- சொந்தக்காரன்-

- சொந்தக்காரன் -

நான் எதிர் பாராத நேரம் எங்கிருந்தோ ஒன்று வந்து படீர் என என் முகத்தில் விழுந்தது. 'என்ன இது மோசமாக நோகிறதே.. ? ' என அந்த பக்க கண்ணை மூடிக்கொண்டு சாபிட்ட கையாலே கன்னத்தை தடவிய போது முன்னால் இருந்தவர் என் மூக்கில் குத்தினார் . அவர் கோபமாகவும் பேசிய போதுதான் புரிந்தது இது அவரின் இரண்டாவது அடி என்று . எனக்கு என்ன செய்வதென்று தெரிய வில்லை . வலித்த இடத்தை உரஞ்சி விட்டு கையை எடுத்தபோதுதான். மூக்காலும் நெற்றியாலும் ரத்தம் வருவது தெரிந்தது . ரத்தத்தை கண்டதும் எனக்கு அழுகையும் கோவமும் அதிரித்தது . ரத்தத்தை பார்த்து பார்த்து அழுதேன். பெரிதாக அழுதால் மீண்டும் அடிப்பாரோ என்று வேறு பயமாக இருந்தது . அடித்த அடியில் சொண்டு வீங்கி- நாக்கு போல் வந்து விட்டது . முடிந்தவரை அழுகையை அடக்கி அழுதேன் . ஆனால் விம்மலை அடக்க முடியவில்லை. எதற்காக அடித்தார் என்று கேட்கவும் முடியவில்லை . அவராகவும் சொல்ல வில்லை . இன்னொரு முறை அடிவாங்கித்தான் காரணத்தை அறிந்து கொள்ளப்போகிறேன் அவ்வேளையில் யாக்கிரதையாக இருந்து காரணத்தை கண்டு பிடித்து விட வேண்டும் என எண்ணிக் கொண்டேன்.
இவரை எனக்கு தெரியாது . இவர் தான் என்னிடம் வந்தார். ' மனைவி என்னை விட்டுவிட்டு போய்விட்டார் நான் வேலைக்கு போனா வீட்டு வேலைகளை கவனிக்க யாரும் இல்லை ' என என் அம்மாவிடம் கூறி என்னை தனோடு அனுப்பமுடியமா என கேட்டார் . என் தங்கைகளின் திருமணத்திற்க்கு தன்னாலான உதவி செய்வதாக வேற கூறினார் . இவரை பார்த்தபோது இறந்த என் அப்பாவின் ஞாபகம் தான் வந்தது அப்பா மாதிரியே இருந்தார் சித்தப்பாவின் வயதுதான் இருக்கும் . பாவமாக இருந்தது சரி என்று கூறி வந்து விட்டேன் .
ஊரில் இருந்து தன் வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்தார். ஆரம்பத்தில் நன்றாக தான் இருந்தார் பின் எதயோ குடிக்க ஆரம்பித்தார் . என்ன குடிக்கிறார் என்று எனக்கு தெரியவே இல்லை . அதை குடித்தால் தான் அவருக்கு பல குறைகள் கண்ணுக்கு தெரிகிறது . குடித்தால் நான் காமதேனு என நினைத்துவிடுகிறார் . அவர் நினைத்தது எல்லாம் நான் வைக்க வேண்டும் . பல முறை அடி வேண்டியும் நான் திருந்த வில்லை என அடிக்கடி சொல்லி அடிக்கு நியாயம் கற்பிக்கிறார் . எனக்கும் உடலில் எங்காவது மூளை இருக்கும் என்று நினைக்கிறார் இல்லை . இதில் நான் இவரை விட அதிகம் படித்திருக்கிறேன் என்பது இன்னும் வேதனை . அவருக்கு காதுகள் இருப்பது ' தான் சொல்லுவது வெளியில் கேட்கிறது ' என தான் அறியவே ஒழிய மற்றவர் சொல்வதை கேட்டு அதிலும் நியாயம் இருக்கிறதா என்று புரிந்து கொள்வதற்கில்லை .

