மூச்சை நிறுத்தா கவிதை

என் உள்ளக் கவிதை
புரட்சி உள்ள கவிதை!
அந்த அழுக்கு நிலவை
அழுத்திச் செய்யும் சலவை!

தீயில் வந்த கவிதை!
என் சொந்தக் கவிதை!
நீதி சொல்லும் கவிதை
சூதை கொல்லும் கவிதை!

இதயக் கதவை மெல்ல
இதமாய் தட்டும் கவிதை!
எதையும் நேராய் சொல்லி
நெஞ்சை நிமிர்த்தும் கவிதை!

தாயின் மேன்மை போற்றி
தந்தை சொல்லை ஏற்றி
ஏனைய உறவுக்கெல்லாம்
பாலம் போடும் கவிதை!

எல்லாத் துறையும் கவிதை
ஆட்சி செய்யும் இங்கே
கவிதை இல்லா உலகம்
காற்று இல்லா உலகம்!

நெஞ்சை அள்ளும் கவிதை
காதல் சொல்லும் கவிதை!
அன்பை எங்கும் சொல்லி
உலகை வெல்லும் கவிதை!

சாதி என்ற பேயை
நாட்டில் ஓட்டும் கவிதை!
சாதிக்கச் சொல்லி உன்னை
நாளும் தூண்டும் கவிதை!

மழையாய் அழும் கவிதை
விதைபோல் விழும் கவிதை!
உழைக்கும் மக்கள் நெற்றி
வியர்வை துடைக்கும் கவிதை!

ஒருவன் ஒருவன் இறைவன்'
'உன்னால் முடியும் தம்பி'
உலகில் சொன்னது எல்லாம்
கவிதை! கவிதை! கவிதை!

நாளை வாழ்வை எண்ணி
தவிக்கும் ஏழை கெல்லாம்
இன்பம் செல்வம் கல்வி
குவிக்கச் செய்யும் கவிதை!

வறுமை போக்கும் கவிதை
வளமை சேர்க்கும் கவிதை!
முரசைக் கொட்டும் கவிதை
மூச்சை நிறுத்தா கவிதை!

எழுதியவர் : அப்துல் வதூத் (26-Jan-14, 2:45 am)
பார்வை : 257

மேலே