நெஞ்சம் கொதிக்கிறதே 1 காணாத காட்சி

வேங்கைபுரத்து விளக்குகள் யாவும்
வெளிச்சம் அற்றோர் இரவினிலே
ஆங்கே அஞ்சிக் காணும் குடிகள்
ஆழ்ந்தே இருளில் விழிமூடா
பொங்குநீரைக் கொண்டேஎண்ணிப்
பேச்சுமின்றி மௌனத்தில்
சிங்கப் புரியின் காலாட்படையும்
சேர்ந்தன ரெல்லை எனஅஞ்ச

தென்னகம் நின்று தன்னகம் நோக்கித்
திடுதிடுவென்றே வருவோரால்
தன்னகம் அச்சம் கொண்டவள்துஞ்சித்
தவித்திட மகனை விழிநோக்கி
அன்னைதன் கையில் அரவணைத்தேயென்
அருமைச் செல்வா உயிர்காப்பேன்
என்னிலை கெடினும் உன்னுயிர் காப்பேன்
இங்கே வாஎன் றுட்சென்றே

கண்ணயர் சயனக் கட்டிலின்கீழே
காணும் புற்பாய் சுருள்நீக்கி
எண்ணிற்கூட இயலாதுள்ளம்
ஏக்கம் அச்சம் நிறைந் தவளாய்
கண்ணிற் கிணையாம் மகனைப் பாயுள்
காணா தொழி யென்றுள் வைத்தே
தண்மொழியாள் கைக் கொள்ளும்சாவி
கதவைப்பூட்டித் தொலையெறிந்தாள்

என்னநடக்கும் என்பது அறியாள்
எதற்கும் தன்னை ஈந்துவிடில்
வன்முறைசெய்வோர் வந்ததைவிட்டு
வாசல் நோக்கிச் செல்வரென
சின்னவ னைஅறை உள்ளேவிட்டுச்
சீரழிப்போர்க்கு பலியானாள்
அன்னதுஎண்ண கொல்விதிதானும்
அடுத்ததை எண்ணும் அறியாளோ

பன்நெடு தூரம் பாய்ந்துவருமப்
பாழுங்கொடியவர் பார்த்தவளை
தன்னிலைகெட்டு பெண்ணுடல் பிய்த்துப்
தமிழே பாரடி என்செய்தோம்
என்னடிசெத்துத் தீரடி என்றே
இவளின் உயிரைஎடுக்கையிலே
பின்புறம் எரியும் பெருந்தீவீட்டின்
பாயிடை மகனின் உடல்தீய்க்கப்

பட்டுக்கருகப் பாலனின் மரணப்
படுக்கையில் அம்மா என்றோலம்
இட்டவன் அன்னை இறுதிக் கணங்கள்
இரு துளி விழியால் நிலம்கொட்டி
கட்டியவன்வந் தெங்கே மகனென்
றேங்கிக் கலங்கும் நினைவோடு
வெட்டிய உடலாய் வீழ்ந்தவன் செய்தி
விபரம் அறியா உயிர்நீத்தாள்

எழுதியவர் : கிரிகாசன் (18-Feb-14, 1:36 pm)
பார்வை : 98

மேலே