என் அம்மா , தம்பி தங்கைகளுக்கு நான் அடி வேண்டுவது தெரியாது . தெரிந்தாலும் என்ன செய்வார்கள் என்றும் தெரியாது . இது எல்லாவற்றிற்கும் காரணம் என் பிறப்புதான் உருவத்தில் அவரை விட சிறிதாகவும் பலத்திலும் அவ்வாறே இருந்தேன் . என்னக்கொன்றும் பத்து வயதில்லை 23 வயதாகிறது அவருக்கு என்னை விட வயதும் அதிகம் ஆளும் மலைபோல இருப்பார் . நான் நின்று கொண்டு அவர் தலையை தொடுவேன் உச்சியை தொட எட்டாது . எனக்கு ரத்தம் வந்ததை பார்த்த பின்புதான் . அவரின் குரலில் சற்று கனிவு வந்தது . எனக்குள்ளும் இரத்தம் ஓடுகிறது என தெரிந்து கொண்டார் போலிருக்கிறது . அவரை ஏன் நான் திருப்பி அடிக்கக் கூடாது என என்னால் சிந்திக்கவே முடிய வில்லை . ஒரு வேளை அப்படி அடித்தால் என்னுள்ளும் ஒர் உயிர் இருந்திருக்கிறது என அவர் தொரிந்து கொள்ளும் நிலை வந்தாலும் வரும். அப்படியான முறடன் அவர் .
இப்படி வந்து மாட்டுப்பட்டதை நினைக்க அழுகை வந்தது . அந்த இடத்தை விட்டு எங்காவது ஓடிவிட வேண்டும். அது படு குழியாய் இருந்தாலும் பறவாய் இல்லை என மனம் தவித்தது. ஆனால் இந்த ஊரில் எனக்கு யாரையும் தெரியாது. தெரிந்தவர்கள் எல்லோரும் அவரது நண்பர்களே. போனாலும் திருப்பி இவரிடமே அனுப்பி விடுவார்கள். இவருக்கு அவர்கள் எல்லோரும் பயம். ஆனால் அதனை இவர்- அவர்கள் எல்லோரும் தன் விசுவாசிகள் என்றும் நண்பர்கள் என்றும் எண்ணி பெருமை அடைந்தார் .

பல சமயங்களில் அவர்கள் தனித்தனியே இவரிடம் வேண்டிக்கட்டுவார்கள் . அதன் பின்னாலே தான். நல்ல நண்பர்கள் ஆகியிருப்பார்கள். ஒவ்வொரு முறை இவர் யாருடனாவது சண்டை போடும் போது இம்முறை ராசன் வாங்கிக் கட்டப் போகிறான் என அவரவர் மனதுக்குள் எண்ணி ஆனந்தப்படுவார்கள். ஆனால் முடிவு ஏதோ அவர்களுக்கு பாதகமாகத்தான் இருக்கும் . இறுதியில் அந்த நபரும் ராசனின் எதிராளிகள் படையில் இணைந்து கொண்டு ராசனோடு ஐக்கியமாகி விடுவார் . இவ்வாறு இணைந்தவர்களோடு சில சமயம் இவர் மனம் விட்டுப் பேசுவார் . மூன்றாமவர் ஒருவரை குறிப்பிட்டு “ அவன் அன்று என்னிட்ட நல்லா வேண்டி கட்டினவன் " என பிரச்சனையை சொல்லாமல் தண்டனையை மட்டும் ஏளனமாக சொல்லிக் கொண்டு இருப்பார் . அவரும் " அப்படியா அவனுக்கு கொடுக்கத்தான் வேண்டும் கதைக்கப் பேசத் தெரியாதவன் " என பிற்பாட்டு பாடுவார் எங்கே தன்னை பார்த்து ' நீயும் வேண்டின நீ தானே ' என்று சொல்லி விடுவானோ என்ற ஏக்கமும் - வெறியில அடிச்சதால நான் இவனிடம் அடி வேண்டியதை இவன் மறந்து விட்டானோ என்ற எண்ணமும் அவரக்கு தலை தூக்கப் பார்க்கும் . ராசனின் இந்த கை நீட்டும் பழக்கம் அவன் தன் தந்தையை விட உயரமாக வளர்ந்ததும் வந்தது. தன்னை விட பல சாலிகளிடம் இவன் வைத்துக்கொள்வதில்லை .

