அத்திப் பூக்களை இடம் பெயர்க்கும் நித்திய மல்லிகள்

அத்திப் பூக்களை இடம் பெயர்க்கும் நித்திய
=========================================
மல்லிகள்....
=========

சாய வெளுப்புகள்
அகமும் புறமுமாய்..
திரும்பும் திசைகளிலெல்லாம்...
எங்கெங்குமாய்....

தேன் தடவிய விடங்கள்
உண்ண வைத்து
கொல்லப் பார்க்கும்
வித்தை கற்றவர்களாய்...

நிழல் தருமென்று
ஒதுங்கி நின்றவர்களுக்கு
நெருஞ்சி கிரீடங்கள்
மலர் மகுடங்களாய்....

வெந்த புண்ணில்
வேல் பாய்ச்சி துடிக்க வைத்து
எக்காளச் சிரிப்பில்
ஆத்ம திருப்திகளாய்....

அமிலத்தில் ஆராதனைகள்
ரணகள அவதி கண்டு
மானுட ரசனைகள்
இதயங்கள் வரைபடங்களாய்....

பாம்பும் பல்லியும்
விடமிழந்து போகும்
முழு உடல் விடமென
திரிபவர் முன்னால்.....

தேடாது இருப்பினும்
நாடி நஞ்சு பாய்ச்சி
நெடுஞ்சாண்கிடையாக்கி
சாய்ப்பதில் மகிழ்ச்சி பெருக்கி....

எத்தனை எத்தனை
அத்திப் பூக்கள் எண்ணுகையில்
அத்தனையும் அடங்கும்
சவமாய் சாய்கையில்...

சாய்வது உணருமென்றால்
சாத்தான் அழிந்துவிடும்
மனிதமும் நேசமும்
மறுமலர்ச்சி காணும் ஓர்நாள்..

நித்ய மல்லி வாசங்கள்
மழலை உருவங்களில்
மாசற்ற சுவாசத்தில் மகிழ்ச்சி
மழலையோடு மழலையாய்...

எழுதியவர் : சொ. சாந்தி (14-Feb-14, 5:17 pm)
பார்வை : 217

மேலே