சுவர் இல்லாத சித்திரம்

என் இருட்டடிப்பு காகிதத்தில்
எஞ்சிய வார்த்தைகள் படிக்க
இன்னும் கொஞ்சம் அவகாசம் தேவை

கருப்பு சிகை வெள்ளை சிகையாகி
இப்போது காணாமல் போய் விட்டது
எஞ்சிய கடமைகளுக்கு
எப்போது நான் முற்றுப் புள்ளி வைப்பது?

மலர் படுக்கையில்
முட்கள் பரப்பியதுபோல்
நாட்கள் கழிகிறது
நலிந்த முனகல்களோடு

அகவை கூடியும்
அனுபவங்கள் வந்தும்
அடுக்களை அகப்பை
எப்போதும் உலர்ந்தே இருக்கிறது.

சிரித்துப் பேசியே
என் கைவாக்கை வாங்கிச் சென்றவன்
சிங்கார காரில் கோடியில் புரள்கிறான்
நானின்னும் தெருக் கோடியில் .

விலாசம் அழிந்த தபால்
வீடு வந்து சேராதது போல்
என் வீட்டுக் கதவை
எந்த வசந்தமும் தட்டவில்லை.

மலை உச்சி வந்து
மரணப் பள்ளத்தாக்கு நோக்குகிறேன்
மரணிப்பது தீர்வு ஆகாததால்
மறுபடியும் திரும்புகிறேன் போராட

இப்போது என் கையில்
எப்போதும் ஒரு தீப்பந்தம்
மனிதனைத் தேடி
மறுபடியும் என்னைத்தேடி .......

எழுதியவர் : சுசீந்திரன். (10-Feb-14, 9:11 pm)
பார்வை : 137

மேலே