எப்போது மற்றவர்களை அடிக்க ஆரம்பித்தானோ அன்றில் இருந்து அவனை அறியாமலே நல்லது கெட்டது எல்லாம் அவனுக்கு தெரிய வந்தது . ' எப்போதுமே அவசரப்பட்டு தவறாக நடந்து கொள்வதாக ' கூறி வந்த சுற்றம் இப்போது அவன் செய்வதுதான் சரி என தலை ஆட்ட தொடங்கி இருந்தால் அவனுக்கு ஆச்சரியம் வந்தது. தன்னை சூழ்ந்தவர்கள் எல்லோருமேதான் படு முட்டாளாக இருந்திருக்கிறார்கள் . என எண்ணி வியந்தான். எல்லோரும் அவரவர் வீட்டில் இருந்து கொண்டு தெருவில் இவனை கண்டாலே பௌவியமாக நடந்து கொள்ள வேண்டும். நான் இவர் இருக்கும் வீட்டிலேயே இருக்கவேண்டியாயிற்று காரணம் இவர் என் நெருங்கிய சொந்தக்காரனாம் ஏதோ ஒரு முறையும் சொன்னாகள். ஊரில் அம்மா நான் இவரோடு இருப்பது தான் நல்லது என அடிக்கடி சொல்லி வந்தார். இது வேறு ஒரு தேசம் என்பதால் இவரை விட்டால் வேறு ஆக்களையும் தெரியாது .



ஒரு முறை இதை நான் ' ஊருக்கு சொல்லிவிட்டேன் ' அதற்கும் அடித்தார் . வீங்கிய சொண்டு மாறும் வரை அடிக்கமாட்டார் என்று நினைத்தேன் . மறுநாள் குடிதத்தால் அவருக்கு மறந்து போயிற்று.

அடி வேண்டுவது எனக்கு மட்டுமே தெரிவதால் வெளியாட்களிடம் மரியாதை இருந்தாலும் சில சமயம் நான் அடி வேண்டவது ஒருவருக்குக் கூட தெரியாமல் போய்விடுகிறதே என்ற வேதனை என்னை வாட்டியது .

என்னால் முடிந்தது எல்லாம் காந்தியால் முடிந்ததே சத்தியாக்கிரகம் இருப்பது . சாப்பிடாமல் இருந்தேன் . அது அவருக்கு நன்றாக தெரியும் ஆனால் அது பற்றி கருத்தில் எடுப்பதாக இல்லை . பசி வந்தால் நானாக சாப்பிடுவேன் என எண்ணியிருப்பார் போலிருக்கிறது . அவர் எண்ணமும் சரியாகவே இருந்தது. காந்தி இறுதியில் வென்றார் இங்கே இவர்தான் வென்றார் .
இதை நான் உணர்ந்த போது விசத்தையாவது சாப்பிட்டு விடலாம் என்று தோன்றியது .

