நெஞ்சம் கொதிக்கிறதே 3 அழுதென்ன பயன்

ஊரை அழித்தினம் கொன்றார் - இந்த
உண்மையைக்கூறி உதவுங்கள் என்றோம்
பாரடா இங்கிவர்என்று எமைப்
பார்த்தவர் செய்தது கேலிகளன்றோ
போரடா செத்து விழுவர் அது
புண்ணியமென்று சிரித்தவ ரன்று
நேரந்திட நான்செய்யும் வேலை உங்கள்
நாட்டில் விழும்பிணம் எண்ணுதலாமோ

சொல்லிச் சிரித்தவரின்று தானும்
செய்தபிழை யென்று சொல்லியபின்பும்
அல்ல நிலைகெட்டதாலே அவர்
ஆளுதல் விட்டில்லம் ஏகிடல் வேண்டும்ம்
செல்லும் புகைவண்டி மோதல் கொள்ளின்
சார்ந்த பதவியை மந்திரி விட்டார்
செல்லுதல் போலிவர் இல்லை - ஏது
செந்தமிழாயின் நாம் சிற்ரெறும்பாமோ

மெல்லநடை கொணடுநின்றேன் -இந்த
மண்ணிலே தேடிவந்தே னெதை நானும்
சொல்லப் புரிவதும் இல்லை - ஒரு
சுற்றுமரங்களும் சோலைக் கிளிகள்
மெல்ல வருந்தென்றல் இல்லை - அங்கு
மீட்டுமிசை இல்லை ஆயினுமுள்ளம்
எல்லையற்ற சுகம்கண்டேன் - காற்றில்
இன்புற நானூற்று வீரமும் கண்டேன்

***********

மதுவுண்ட போதையைக் கொண்டே - வரும்
மாற்றானும் எம்மினப் பெண்களைத் தொட்டால்
அதுவேண்டாம் என்றன்னை தூய்மை காத்த
அன்புள்ளம் சீற்றம் எடுத்தொரு காற்றில்
எதுதானும் நான் காணவில்லை இனி
ஏதும் பயனற்ற தென்றெண்ணும் போது
மெதுவாக ஒர் குரல் கேட்டேன் அது
மெல்ல அழுதிடும் பெண்குரலாக

சிறுகல்லை உளியிட்ட தோற்றம் - அவள்
சிலையென்றால் குரலேது சரிபெண்ணே என்றே
வறுமைக்குள் நிலை கொண்டபோலும் அவள்
வண்ணமுகம் தீயில் வெள்ளியாய் மின்ன
வெறுமைக்குள் உழல்கின்ற எண்ணம் அவள்
விழி சிந்தும் நீருக்கு வழி விட்டகன்னம்
குறுகித்தான் அவள்நின்ற தோற்றம் அந்தக்
குமரிக்கு எத்துன்பம் கேட்கவிழைந்தேன்

***********

யாரதுபெண்ணே நீஎன்றேன் - அர்த்த
ராத்திரி நேரத்தில் இங்கேது என்றேன்
நேரம் நெருங்குதே என்றாள் - கண்டு
நின்னை அழைப்பது எப்படி யென்றேன்
வேரை அறுத்தவர் தம்மை - இனி
வீழ்த்திட வேண்டுமென் றென்னையே பார்த்தாள்
நீரை மாஆறென ஊற்ற - அவள்
நெய்வதனம் தன்னில் வேதனை கண்டேன்

பேரென்ன என்றெனைக் கேட்டாய் - இந்தப்
பேருலகில் மீது கல்லும் மண்ணாகிச்
சேரமுன் பூமியில் தோற்றி - அருஞ்
செந்தமிழ் என்றொரு பொன்மொழி வந்தே
சீரெனவே வளர்ந்தோங்க - நல்ல
செல்வச் செழிப்பொடு மேன்மை வளர்த்தார்
கூரெனக் கொள்மதிதீரம் கொண்டோர்
கூட்டத்தில் தோன்றிய போதொருபேராம்

ஊரோடு ஒத்திங்கு ஓடி - நின்றும்
உள்ள சுதந்திரம் எண்ணிய போதும்
கூரெனக் கோடரி தூக்கி இன்னும்
குத்தும் வாள் கொண்டவர் வெட்டிட வந்தும்
தீராத மோகத்தில் தொட்டே - தூய்மை
தேகம் அழித்திட வேறோர் பெயரும்
பாராய் நான் பேர்பல கொண்டேன் அதில்
பாவி எதைஇங்கு கூறுவ னென்றாள்

(கற்பனைக் கவிதை)
(4ம் பகுதி பார்க்க)

எழுதியவர் : கிரிகாசன் (18-Feb-14, 2:16 pm)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 64

மேலே