மனம் திறக்கும் மரம்-கே-எஸ்-கலை

வெளிச்சத்தையும் நீரையும்
அயனாக்கம் செய்து
பச்சையமாக்கி - மனிதனுக்கு
"வெளிச்" சத்தையும்
சுபீட்ச்சத்தையும்
பயனாக்கமாக்கி
விறகாகியும் பசிதீர்க்கும்
பசுமையின் விலாசங்கள் !

உறக்கமில்லாமல்
ஒற்றைக்காலில் நின்று
ஊரைக் காத்தாலும்,
இரக்கமில்லாமல்
கற்றைக் குண்டுகள் மென்று
சாம்பலாக்கிப் போனாலும்
மீண்டும் மீண்டும்
உயிர்த்துக் கொண்டிருக்கும்
பச்சைய பீனீக்க்ஸ்கள் !

முற்றங்களில்
தெருக்களில்
மொட்டை மாடிகளில்
தொட்டிகளில்
சாடிகளில், சட்டிகளில்
நிறுத்தி வைக்கப் பட்டிருக்கும்
நிரந்தர கைதிகள் !

அறிவால், ஆசையால்
தேவையால், தேடலால்
ஒவ்வொருநாளும்
கற்பழிப்புச் செய்யப்படும்
கடவுளர்....!

அபயம் தேடப் போய்
அபாயம் தேடிக் கொள்வது
அற்ப மனிதனின் புத்தி !
அதற்கு...
அன்றுமுதல் இன்றுவரை
ஆதாரமாய் காடுகள் !

மரங்களுக்கு
அறிவில்லை என்பது
எல்லோருக்கும் தெரியும்
மனிதனுக்கும் என்பது
யாருக்கு தெரியும் ?
================
(படத்தில் இருப்பது எங்கள் வீட்டு முற்றம்-ஊரில்)

எழுதியவர் : கே.எஸ்.கலை (27-Jan-14, 9:18 am)
பார்வை : 140

மேலே