" உன் வாழ்க்கையில் இவ்வளவு காசை பார்த்திருக்கிறியா ?" என கேட்பார் , எனக்கு மனதில் ' உன் வாழ்க்கையில் இப்படி வலியை அனுபவித்திருக்கிறியா ?' என கேட்க தோன்றும் . ஆனால் - இல்லை - என அங்கும் இங்கும் தலையை ஆட்டுவதோடு அவரை பற்றி நண்பர்களிடத்தில் பெருமையும் பேச ஆரம்பித்து விட்டேன் . பல சமயங்களில் கேள்வி விளங்காமலே 'ஆம் ' என்று பதில் செல்லுகிறேன் என்னில் திருத்தம் தெரிவதாக கூறுகிறார் . கதைக்கிறேன் - திருப்பிக் கதைக்காமல் . ஏன் பார்க்கக் கூட செய்கிறேன் திரும்பிப்பார்க்காமல். என் சிரிப்புகளை உண்மையான சிரிப்பாக நம்பிவிடுகிறார் என்பதே என் ஆச்சரியம். என்ன செய்கிறேன் என்று தெரியாமலே சில வற்றை செய்கிறேன் . என்னை பற்றி நினைக்க எனக்கே வெக்கமாக இருக்கும் '. சீ.. என்ன பிழைப்பு ' என்பதே என் தேசிய கீதமாகியது .
வெறியில் கூட 'அடித்த போது உனக்கு நொந்ததா ?' என்று கேட்டதில்லை . ஆனால் அடித்தால் நோகும் என்று அவருக்கு நன்றாக தெரியும். முதுகை , கன்னத்தை , வயிற்றை தடவித் தடவி நான் அழும் போது -எனக்கு நோகிறது - என அவர் அறிந்து கொள்வதை நான் பார்த்திருக்கிறேன். அடிக்கும் போது மட்டும் அவ்வளவு ஆனந்தம் அடைகிறார் . சில வேளைகளில் அடிக்குப் பதிலாக ஏதாவது வேண்டித் தருவார் . அது உடலெங்கும் கடிப்பது போல் இருக்கும் .
அடிக்கும் போது உடல் நோகும் பின் மனம் நோகும் . சிரித்து பேசி போய் வருவோரை - இப்போது வியப்போடு பார்க்க ஆரம்பித்து விட்டேன். இவர்களும் என்னைப் போல் அடி வேண்டி விட்டுத்தான் இப்படி சிரித்துப் பேசி மறைக்கிறார்களா என ஆராய்வேன். இந்த வீட்டை நம்பி ஒரு பூனை இருகிறது . அதுவும் அவ்வப்போது அடி வேண்டும் ஆனால் பின் ஓடிவிடும் நிக்காது . அதனை பொறுத்தவரை வெளியேறவே கதவுகள் இருக்கிறது . அதன் வாழ்க்கை கூட எனக்கு இல்லை .
கனவுகளில் மட்டும் நான் தான் ராஜா , ராணி எல்லாம் அவ்வப்போது கண்டு மகிழ்வேன்.

வேலை செய்து விட்டு 'கூலி குறைவாக தருகிறார்கள் 'என்பது எனக்கு சிரிப்பை உண்டு பண்ணும். நான் என் வேலைகளுக்கு பதில் இடி வேண்டுவது அவர்களுக்கு தெரியாது . அவர் வீட்டில் இல்லாத வேளைகளில் தான் மூச்சுவிடுவேன் மற்றைய தருணங்களில் என்னை தொலைத்து யாரோ ஒருவர் போல் நடித்துக் கொண்டு இருந்தேன். நான் சிந்திப்பது அவருக்கு தெரியவில்லை என்பது மட்டுமே என் சுகந்திரமாக இருந்தது . அவருக்கு வேண்டிய தெல்லாம் நான் செய்து கொடுப்பதற்காக எனக்கு சாப்பாடும் படுப்பதற்கு ஒரு துண்டு இடமும் கிடைக்கும் . விலங்குகள் கூட கட்டி வைத்து தாக்குவதில்லை சில சமயங்களில் சிலர் - இவரிடம் என்னை காட்டி 'இது யார் ? ' என்று கேட்டால் . ஆனந்தமாக , பெருமையோடு “ நான் கட்டியவள்” என்கிறார் .
முற்றும் .
-பசுந்திரா சசி -

-----------------------------------------------------------------------------------------------------------

எழுதியவர் : பசுந்திரா சசி (17-Feb-14, 3:57 pm)
பார்வை : 201

மேலே