வைரமுத்து வெண்பாக்கள் - விவேக்பாரதி
நிழல்களில் ஆரம்பம் தீங்கவிச் சாரல்
விழலற்ற பைந்தமிழ்த் தென்றல் - எழச்செய்யும்
பாக்களுக்குச் சொந்தக்கா ரன்இவன் வீசிய
பூக்களிலும் ஆடும் தமிழ் !
தமிழ்கவிப் பேரரசன் நின்றோடும் வைகை
அமிழ்கவிகள் தந்தவன் வாயின் - உமிழ்போல்
சுரந்திடும் முத்தமிழ் ! நாவினில் பாட்டும் !
கரந்தபால் உள்ளம் அழகு !
அழகுபொற் காவியங்கள் தீட்டிய வைரவாள்
பழகுதமிழ் பாட்டுக் காரன் - பழச்சுவையின்
தித்திக்கும் தெள்ளமுதைப் பாட்டில் எழுதிவிட்டான்
எத்திக்கும் ஓங்கும் புகழ் !
புகழென்னும் பொன்னை உடலில் தரித்த
இகழ்ச்சியில் தாழாக் கவிஞன் - சகத்தின்
அகத்தினில் ஊரும் தமிழிசை ஒன்றால்
திகழ்கிறான் காலத்தை வென்று !
வென்றான் அரசுதரும் பத்மபூஷன் ! மக்களிடை
நின்றான் தனதுகவி தையாலே ! - என்றென்றும்
வாழட்டும் வைரமுத்து பாடல் ! நிலவுவரை
நீளட்டும் அன்னான் நிழல் !
(கவிஞர் வைரமுத்து "பத்மபூஷன்" விருது பெற்றது அறிந்து வாழ்த்தியது)