பிளவின் மேல் ஒரு பாலம்
பெண்ணே என் ஆன்மா தரையில் உள்ளது
கண்கள் மட்டும் அந்த தூரத்து நிலவில்
எந்திரம் போலெ நிலைத்து நிற்கையில்
சந்திரகாந்தமும் ஈர்க்கத் தோற்றதே!
நான் இந்த பாதாள பள்ளத்திலே
நீயோ தூரத்து நிலவினிலே
வான்வெளி இடையினில் பிளவென்றால்
இடையினிற் தேவை ஒரு பாலமன்றொ!
இணைக்க ஆசித்தேன் இன்று முதல்
இணைப்புச் சங்கிலிகள் ஏதென்றால் -அவை
நினைவில் நின்றாடும் நினைவலைகள்
நினை வலைப்பேன் என் நினைவாலே!
நினைவில் நின்றாடும் நினைவலைகள்
இணைப்புச் சங்கிலியாய் மாறி விட்டால்
நிலவும் வானமும் என் கையருகே
நிலவுப் பெண்ணே நீ என்னருகே!
பாலத்தை நினைவால் கட்டிடுவேன்
காதல் எனும் ஒரு கவண் கொண்டு -பின்
காலத்தை அதில் கயிறாக்கி- இந்த
ஞாலத்தை உருட்டி வீசிடுவேன்.!
காலமும் ஞாலமும் கடந்து விட்டால்
கோலங்கள் போடுவார் நம் மணவறையில்
ஓ, ஓ, இதுவும் சாத்தியமோ என்று
என் மீதே எனக்கு ஆத்திரமாம்.
கண்ணைத் திறந்து பார்க்கையிலே- நிலவுப்
பெண்ணே உனை நான் காணவில்லை- இந்த
கண்ணும் அழிந்து போகட்டுமே- உந்தன்
எண்ணத்தில் காலத்தை ஓட்டிடுவேன்.