பேட்டை ரவுடிக்குப் பிறந்த நாள்

பேட்டை ரவுடிக்குப் பிறந்த நாள்
சாட்டை அடிபோல நறுக்கென்று
வாழ்த்துக் கூறும் வாசகங்கள்.
சொந்தச் செலவில் கைத்தடிகளின் பெயரில்
ஊரெங்கும் வண்ண வண்ண சுவர்
விளம்பரங்கள் சுவரொட்டிகள் பேனர்கள்.
குடிசைப் பகுதிகளில் அறுசுவை அன்னதானம்.
அகன்ற நெற்றி பெருத்த மூக்கு
ஆந்தைக் கண்கள் பழுத்த பப்பாளிக் கன்னங்கள்
முறுக்கு மீசையுடன் பல்லிளித்துச்
சிரிக்கும் ரவுடியின் மெருகேற்றிய
சிரிக்கும் புகைப்படம்; அதன் கீழே:
”அண்ணனே மன்னனே உயிரே மூச்சே
தானைத் தலைவா தங்கத் தமிழா
வள்ளலே வானமே உனக்கு எல்லை!
வாழ்த்த வயதில்லை, வணங்குகிறோம்!”
அன்புத் தொண்டர்களும் பாதம் பணியும் தம்பிகளும்:
முட்டை ரவி நொள்ள கபாலி
கண்ணுக்குட்டி கன்னியப்பன்
ரம்பம் பாலா பிளேடு பக்கிரி
துப்பாக்கி துரை
அருவா முருகேசன்
கம்ப்யூட்டர் காளி கழுவா கனகராஜ்.
கொள்ளைக்காரன் பேட்டை