சாமி போட்ட கணக்கு

சாமி போட்ட கணக்கு.
காட்டு மேல போற புள்ள
களை எடுக்க வாரேன் நில்லு
ஏட்டு மாமன் ரோட்டுப் புஞ்ச
கூட்டிவப்பான் கூலி ரொம்ப
அருகு பத்திக் கிடக்கு-அடியே
அலுப்பு நிறைய இருக்கு.
பெட்டி போட்ட சட்டக்காரா
சுட்டித்தனம் பேசாதடா !
சுத்தி வளச்சி எங்கே வாரே
சூச்சுமத்த நானறிவேன்
கட்டிப்போட்டு இறுக்கு—ஓங்
கதயக் கொஞ்சம் சுருக்கு.
மாமன் பொண்ணு மல்லிகையே
மச்சான் பேச்சத் தள்ளுரியே!
ரமணன் சொன்ன சேதியடி
ரெட்டவெயில் கொல்லுமடி
மேனி சுட்டுக் கருக்கும்—ஏங்
மனசும் பட்டுத் துடிக்கும்.
அத்த பெத்த ரத்தினமே
அழுக்கு ஒட்டா சுந்தரனே
அவுத்து விட்ட காளபோல
அலையிற நீ கொழுத்துப் போயி
பாட்டன் வச்ச சொத்து –அதப்
பாழாக்கத்தான் சுத்து..
போடி போடி வாயாடி நீ
போட்டி போட்டு பேசாதடி
மூடி வைய்யி பத்திரமா
ஓடி எங்க போவாயடி
கிணத்துத் தண்ணி தான்டி—எனக்கு
கிடப்பயடி வேண்டி.
சாமி போட்ட கணக்கிருக்கு
பூமி சனம் நிறைஞ்சிருக்கு,
யாருக்குன்னு பூத்திருக்கு
யார் வரவு காத்திருக்கு
நேரும் விதி இருக்கு—நம்ம
நினப்பில் என்ன வழக்கு?
கொ.பெ.பி.அய்யா.
-