நான் கவிஞன்
கவிஞன்..
வார்த்தைக் கோர்த்து
வானவில் சமைப்பவன்
கற்பனை தேரினில் காற்றை
துளைப்பவன்..
அவன் எதிர் தெரிவதை
கவிகண்ணில் பார்ப்பவன்
பழகிய பொருளுக்கு புதுமுகம் தருபவன்
அழகிய உலகிற்கு அறிமுகம் செய்பவன்!!
அணுக்கள் தொடங்கி அண்டமும்
அவனது பாட்டின் கருக்கள்,
எதையும் பகுத்து
கவிதை தொகுத்து
உலகிற்கு அளிப்பவன்...
சுகமாய் காதல் கவிதை பெய்வான்
கவி அம்பாலே மனதைக் கொய்வான்
அன்பையும் புனைவான்
அபயமும் தருவான்..
சற்றே யாரும் சுயத்தை தொட்டால்
தீ போல் உடனே சுடுவான்
சற்றே யாரும் உள்ளம் தொட்டால்
பனி போல் உருகி விழுவான்..
பன்னீர் வாசனைதான்..
எத்தனை பேர் அறிவார்
அது ரோஜாவின் கண்ணீர் என்று..
கவிஞனும் மனிதன் தான்
வெளிவரும் வார்த்தைகள்
அவன் இதயத்தின் கண்ணீர் என்று...
இதயக்கருவினை வார்த்தை
குழந்தையாய் விரல்வழி
பிரசவிக்கும் வேதனை
அறிந்தவன்.
மனிதர் மனதினை,
அவரின் செயல்தனை,
பக்குவம் புரிந்து பகர்ந்திட
தெரிந்தவன்...
கட்டிப்போட்டால் கைகால் அடங்கும்
கவிதை அடங்குமோ??
வெட்டிப்போட்டால் புவியில் வளரும்
மமதை முடங்குமோ?
அவன்வரிகள்!....
சில வருடும் தென்றலாய்,
சில நெருடும் முட்களாய்...
சில துளைக்கும் ஈட்டியாய்..
யார் பொறுப்பு?
கவிஞன் பேனா மயிலிறகாவதும்
மயில் கழுத்தறுப்பதும்..
மனதில் பட்டதை சட்டென
உரைப்பான்
பொய்யென தெரிந்தால் அதையே
மறைப்பான்..
மொத்தத்தில் கவிஞன் குழந்தை மாதிரி...
யாரும் அவனை குறை சொல்லாதீர்..
ஏனெனில் ......
..............
நானும் கவிஞன்!!