பிறந்த நாள் –சிறு கதை-பொள்ளாச்சி அபி

நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை,எனது மகள் ஷாலினிக்கு பிறந்தநாள்..!

கடந்த நான்காண்டுகளாக,நாங்கள் அவளுக்காக கொண்டாடிய பிறந்த நாட்கள்,எனது வேலையைப் போலவே,மிகச் சாதாரணமாகத்தான் இருந்தது.

பக்கத்து வீட்டிலிருந்து வரும் சில குழந்தைகள் புடைசூழ, நானும்,எனது மனைவி,மற்றும் எங்கள் இருவரின் அம்மா, அப்பாக்களோடு,மாலையில் துவங்கும் பிறந்தநாள் கொண்டாட்டம், ஷாலினிக்கான ஒரு புது டிரஸ்,அரைக் கிலோ அளவில் ஒரு கேக்,கொஞ்சம் சாக்லேட்டுகள், சிம்பிளாக ஒரு டிபன்..என முடிந்துவிடுவதுதான் வழக்கமாக இருக்கிறது.

கடந்த வாரம் எனது அலுவலகத்தில் எனக்கு பதவி உயர்வும் கிடைத்ததால்,அதனையும் சேர்த்து, கொண்டாடும் வகையில், ஷாலுக் குட்டியின் பிறந்தநாளை இந்த வருடம் அமர்க்களப் படுத்திவிட வேண்டுமென்று எனக்கு நான்கு நாட்களுக்கு முன்னரே தோன்றிவிட்டது. மனைவி அகிலா விடமும் சொல்லியிருந்தேன்.

“உங்களுக்கு சிரமமில்லாத பட்ஜெட்டுனா.., எனக்கென்ன ஆட்சேபனை..?” என்றாள் அகிலா.

வழக்கத்துக்கு மாறாக ஷாலினிக்கு மட்டுமின்றி, குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் புதிய உடைகள் வாங்க,சில ஆயிரங்களை தாராளமாக மனைவியின் கைகளில் திணித்துவிட்டு, மாலையில் கேக் வெட்டியபின் நடைபெறும் விருந்தில்,நண்பர்களின் வசதிக்காக சைவம், அசைவம் என இரண்டு வகைக்கான மெனுவையும் சொல்லி விட்டேன்.

அகிலாவிடம் திட்டத்தை மட்டும் சொல்லி விட்டால் போதும்..கச்சிதமாக நமது கையைக் கடிக்காமல்,முடிந்தவரை சிறப்பாக எதனையும் செய்யக் கூடியவள்.இல்லாவிட்டால் நான் சம்பாதிப்பதை வைத்துக் கொண்டு,ஏழு பேர் கொண்ட ஒரு பெரிய குடும்பத்தை சமாளிக்க முடியுமா என்ன..?

மாலையில் அலுவலகத்திலிருந்து கிளம்பும்போது, அகிலா போன் செய்தாள்.எல்லாருக்கும் புது டிரஸ், விருந்துக்கு வேணும்கிற காய்கறிகள், சாக்லேட்.. எல்லாம் வாங்கிட்டேன், சிக்கனும்,பர்த்டே கேக்கும் ப்ரெஷ்ஷாக,காலையில் நீங்க போய் வாங்கிருங்க.., அப்புறம்,வீட்டிற்கு வரும்போது அந்த பேக்கரியில், நல்ல கலர் க்ரீம்லே,ஹேப்பி பர்த் டே டூ ஷாலினி என்று மறக்காமல் எழுதச் சொல்லுங்க..!”

“சரி..சரி..”என்று அவளுக்கு பதில் சொல்லிவிட்டு, தொடர்பை துண்டித்தேன். எப்படியிருந்தாலும் எனது நண்பர்கள்,ஷாலினிக்கு பரிசாக பொம்மைகள் மற்றும் விளையாடடுப் பொருட்களை வாங்கி வருவார்கள். ஆனால்,நான் ஏதாவது அவளுக்கு வித்தியாசமாக வாங்கித்தரவேண்டும்.என்ன வாங்கலாம்..? ஷாலினிக்கு என்ன பிடிக்கும்..?’

