மதம் மாறுதல்

நம்பிக்கையின்மீது
நம்பிக்கை இல்லா
தீர்மானம் கொண்டுவருதலில்
நம்பிக்கைத் துரோகி ஆகிறாய்
நம்பி இருந்ததை கைவிட்டு
நம்பி வேறொன்றில்
கைவிடுவதால்.

கடவுளையும் ஏமாற்றுவது
என்று தீர்மானித்த பிறகு
தழுவுதலில் நின்று
நழுவுதல் கொள்கையில்
இக்கரைக்கு அக்கரைப் பச்சை
என்பதை ஊருக்கு வெளிச்சம் போடுகிறாய்.

தாவும் கலை பயின்று
ஒன்றிலிருந்து
இன்னொன்றிற்கு
செல்கையில் மதங்களையும்
நீ அரசியல் கட்சியாக்கி விடுகிறாய்!

நம்பிக்கை இல்லை என்ற
நம்பிக்கையை நம்பும்
நாஸ்திகனிலும் பார்க்க
நம்பிக்கை வைத்து
நடுவில் பிரியும் நீ
பாம்பைப் போல
பழைய சட்டையை கழற்றி
புதியதை அணிந்தாலும்
உன்னிலுள்ள விசுவாசமானது
பாம்பையும் கொல்லும்
பச்சோந்தி வகை.!

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (11-Feb-14, 2:31 am)
Tanglish : matham maaruthal
பார்வை : 144

மேலே