லும்போது இவர்களின் தளிர்மேனியைக் கண்டு ரசிப்பதற்கு பல இள வட்டங்கள் கூடி நிற்கும். இது இந்தப் பகுதி மக்களுக்கு தங்களது தன்மான உணர்வை பாதித்தாலும் நேர்த்திக் கடனை கட்டாயம் செலுத்தியே தீரவேண்டும் என்ற பக்தி உணர்வு தான் தனக்கு மேலாடை இல்லையே என்ற உணர்வு அற்று போக செய்து இருந்தது. விழாவில் நகர்ப்புறத்தில் இருந்து வந்த ஏராளமான கடைகள் கோவில் சன்னதியையும், பக்கவாட்டுப் பகுதிகளையும் அலங்கரித்து இருந்தன. தின்பண்டக் கடைகள், கண்ணாடி வளையல் கடைகள், வண்ண வண்ண பூ போட்ட ரவிக்கை சேலை துணிகளும் விழாவை மெருகூட்டியிருந்தது. ஒவ்வோர் கடையாக சின்னப்பொன்னுவும், இவளின் கூட்டாளியும் வேடிக்கை பார்த்தவாறே சென்று கொண்டு இருந்தார்கள்.

சொக்கனுக்கு சின்னப்பொன்னு எப்போது திருவிழா கடைப்பக்கம் வருவாள் என ஏங்கி கொண்டு இருந்த, சின்னப்பொன்னுவை பார்த்ததும் ஏது செய்வது என்ன பேசுவது என்றே புரியவில்லை. சின்னப்பொன்னு தனது கூட்டாளியோடு வந்து இருப்பதை பார்த்த சொக்கன் பலத்த ஏமாற்றமும் கொண்டார். சரி என்ன வந்தாலும் பேசி விடுவது என்ற முடிவோடு பின் தொடர்ந்தார். இளம் பெண்கள் இந்த திருவிழாவிற்கென்றே மூன்று மாதத்திற்கு முன்பிருந்தே காசு பணம் சேர்க்கத் தொடங்கிவிடுவார்கள். இதைக் கொண்டுதான் யாரையும் எதிர்பார்க்காமல் தங்களுக்குத் தேவையானவற்றை வாங்கிக் கொள்வர்கள்.

ஏ..... சின்னப்பொன்னு சின்னப்பொன்னு என இருகலான குரலோடு தொண்டை நீர்வற்ற மெல்லிய குரலில் சின்னப்பொன்னுவை
அழைத்தாவரே சொக்கன் பின் தொடர்ந்தார். சின்னப்பொன்னு குரல் கேட்டு சட்டென திரும்பினாள். திரும்பியவள் தன்னை யாரும் கவனிக்கிறார்களா என்று நோட்டம்விட்டாள். யாரும் பார்க்கவில்லை என்பதும் தன் தோழிகள் ஒவ்வோர் கடையில் சென்று பொருள்களைப் பார்ப்பதைப் பார்த்தும் என்னய்யா என்று கேட்டாள் ஒன்னுமில்லே இந்த கண்ணாடி வளையல் ஓங் கையிக்கு நல்லா இருக்கும் வாங்கிக்கோ. அந்த மரிக்கொழுந்து பூதர மாவும் நல்ல மணக்கும்முன்னு சொல்லுவாக. அதையும் வாங்கிக்கோ என்றவாறு இந்தா புடி என்று தான் சேர்த்து வைத்திருந்த சில்லரை காசை முடிச்சோடு கொடுத்தார் சொக்கன். இத இதே கொண்டு போயி ஓங்க அக்கா தங்கச்சிகிட்டே கொடுய்யா அவளுவ வாங்கி போட்டுகிடுவாளுவோ என்று வெடுக்கென்று பதில் கூறினாள்.