சில நிமிடங்கள் யோசித்தபின்னும் என்னால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.

அகிலாவைக் கேட்கலாமா..? ஒரு தாயாய் இருக்கும் அவளுக்கு,குழந்தையின் விருப்பு, வெறுப்பு எல்லாம் தெரியும்தான்..,தந்தையாக இருக்கும் எனக்கு..?’ நினைத்தபோதே வெட்கமாக இருந்தது. அடக் கஷ்டமே..இதென்ன சோதனை..? தனது குழந்தைக்கு என்ன பிடிக்கும் என்று அவளுடைய தந்தைக்கு தெரியவில்லை என்பது எவ்வளவு பெரிய அவமானம்..!

வரும் தேர்தலில்,எந்தக் கட்சி,எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும்.? மோடி பிரதமராகி விடமுடியுமா..? ராகுல் இதுவரை என்னவெல்லாம் செய்தார்.? ஜெனிவா மாநாடு வெற்றி பெறுவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும்..? ராஜபக்ஷே வின் இறுமாப்பிற்கு என்ன காரணம்..? உலகம் வெப்பமயமாகி வருவதை எப்படியெல்லாம் தடுப்பது..? என்று அலுவலக நண்பர்களுடன் சகட்டுமேனிக்கு விவாதிக்க முடிகிறது.., ஆனால்,குழந்தைக்கு என்ன பிடிக்கும்..என பட் டென்று ஒரு முடிவிற்கு வரமுடியவில்லையே..? சே..என் மீதே எனக்கு சற்று வெறுப்பாய்த்தான் இருந்தது.இதன் மூலம் நமது குடும்பத்திலிருந்து வெகுதூரம் விலகி இருக்கிறோமோ.., என்று வருத்தமாயும் இருந்தது.

ஏதோவொரு வெறுப்பு மனதைக் கவ்வ, ஓட்டிக் கொண்டிருந்த இருசக்கர வாகனத்தை பேசாமல் ஓரங்கட்டி நிறுத்திவிட்டேன்.சில விநாடிகளில் சலசலவென்று பேச்சுக் குரல்கள் மிக சமீபமாய்க் கேட்டது.திரும்பிப் பார்த்தேன்.பொள்ளாச்சி வழியாக பழனிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் கூட்டம் ஒன்று என்னைக் கடந்து கொண்டிருந்தது. அதிலொருவர் தனது பெண் குழந்தையை தோளில் தூக்கி அமரவைத்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தார்.குழந்தை குனிந்து தந்தையின் காதில் ஏதோ சொல்வதும், பதிலுக்கு வெடிச்சிரிப்புடன் அவர் ஏதோ பதில் சொல்லிவிட்டு, தனக்கு அருகாமையில் நடந்து வரும் ஆண்கள்,பெண்களிடமும், “கேட்டியா..எம் பொண்ணு சொல்லுறதை..? என்று அவர் ஏதோ சொல்ல,மற்றவர்களும் பலத்த ஓசையுடன் சிரித்துக் கொண்டே நடந்தனர்.அவர்களைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் பொறாமையாக இருந்தது. என்றைக்காவது இப்படியொரு நெருக்கமான நேரத்தை எனது குழந்தையுடன் செலவிட்டிருக்கிறேனா..?

இருள் லேசாகக் கவியத்துவங்கியிருந்தது. வாகனத்தின் பெட்ரொல் டேங்க் கவர் மீது, ஏதோவொரு பறவையின் எச்சம் விழுந்து தெறித்தது. அனிச்சையாக மேலே பார்த்தேன். பறவைகள் கூட்டமாகவும்,தனியாகவும் தங்கள் கூடுகளை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தன.

