574 இனியேனும் மொழியைக் காப்போம்
------------ அறுசீர் விருத்தம் ---------------
கலப்பையை நிமிர்த்தி வைத்துக்
=கழனியை உழுவார் உண்டோ?
பலப்பமும் மாறி விட்டால்
=படிப்புமே மாறிப் போமோ?
உலக்கையை அம்மி மேலே
=உருட்டிட அரைக்கப் போமோ?
இலக்குகள் சொல்லாச் சொற்கள்
=இலக்கியம் ஆகப் போமோ?......................................08
கிழமையைக் கழுவி வைத்தால்
=கீழ்த்திசை மாறிப் போமா?
வழமையை மாற்ற எண்ணி
=வடிவினை மாற்றின், ஆமா?
உழும்,முறை மாற லாம்தான்;
=உழவினை மாற்றப் போமோ?
உழவினை மாற்றி எங்கள்
=உணர்வினில் உழவா ருங்கள்!...............................16
பழிவரா வாழ்வு வாழப்
=பலவகை யுத்தி சொன்னார்
மொழிவரா தொன்றும் இல்லை
=முற்றிலும் பாடி னோம்,என்(று)
அழகினைப் பாடி னாரோ?
=அழுக்கினை மறைத்திட் டாரோ?
பழகிடப் பாடிக் கையில்
=பலபொருள் நிறைத்திட் டாரோ?.............................24
புண்களைப் பூக்கள் என்று
=போலியாய்ப் புகழு வோரும்
பண்டைநாள் இரந்து சென்றுப்
=பாடிய புலவர் தாமும்
கண்டிட வெவ்வே றாமோ?
=கவிதைமுன் னேறப் போமோ?
விண்டிடும் சொற்க ளாலே
=விளைபயன் ஏதும் உண்டோ?..................................30
மொழிவளம் எழுத்தா? சொல்லா?
=முறைவளம் செயலா? பண்பா?
அழிவது பகையா? அன்பா?
=ஆக்கமும் பயனா பாட்டா?
எழுதிடப் பலகை தந்தால்
=எதையுமே எழுதத் தானா?
முழுகிடப் பொதுவில் வந்தால்
=முன்னாடை களைய லாமோ?................................38
வனத்தையே அழித்து விட்டால்
=மலரினுக் கெங்கே போவோம்?
தனத்தையே அரிந்து விட்டால்
=தாய்ப்பாலுக் கெவரைக் கேட்போம்?
மனத்தையே இழந்து விட்டால்
=மனிதமும் தழைக்கப் போமோ?
இனத்தினை மொழியால் காப்போம்
=இனியேனும் மொழியைக் காப்போம்!....................46