மண்ணான் என்ற வண்ணான்

அழுக்கு கழுவும் எம்மனங்களுக்குள்
அழுக்கு இல்லை
ஆண்டாண்டு காலமாய் அவலப் பார்வை
இன்னும் போகவில்லை .
அவிழ்த்த ஆடைகளின்
அழுக்குகளை மண்ணியதால்
மண்ணான் ஆனோம் -பின்
வண்ணான் ஆனோம்
பண்டிகை காலத்து மிச்சங்களை
பார்த்து தானம் தருவது
பலபேருக்கு கெளரவம்
மதம் கடந்த
ஜாதி கடந்த நாங்கள்
பொதுவுடைமை ஊழியர்கள்
மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து
சலவை செய்யும் சேவியர்கள்
விசால மனங்களைத் தேடி
காலம் காலமாய் எங்கள் பயணம்
விளிக்கும் தோரணையில்
விஸ்வரூபங்கள் வந்து போகும்
கொல்லைப் புறத்து தொடர்புதான்
எங்கள் தகவல் மையம் .
முற்றத்து முன்வாசல் இன்னும் முறைக்கத்தான் செய்கின்றன
கனத்த இதயம்
மேலும் மேலும் காயப்படும் .
கண்ணீரைத் துடைத்து
அழுக்கை தோள் சுமக்கும் .
உங்கள் ஆடை அழுக்குகளை
நாங்கள் சுத்தம் செய்தோம்
உங்கள் அக அழுக்குகளை
யார் சுத்தம் செய்வார்

.

மண்ணுதல்=கழுவுதல் .

எழுதியவர் : சுசீந்திரன் (25-Jan-14, 10:27 am)
பார்வை : 101

மேலே