பறவைகள்..ஆகா..பறவைகள்..,சட்டென்று எனக்குள் ஏதோ பொறி தட்டியது. அகிலாவின் அம்மா கொடுத்த மரத்தொட்டிலில்,ஷாலினியை முதன் முதலாக போடும்போது,அவள் பார்வையில் படும்படியாக,பச்சையும் சிகப்புமான வண்ணங்களில் கிளிகளும்,புறாக்களுமாயிருந்த ஒரு பிளாஸ்டிக் பொம்மை ராட்டினத்தை தொட்டிலின் குறுக்காய் சென்ற விட்டத்தில் கட்டிவிட்டது நினைவுக்கு வந்தது.சலசலவென்று சப்தமிட்டுக் கொண்டு அவை காற்றில் சுழன்று கொண்டும்,ஆடிக் கொண்டும் இருப்பதைப் பார்த்தால் போதும்,எதற்காக அழுது கொண்டிருந்தாலும், நிறுத்திவிடுவாள் குழந்தை. முகத்தில் சிரிப்பும் குதூகலமும் வந்துவிடும்.

அவள் சற்றே வளர்ந்த பிறகும் கூட,வீட்டிற்கு நான் வாங்கிச் செல்லும் வாராந்திர பத்திரிகைகள் சிலவற்றில் வரும் பறவைகளின் படங்களைச் சுட்டிக்காட்டி,அகிலாவிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருப்பாள்.அகிலாவும் காக்கா.. புறா..குருவி..கொக்கு..கிளி..என்று குழந்தைக்கு சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பாளே..!

பின்னாளில் கையில் கிடைத்த பென்சிலைக் கொண்டு,அவள் முதன்முதலில் சுவற்றில் வரைந்த கிறுக்கல்கூட, காக்காவும்,குருவியுமாக இருக்கிறதென்றே தனது மழலை மொழியில்,கூறிக் கொண்டிருப்பாள். அகிலாவும் "ஆமாம் சாமி" போட்டுக் கொண்டிருப்பாள்.இவற்றையெல்லாம் ஒரு வேடிக்கையாக மட்டுமே பார்த்துப் பழகியிருந்த நான்,அவளுக்கு பறவைகள் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதை இத்தனை நாளாகக் கவனத்தில் கொள்ளாமலேயே போயிருக்கிறேனே..!

எனக்குள் இப்போது ஒரு தெளிவு பிறந்துவிட்டது போல இருந்தது.அகிலா சொல்லியிருந்த வேலை களை முடித்துவிட்டு,வாகனத்தை அபார உற்சாகத்துடன் வீட்டிற்கு விரட்டினேன்.அனிமல் பிளானெட் சேனலில்,ஏதோ ஒரு அழகான வெளிநாட்டுப் பறவையின் கதை ஓடிக் கொண்டிருந்தது.ஷாலு மிகவும் உன்னிப்பாக அதனைக் கவனித்துக் கொண்டிருந்தாள்.நான் எனக்குள் சிரித்துக் கொண்டேன்.

மறுநாள் காலை,எனக்குள் பரபரப்பு மிகுந்திருந்தது. சிக்கனை வாங்கி வீட்டில் கொடுத்துவிட்டு,பர்த்டே கேக்கை மாலை நான்கு மணிக்கு வந்து வாங்கிக் கொள்ளச் சொன்னார்கள் என்று அகிலாவிற்கு தகவலைச் சொல்லிவிட்டு,உடனடியாக வெளியே கிளம்பினேன்.

“என்ன திரும்பியும் கிளம்பிட்டீங்க.., ஏதாவது அவசர வேலையா..?”அகிலா கேட்டாள்.

“முக்கியமாக ஒன்றும் இல்லை.இதோ இப்போது வந்துவிடுகிறேன்..,”வேகமாக வாகனத்துடன் வெளியேறினேன்.

பத்து நிமிடங்களுக்குள் பொள்ளாச்சி சந்தையை எட்டினேன்.“லவ் பேர்ட்ஸ் விக்குற கடை எங்கிருக்கு..?” இரும்பு வியாபாரி ஒருவரைக் கேட்டபோது, ஒரு சந்துக்குள் கையைக் காட்டினார்.குறிப்பிட்ட கடைக்கு சென்றபோது,அது பூட்டப்ட்டிருந்தது.இந்தக் கடையை எப்போ திறப்பாங்க..? அருகிலிருந்தவரைக் கேட்டேன்.
அவர் மேலும்,கீழுமாக என்னைப் பார்த்தார். அவருக்கு என்மேல் என்ன சந்தேகமோ..?

