பெத்தமனசு

கோயில்பல சுற்றிவந்து
குளங்குளமா குளிச்சி வந்து
புள்ளவரம்வேணுமுன்னு என்மகனே-நாங்க
போய்வராத கோயிலில்ல என்மகனே..

கற்பனைய நெஞ்சில் சுமந்து
கனவுகளை கண்ணில் சுமந்து
உன்னநான் கருவில்சுமந்து தாயானேன்-கண்ணே
உறவெனும் கனிகொடுக்கம் பூவானேன்..

மறுவேள உணவுமில்ல
மாத்திகட்டசேலயில்ல
வயித்துல துணியகட்டி கண்மணியே-உந்தன்
முகம்பார்த்தே பசிமறந்தோம் உண்மையிலே..

குளிருன்னை வாட்டுமுன்னு
கொதிக்குமடாஎன்மனசு
தளிருடல் நோகுமுன்னு
தவிக்குமடா தாய்மனசு
கந்தைசீலைபோதாதுன்னு குளிருக்கு-என்
நெஞ்சுசூட்டில் உறங்கவச்சி பாா்த்திருந்தேன்..

பத்துமாசம் சுமந்துஉன்னை
பாங்குடனே பெற்றுவளா்த்து
கண்ணையிமை காப்பதுபோல்காத்திட்டோம்-கல்வி
அறிவும்தந்து கரையும் உன்னைச்சேர்த்திட்டோம்..

பெத்தகடன் செஞ்சீங்கன்னு
மத்தகடன் மறந்ததென்ன நீ
பெத்தகடன் செஞ்சீகன்னு
மத்தகடன் மறந்ததென்ன
வாழ்க்கைத்துணை வந்ததுமே என்மகனே-எங்கள
வழித்துணையா ஆக்கிபுட்டே என்மகனே..

நாளொரு விரதங்கொண்டு
நடந்தும்கூட கோயில்சென்று
புள்ளவரம்வேண்டி கேட்டேன் மடிபிச்சே-அந்த
புள்ள எங்கள எடுக்கவிட்டான் தெருபிச்சே.
.
உடலும் கந்தையாச்சு
உசிருங்கூட ஒடுங்கிப்போச்சு
நாதியற்ற நாயப்போல கதியில்ல-நாங்க
நடைபிணமா அலையுறோமே தெருவிலே..

கருவில் நீ உதைக்கும்போது
கனத்ததடா தாய்மனசு
மாருல உதைக்கும்போது
மகிழ்ந்ததடா தந்தைமனசு
பிரசவ வலியும்கூட பெருசில்லே-நீ
பெத்தமனசில உதைச்சதப்போல் வலியில்லே..

மனசும் வேண்டுதடா
மகனேநீ நல்லாருக்க
மாருவத்திப் போனாக்கூடஎன்மகனே-எங்க
மனசும் வத்திப்போகவில்லே என்மகனே..

பேதம் பாா்க்கவிலிலே
பெத்தமனசும் தாங்கவில்லே
உனக்கொரு புள்ள பொறந்தா சொல்லிவிடு-நாங்க
ஓடிவந்து பிஞ்சுமுகத்த பாத்துக்கிறோம்..
ஓடிவந்து பிஞ்சுமுகத்த பாத்துக்கிறோம்..
ஓடிவந்து பிஞ்சுமுகத்த பாத்துக்கிறோம்..!!!

எழுதியவர் : அசோகன் (4-Feb-14, 8:48 pm)
பார்வை : 74

மேலே