இதை சற்றும் எதிர்பாராத சொக்கன் சின்னத்தா ஒன்னெ கட்டிகிற மொற மாமான் தானே நான். எத்தனை தடவே ஓம் வூட்டு பக்கம் ஓன்னே பாக்க நான் சும்மா சும்மா வர்ரேன். என்னெ ஏரேடுத்தும் பாக்கட்டங்கறே. இந்த கோயிலு வாசலுலே கூட பேச முட்டங்கிற இது நாயமா ஆனி மாசம் தானே நமக்கு கண்ணாலம் நடக்கப் போவுது என்று ஏக்கத்தோடு கேட்டார். ஆமா நான் வூட்டு பக்கமே உன்னோட பேசலியே. இந்த திருவிழா கடையிலே அதுவும் நாலுஊரு சனங்க பாக்க பேசுவனாக்கும். பாக்குறவோ கண்ணாலத்துக்கு முன்னாடியே தறிகெட்டு அலையுறான்னு சொல்லுவாவோ. யாங் காயி கப்பேன் நாக்கெ புடிங்கிட்டு நாண்டுக்குவாக, பேசாமே போய்யா யாங்கலுத்துலே தாலியே கட்டுனதும் பேசிக்கிடுவே. கெனத்து தண்ணியே ஆத்து வெள்ளம் அடிச்சிட்டு போயிடாது என்று கூறவும், சின்னத்தா கூட்டாளிகள் தேடவும் சரியாக இருக்கவே சட்டென புறப்பட்டாள். இது சின்னாத்தாவிற்கு மட்டுமல்ல இந்த சமூகம் பெண்களுக்கு இப்படிதான் விதிகளை வகுத்தளித்துள்ளது.

சின்னத்தா சிவந்த மேனியழகு கொண்டவள். வெற்றிலை காரை தொண்டையில் இறக்கும் போது தொண்டையின் பச்சை நரம்புகள் கூட நன்றாக தெறியும் என்பார்கள். இவளின் கட்டுமஸ்தான உடல் காடு கழனியில் உழைத்த உழைப்பின் சாரம் கெட்டி பட்டுப்போன சரீரத்தில் மிகத் தெளிவாகவே தெரியும் தன் வெள்ளை உடலை மறைக்க தனது சேலையின் ஒற்றை மாராக்கைத் தவிர இவள் மேலாடை அணிய முடியாது. இது மேல் சாதியினரின் எழுதப்படாத விதி. இருந்த போதிலும் இருகக் கட்டிய இவளின் பதினாறு முழ சேலை இவளின் அழகிற்க்கு மெருகூட்டவே செய்திருந்தது. இவரை காண்பவர்கள் ஏதாகிலும் பேச்சு கொடுக்கும் பாவனையில் இவளிடம் பேசாமல் செல்ல மாட்டார்கள்.

கோவில் திருவிழாவில் எல்லா மக்களும் கலந்துக்கொண்டாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களுக்கான இடத்தில் தான் இருக்க வேண்டும். மது எடுத்து நடக்கும் போதுகூட இவர்கள் பொதுப் பாதையில் செல்லக்கூடாது. இவர்களுக்கான பாதையும் தனிப் பாதை தான். இந்தப் பாதையில் மேல் சாதியார் யாரும் நடமாடமாட்டார்கள். மீறி நடந்தால் பற தீட்டு ஒட்டிக்கொள்ளும் என சொல்லிக்கொள்வார்கள்.

மது எடுக்கும் தாழ்த்தப்பட்ட பெண்கள் தங்கள் பக்தியின் பொருட்டே தன்னுடைய மேல் உடம்பை மறைப்பதில்லை. ஆனால் இந்த பக்தியை, மேல் சாதியைச் சார்ந்தவர்கள் ஒரு விரசம் தட்டிய காமப் பார்வையோடு தான் கண்டுகளித்தனர். இதில் அரசு மது என்று கோவில் பிள்ளை (கோவில் பூசாரி) குடும்பம்தான் மதுவை எடுத்து வந்து தாழ்த்தப்பட்ட மக்களிடம் கொடுப்பார்கள். இதைக் கொண்டு வரும் மேல் சாதி பெண் நான்கு புறமும் மறைத்து மேல் ஆடை அணிந்து தான், கொணர்ந்து தாழ்த்தப்பட்ட பெண்களிடம் கொடுப்பார்கள். தாழ்த்தப்பட்ட பெண்கள் தலையில் வைத்த மதுக் குடத்தை தனது இரு கைகளாலும் உயர்த்தி பிடித்து வர வேண்டும்.