“நீங்க ஃபாரஸ்ட் டிபார்;ட்மெண்டா..?”

“இல்லே..வீட்லே வளக்கறதக்கு லவ் பேர்ட்ஸ் வாங்கலாமின்னு வந்தேன்”

மேலும் சில விநாடிகள் அவர் என்னை தீர்க்கமாகப் பார்த்துவிட்டு, “லவ் பேர்ட்ஸ் எல்லாம் விக்கக் கூடாதுன்னு, ஃபாரஸ்ட்காரங்க,அன்னைக்கு ரெய்டு பண்ணி அவருக்கு ஃபைன் போட்டுட்டாங்க தம்பி, அதுலேருந்து இந்தக் கடையை சாத்திட்டு, வீட்டுலேதான் வெச்சு ரகசியமா விக்குறார். மயில்சாமி அண்ணன் சொல்லி விட்டாருன்னு, போய் சொல்லி வாங்கிக்குங்க..”என்றபடியே ஒரு முகவரியையும்,செல் நம்பரையும் அவர் கொடுத்தார்.அவருக்கு நன்றி சொல்லிவிட்டு, அங்கிருந்து கிளம்பினேன்.

குறிப்பிட்ட முகவரிக்கு சென்று அங்கிருந்தவரிடம் விபரங்களைச் சொன்னேன்.அவரும் தனது வீட்டிற்குப் பின்புறம் அழைத்துச் சென்றார்.

அங்கு சிறிதும் பெரிதுமாக நான்கு கூண்டுகள் இருந்தன.அவற்றில் என் வீட்டு சமையலறையின் அளவில்,ஒரு மிகப் பெரிய கூண்டு இருந்தது. அதற்குள் சிறிய அளவிலான ஓட்டைப் பானை களும், செயற்கையான மரக்கிளைகளும் அமைக்கப் பட்டிருந்தன.சிறு தானியங்கள் ஏராளமாய் சிதறிக் கிடந்தன.விதவிதமான வண்ணங்களில், தோற்றங் களில்,நூற்றுக்கும் மேற்பட்ட லவ்பேர்ட்ஸ்கள், இணையாகவும், தனியாகவும் அதற்குள்ளேயே பறந்து பறந்து அமர்ந்து கொண்டிருந்தன. சில ஜோடிகள் ஒன்றையொன்று அலகால் கோதிக் கொண்டிருந்தன.பார்க்கவே மிகவும் அழகாக இருந்தது. மற்ற கூண்டுகளில், வெள்ளை,கறுப்பு, சாம்பல் நிறங்களில் ஏராளமான புறாக்கள், குடுகுடுவென்று விநோதமாக சப்தமெழுப்பிக் கொண்டிருந்தன.

லவ் பேர்ட்ஸில் இரண்டு இணைகளும், புறாக்களில் ஒரு ஜோடியையும் சுட்டிக்காட்டி, விலையைக் கேட்டேன்.அதற்கான கம்பிக் கூண்டுகளையும் சேர்த்து அவர் சொன்ன விலை, நான் எதிர்பார்த்ததைவிட அதிகமாகவே இருந்தது.

வீட்டுக்கு சென்றபின் இதனைப் பிரித்துக் கொள்ளுங்கள் என்றபடியே,அந்த இரண்டு கூண்டுகளையும், காகிதங்களால் மறைத்துக் கட்டிக் கொடுத்தார்.எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.’பறவைகள் விற்பனை என்பது இவ்வளவு ரகசியமானதா..?’

வாகனத்தின் முன்புறம் அந்தக் கூண்டுகளை வைத்தபோது,அவற்றின் உயரமும்,அகலமும் சற்று அதிகப்படியாக தெரிந்தது. இருந்தாலும் சமாளித்து ஓட்டிக் கொண்டு சென்று விடலாம் என்று தோன்ற.., அதனை பத்திரமாக எடுத்துக் கொண்டு,கிளம்பினேன்.

