அது புரட்சிகரமானது

அது புரட்சிகரமானது

எதிர்ப்புகளையும்
வரவேற்புக்களையும்
பொருந்தப் பெற்றுள்ளதாய்
அரசியலாகிப் போனது காதல் - கண்
இல்லை என்பதாலோ

மறுசீரமைக்க முடியாததாய்
ஆதாம் ஏவாள் காலத்து
காதல் ,
புறச்சீரமைத்துக் கொண்டு
பிறக்கின்றது இன்றளவிலும்

எந்தச் சாசனம்
எழுதி முறித்த தீர்ப்போ
வெய்யிலென்றும் மழையென்றும்
பொருட்படுத்தாது - தனது
தார்மீகப் பொறுப்பினின்றும்
பின்வாங்காது நுழைகின்றது
பருவங்கள் தோறும்

களவு ஒழுக்கமேனும்
கடைபிடித்த காலமெல்லாம்
கையில் ஒட்டிய தூசுகளாய் உதறப்பட்டு
உளவு ஒழுக்கம் பேணுகின்றது
புதியதொரு நாகரீகம்

எல்லோரும் பயணிக்கும்
அந்தச் சாலையில்
ஒதுங்கிப் போனாலும்
சகதியினை
வாரி இறைத்துப் போகும்
வாகனப்பேடிகளோ ஏராளம்

கட்டமைத்துக் கொண்டதாம்
தனது சேவையை
பகுதி நேரமாயும் முழுநேரமாயும்
கடிவாளங்களின்றிச்
சுற்றித் திரிந்தன கைப்பேசிகள்

அசட்டுப் பேர்வழிகளாய்
நமட்டுச் சிரிப்புடன் - திரை
விலக்கி உரையாடித் தீர்ந்தன
ஊர் வாய்கள் - காதலும்
கற்று மறந்தோர்களானோர்

கடமைக்காகவே பூத்தன
சிவப்பு ரோஜாக்கள்
அன்றைக்கு .....
இரண்டு பிடிவிரல்களின்
இடையேயான பல்லக்கு சுமப்பில்
ஒருநாள் முதல்வர்களாகிவிடுவதற்காய்

சிலர் கோமாளிகளாவதும்
பலர் ஏமாளிகளாவதும்
ஒரே சீர்திருத்தத்தில் தான் - அது
திசைமாறித் திரும்பும் பந்தொன்று
விசைமாறிப் போவதில் தான்

இதயப் பெட்டியில்
மீண்டும்
துடைத்துவைக்கப்பட்டது
காதலெனும் யாழ் - மீட்டுவோர்
மிகக் குறைவு ;பலர் தீட்டாகினர்

இணையதளம்
உச்சிமாநாடுகள் பலவும்
அரங்கேறும் தலைமைப்பீடம் ;
இங்குதான் பல்வேறு தீர்மானங்கள்
நிறைவேற்றப்படுகின்றன ;

உழுதலில் கிடைக்கும்
பொன் துண்டுகளாய் - சில
காதல்க் கதைகளைக் கண்டெடுத்தான்
கால விவசாயி - அவனது
வழித்தடங்களில் நம்பிக்கைத் துகள்கள்

பருவமறியா
மழையொன்றும்
பயிரிட உதவுவதில்லை
விவரமறிந்தேன் -அது
புரட்சிகரமானது ...!

எழுதியவர் : புலமி (20-Feb-14, 12:03 am)
பார்வை : 101

மேலே