திருவிழா நடக்கும்போது இந்த ஊரைச் சார்ந்த குடும்பங்கள் வெளியூர்களில் இருந்தாலும் சரி அல்லது வெளிநாடுகளில் இருந்தாலும் சரி அனேகமாக அனைவரும் வந்து விடுவார்கள். சில குடும்பங்கள் சிங்கப்பூரிலிருந்தும் வந்திருக்கிறார்கள். மது எடுக்கும் முறை இந்த சிங்கப்பூரில் இருந்து வந்த குடும்பத்திற்கு கிடைத்தது. இவர்களுக்கு நவீன நாகரிகத்தை சிங்கப்பூர் கட்டமைத்து கொடுத்து இருந்தது. எனவே தனது சொந்த மண்ணின் மரபு எவ்வளவு கேலிக்கூத்தானது என்பதை உணர்ந்து இதை மாற்றும் முயற்சியில் ஈடுபடலாயினர்.

எனவே தனது மகளுக்கு அழகு ஆபரணங்களை பூட்டி பட்டு பாவாடை சட்டையோடு மது எடுக்கச் சொல்ல வேண்டும் என்ற முடிவோடு இருந்தனர். இதை தெரு பெரியவர்களிடம் கூறினால் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். என்பதை அறிந்தே யாரிடமும் கூறவில்லை. மது எடுக்கும் நேரம் வந்ததும் தனது மகளை விக்ரகத்தை போல் அலங்காரம் செய்து மதுவை எடுத்து வைத்தார்கள். இதை சற்றும் எதிர்பாராத மக்கள் திக்குமுக்காடிப் போயினர். இந்த பெண்களின் மேல் அங்கங்களைக் கண்டுகளிக்கும் ஆவலோடு வந்த பல இளவட்டங்கள் ஏமாந்து போனார்கள். இந்த குடும்பம் மேலும் ஓர் புதுமையைச் செய்தார்கள்.

காட்டுப்பாதை என்பது பல தூரங்களைக் கடந்து கல்லிலும் முள்ளிலும் நடந்துதான் கோயில் வாசல் செல்லவேண்டும். இவர்கள் எது நடந்தாலும் எதிர்கொள்வது என்ற முடிவோடு மேல் சாதியார் செல்லும் நேர் பாதையில் சென்றார்கள். சென்றவர்கள் மது எடுப்பது தாழ்த்தப்பட்டவர்கள் என்பதைத் தவிர வேறு எந்த அடையாளத்தையும் காண இயலவில்லை. மேல் சாதியார் யாரும் இவர்களை எதிர்க்க முன் வரவில்லை. இனி தடுத்தாலும் ஏதும் செய்யமுடியாது என்பதால் ஊர் கூடி இவர்களிடமும் ஓர் வேண்டுகோள் வைத்தது. நீங்கள் எப்போதும் வரும் பாதையில் எப்படி வந்து கொள்ளுங்கள் நாங்கள் ஏதும் சொல்லவில்லை. இந்த ரோடு வழியாக வர வேண்டாமெனக் கூறவும், இவர்களும் ஒரு சில விசயங்களை விட்டு கொடுக்கும் நோக்கோடு தங்களின் பழைய பாதை வழி செல்வது என ஏற்றுகொண்டார்கள்.

சின்னப்பொன்னு, சொக்கன் திருமணம் பேசிய படியே நடந்து முடிந்தது. சொக்கன் தனது குடி கள்ளரிடம் விவசாய வேலை செய்து வந்தார். சொக்கனின் குடி கள்ளர்க்கு சின்னாத்தாவின் அழகில் ஏற்கனவே மையல் கொண்டிருந்தார். தனது குடி பறையன் சொக்கன் சின்னாத்தாவை மணந்து கொண்டதால் அடிக்கடி பார்த்தும் பேசவும் தொடங்கினார். தனது குடி கள்ளன் பேசிய பேச்சையெல்லாம் சின்னாத்தா வெகுளித்தனமாகவே நினைத்து கொண்டாள். ஓர் நாள் மதியம் காட்டு வேலையை முடித்து தனியே நடந்து வந்தாள். இவளின் வருகையை எதிர்பார்த்திருந்த குடி கள்ளர் வழி மறித்து என்ன புள்ளே வேலேயெல்லாம் முடிஞ்சிருச்சா இல்லே பாக்கியிருக்கா என கேட்டவாரே அருகில் வந்தார். வந்தவரின் நோக்கமே இவளை மறைவான இடத்திற்க்கு கொண்டு சென்று தன் எண்ணத்தை ஈடேற்றி கொள்ளலாம். தான் இவளை கையை பிடித்து இழுத்து சென்றால் தனது கள்ளன் தானே என்று இதை வெளியில் யாரிடமும் சொல்ல மாட்டாள் என்ற சாதி ஆதிக்கம் இவரை இப்படி எண்ணத்தோன்றியது. இதையறிந்த சின்னாத்தாள் சுதாரித்து கொண்டு அய்யா போயும் போயும் இந்த சேதியே நேத்து முந்தாநா சொல்லி இருக்கக்கூடாது. நான் வந்துருப்பேனே இப்போதான் நான் வீட்டுக்கு தூரமானேன். ரெண்டு நாளு ஆவட்டும் என்றவரே வீடு நோக்கி வேகமாக நடந்தார்.