இதுவரை வெறும் படங்களாகவே பார்த்துக் கொண்டிருந்த பறவைகளை,உயிருடன் பார்க்கும்போது,ஷாலுக்குட்டியின் முகத்தில் ஏற்படும் மகிழ்ச்சியை,மனதார ரசிக்க வேண்டும். தனது குழந்தைக்கு பிடிப்பதை,ஒரு தந்தையாய் செய்துவிட்ட மகிழ்ச்சியை பூரணமாக அனுபவிக்க வேண்டும்.வழியெல்லாம் எனது யோசனை இப்படித்தான் ஓடிக் கொண்டிருந்தது.

ஒருவழியாக பத்திரமாக அவற்றை வீட்டிற்கு கொண்டு வந்துவிட்டேன்.அகிலாவிற்கு ஒரே ஆச்சரியம்.. “இது என்ன இவ்ளோவ் பெரிய பார்சல்..? என்று கேட்டபடியே,அவற்றை இறக்கிவைக்க உதவி செய்தாள்.

“இரு சொல்றேன்..ஷாலுவைக் கூப்பிடு.இது அவளுக்கு,என்னோட பர்த் டே பிரசண்ட்..”

அதனுள்ளிருந்து எழுந்த லவ்பேர்ட்ஸின் கீச்..கீச்..ஒலியை வைத்து..,“என்னங்க இது பேர்ட்ஸா..?” என்றாள்.

ஆமா..ஆனா பாப்பாகிட்டே சொல்லாதே..அவளைக் கூப்பிட்டு வெச்சு,இதை திறந்து காட்டலாம்..” என்றபடியே..ஷாலு..ஷாலு..என்று கூப்பிட்ட குரலுக்கு,வாசல்படிக்கு ஓடிவந்தாள் குழந்தை.

“இங்க வா..உன்னோட பர்த்டேக்கு,டாடி என்ன வாங்கிட்டு வந்திருக்கேன் பாரு..!”

“என்னப்பா..இது இவ்ளோவ் பெருசா..? எங்கே காட்டு..” குழந்தையின் கண்களில் ஆவல் மின்னியது.

அவளைப் பார்த்துக் கொண்டே,கூண்டுகளைச் சுற்றியிருந்த காகிதங்களை பரபரவென்று பிரித்தேன்.

உள்ளே,மஞ்சளும்,கறுப்பும்,பச்சையுமாக வண்ணங்களைக் காட்டிக் கொண்டிருந்த பறவைகள் புதிய இடத்தை மிரட்சியுடன் பார்த்தபடி முன்னிலும் அதிகமாக ஒலியெழுப்பின. அதே போல் புறாக்களும் தங்கள் கூண்டுக்குள் வேகமாக குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தன.

நான் ஷாலுக்குட்டியைப் பார்த்தேன்.அவள் பறவைகளைப் பார்த்துக் கொண்டிருந்தாள். ”அப்பா..இது லவ் பேர்ட்ஸ்தானே..? இது புறா தானே..? பறவைகளை இனம் கண்டு கொண்ட மகிழ்ச்சி அவளது குரலில் இருந்தது.மிக அருகாமை யில் பறவைகளை உயிருடன் பார்க்கின்ற ஆச்சரியமும் அதில் தொனித்தது.

“உனக்குப் பிடிச்சுருக்கா..?.

“ பேர்ட்ஸ்ஸெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்குப்பா..!” சொல்லியபடியே வந்து என்னைக் கட்டிக் கொண்டாள். அப்பாடா..இப்போது எனக்குள் அளவுகடந்த மகிழ்ச்சி நிரம்பியிருந்தது. இன்னும் அவள் பார்வை,பறவைகளின் மீதே இருந்தது.

“அப்பா..அதையெல்லாம் திறந்து விடுப்பா..!”

“அச்சச்சோ..திறந்துவிட்டா எல்லாம் பறந்து போயிடும்..நம்ம வீட்டுக்குப் பின்னாடியே, கூண்டுகளையெல்லாம் வெச்சு இதுகளை வளர்க்கலாம்.”