அன்று இரவு தனது கணவரிடம் நடந்த சம்பவங்கள் அனைத்தையும் சின்னப்பொன்னு கூறி அவனிடம் இருந்து தான் தப்பி வந்த கதையையும் கூறினாள். இதைக்கேட்டுக் கொண்டிருந்த சொக்கன் மிகுந்த வேதனையும் ஆவேசமும் அடைந்தார். இந்த கோபத்தை வெளிப்படுத்த நேரடியாக ஏதும் இவர்களால் செய்ய இயலாது. இதனால் சொக்கன் இரவு முழுவதும் தூக்கம் இன்றி அவதியுற்றார். கடைசியாக ஓர் யோசனை தோன்றவே நிம்மதியாக உரக்கத்தை தழுவினார். காலை நேரம் சின்னபொன்னு வாசலில் சாணம் தெளித்து தெருப்பக்கத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தாள். சின்னப்பொன்னுவை அழைத்து நடந்த சம்பவத்தை மீண்டும் சொல்லுமாறு கேட்டார். சின்னபொன்னு கோபம் கொண்டவளாக யாய்யா மேலே உனக்கு நம்பிக்கை இல்லையா பொழுது விடிஞ்சதும் உனக்கு இந்த ஓசேனே தான் வருதா என்று கோபத்தோடு கேட்டாள்.

அடியாண்டி புரியாமே பேசுரே அவுக நடக்குற பாதையிலே நாம நடந்தா தீட்டு அவுங்ககுளத்துலே நாம இறங்குன்னா தீட்டு. அவுங்க திண்ணெ பக்கம் போனாலும் தீட்டுன்னு விறட்டுறாக யாம் பொண்டாட்டிய மட்டும் பெண்டாள நெனேச்சவனே சும்மா உடக்கூடாது புள்ளே. அதுக்காவ தான் கேட்டேன் என்றார். இதைப் புரிந்து கொண்ட சின்னப்பொன்னு யோவ் நீ யாம் மேலே சந்தேகப் பட்டுட்டியேன்னது தாய்யா பேசுபுட்டே என கூறி அப்படியே நடந்ததை விவரித்தாள்.

சின்னப்பொன்னு நா சொல்றதே கேளு நீ ரெண்டு நாளும் அவென் கண்ணுலே படாதே வேலெ சொல்ல நம்மோட தெரு பக்கம் தானே வரணும் நான் மத்ததே பாத்துக்கிறேன். நீ மட்டும் அவென் கண்ணுலே படாதே என்றார் நம்மோ சாலுலே கிடக்கிறே கறியை பொய்யையே போடலாமே உட்டுடுமா என்றார். (சாலு பெரிய மண் பானை பொய்யை கனல் நெருப்பு) இவர்கள் தங்கள் மேல் சாதியார் தெருவில் உள்ள அனைவரும் பங்கு போட்டுக் கொள்வார்கள். இந்தக் கறியை பெரிய பெரிய சால்களில் போட்டு நெருப்பை மூட்டி வேக வைத்து கொள்வார்கள். தேவைப்படும்போது கொழம்பு வைத்து கொள்வதுதான் இவர்களின் வழக்கம். இந்தகறி மூன்று நாளோ அல்லது நான்கு நாட்களுக்கோ வைத்துக்கொள்வார்கள். இரண்டு மூன்று நாட்களாக சின்னப்பொன்னுவை பார்க்காத மேல் சாதியா அவளைக் காணும் ஆவல் மேலி சின்னப்பொன்னுவை தேடிவந்து ரோட்டில் நின்று சின்னப்பொன்னுவை குரல் கொடுத்து கூப்பிட்டார். சொக்கன் சுதாரித்துக்கொண்டு தனது மனைவியை குரல் காட்ட வேண்டாம் எனக் கூறி இவரே பதில் கூறினார். அய்யோ இப்போதான் கொல்லே காட்டு பக்கம் போனா இப்ப வந்துடுவா செத்த நாழி கழிச்சி வாங்க அவளெ இருக்க சொல்றேன் என்றார். மேல் சாதியார் மிகுந்த சந்தோசம் கொண்டவாரே திரும்பிச் சென்றார். சொக்கன் தன் மனைவியிடம் ஏ புள்ளே அந்த கறி கொழம்பே பொய்யை காட்டி கொஞ்சம் கறியும் கொழம்பும் இப்படி கொண்டா என்றார்.

ஏய்யா சோறு வாண்டாம் கறி தான் வேணுமா என்றார். இல்லே புள்ளே கொஞ்சம் பனங்கள்ளு வாங்கி வெச்சிறுக்கேன். அதே தொட்டுக்க தான் என்றார். கறி கொழம்பு சூடானது கொல்லை பக்கம் வைக்கச் சொன்னார். சற்று நேரம் கடந்த பின் ஆவலோடு சின்னப்பொன்னுவை அழைத்தார். வீட்டுவாசலில் நின்று எதிர்க் குரல் கொடுத்தாள் சொக்கன். யான்னு கிட்டேதான் போயி கேளேன் என்றார். ஆமா அவென் முகத்திலே போயி முழிக்கனுமாக்கும் என்றாள். நாங்களெல்லாம் இருக்கும் போது என்ன பயம் போ என்றார். சின்னபொன்னு என்னங்கய்யா என்றவாறு கேட்டாள் மிக நெருக்கமா வந்து நின்று பேச முற்பட்டார். இதை எதிர் பார்த்த சொக்கன் வேகமாக கொல்லை புறத்தில் இருந்த மாட்டு கறி சட்டியை இளம் சூட்டோடு இருந்ததை அப்படியே கொண்டுவந்து யாண்டா பறயன் பள்ளச்சின்னா அவ்வளவு இளக்காரமா? யாம் பொண்டாட்டியெ படுக்க கூப்பிட்டியாமே பறப் பய பொண்டாட்டின்னா நீ எப்படி வேணுமன்னாலும் நடந்துக்குவியா என்று பேசியவாறே மாட்டுக் கறியோடு கொழம்பையும் சேர்த்தே தலையில் கொட்டினார். மாட்டு கறியின் வாசம் கொஞ்சம் கூட அறியாத மேல் சாதியார் இந்த வாடை பிடிக்காமல் கொமட்டி கொண்டே குளத்து பக்கம் ஓடினார். குளத்தில் விழுந்து மூழ்கி எழுந்தவர் ஆவேசம் கொண்டவராய் கரையேறி தாக்கும் நோக்கோடு சென்றவர் இதை எப்படி வெளியே சொல்லமுடியும். வெளியே எனது தலையில் மாட்டுக் கறி கொழம்பை கொட்டி அவமான படுத்தி விட்டான் சொக்கன் என்று சொல்வது தனது குலத்துக்கே மானக்கேடு என்ற நோக்கோடு வெளியேயும் சொல்ல முடியாமல் மனது உள்ளேயும் வைத்துக்கொள்ள முடியாமல் வெட்கி தலை குனிந்தபடியே சின்னப்பொன்னுவை இனி கனவிலும் கூட நினைப்பது தப்பு என தன்னையே நொந்துகொண்டார்.

சொக்கன் தன் மனைவிக்கு நேர்ந்த அவமானத்தை யாருக்கும் தெரியாமல் துடைத்துவிட்டோம் என்ற சந்தோசத்தில் நம்ம குடிகள்ளனெ இப்படி செஞ்சது சரி; இல்லாட்டி ஊரெ கூட்டி நாம்மோளே கட்டி வெச்சிபுளியாஞ்சிம்பாலே அடிப்பாங்கே இதெ இவன் யாருகிட்டேயும் சொல்லவும் முடியாது பேசவும் முடியாது என்ற சந்தோசத்தில் கணவனும் மனைவியும் தனது வீடு நோக்கிச் சென்றார்கள்.

எழுதியவர் : கணேஷ் கா (25-Jan-14, 12:02 am)
பார்வை : 312

புதிய படைப்புகள்

மேலே