கைகளைக் கட்டியபடி, ஒய்யாரமாய் நின்று நாங்கள் பேசிக் கொண்டிருப்பதை,அகிலா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஷாலுக்குட்டி,இன்னும் கூண்டுகளையே பார்த்துக் கொண்டிருந்தாள். சில நிமிடங்கள் கழிந்தது. கட்டிக் கொண்டிருந்த எனது தோளிலிருந்து,மெதுவாய் தனது கைகளை விடுவித்துக் கொண்டாள் ஷாலு. நேராக லவ்பேர்ட்ஸ் இருக்கும் கூண்டுக்கு அருகில் சென்று,என்னைத் திரும்பிப் பார்த்தாள். “அப்பா..நீ பக்கத்துலே வரக்கூடாது.அங்கியேதான் நிக்கணும்..”என்றபடியே சடாரென்று அதன் கூண்டுகளைத் திறந்துவிட்டாள். இதற்காகவே காத்திருந்தது போல லவ்பேர்ட்ஸ்கள் விருட்டென்று கூண்டைவிட்டு வரிசையாக வெளியே பறந்தன.அதே விநாடியில் புறாக்கள் இருந்த கூண்டுகளையும் திறந்து விட்டாள்.இவள் என்ன செய்யப் போகிறாள் என்று எனக்கு உறைக்கும் முன்பே,அது நிகழ்ந்து போனது.

“டேய்..டேய்..என்ன செய்யுறே..அதை ஏம்பா..திறந்துவிட்டே..? இப்ப லவ் பேர்ட்ஸ் எல்லாம் பறந்து போயிடுச்சு பாரு..!” என்று நான் சொல்லிக் கொண்டிருந்த போதே, கூண்டை விட்டு,வெளியில் வந்து தயங்கி நின்று கொண்டிருந்த புறாக்களையெல்லாம், ச்சூ..ச்சூ. . என்று அவள் விரட்டிவிட அவையும் பறந்து சென்று,சில விநாடிகளில்.கண்களுக்கு தெரியாமல் மறைந்து போனது.

அவள் திட்டமிட்டுத்தான்,பறவைகளையெல்லாம் திறந்துவிட்டிருக்கிறாள் என்று எனக்கு இப்போது நன்றாகவே உரைத்தது. “ஏம்மா..உனக்கு பேர்ட்ஸ்கள் ரொம்பப் பிடிக்குமே..!”

“ஆமாம்ப்பா..எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதனாலத்தான் திறந்துவிட்டேன்.”அவள் சொன்னதை இன்னொருமுறை எனக்குள் ஓடவிட்டுப் பார்த்துக் கொண்டேன்.அந்த வார்த்தைகளில் நிறைய அர்த்தம் இருப்பது, இப்போது தெரிந்தது.

ஒன்றுமே நடவாதது போல சாதாரணமாக வீட்டுக்குள் சென்று,சிலவிநாடிகளில் திரும்பிய ஷாலுவின் கைகளில்,ஒரு சிறிய வேப்பமரக் கன்று இருந்தது. “அப்பா..ஒண்ணும் கவலைப்படாதேப்பா.. இந்த மரத்தை நம்ம வீட்டுக்குப் பின்னாலே நட்டுவோம்.இது கொஞ்சம் பெருசாயிடுச்சுனா.., இப்போ பறந்துபோன புறா மாதிரி,நிறையப் பேர்ட்ஸ் இதிலே வந்து கூடுகட்டும்.அப்ப உனக்கு காட்டுறேன் என்னப்பா..!”என்று என்னை சமாதானப் படுத்தும் குரலில் அவள் சொன்னதைக் கேட்டு,நான் விக்கித்துப் போனேன்.அகிலாவின் முகத்தில் பெருமிதத்தால் பொங்கும் புன்சிரிப்பு தவழ்ந்து கொண்டிருந்தது.

எல்லா நேரங்களிலும் குழந்தைகள் குழந்தைகளா கவும், பெரியவர்கள் பெரியவர்களாகவும் இருப்பதில்லை..என்று புரிந்து கொண்டு, அன்றைக்கு நானும் புதிதாய்ப் பிறந்திருந்தேன்..!

------------------------------------

எழுதியவர் : பொள்ளாச்சி அபி B +ve (12-Feb-14, 2:27 pm)
பார்வை : 2543

மேலே