உதிர்ந்து விழும் இலை
பொழுது விழும் நேரம்
மெல்ல வீசிய தென்றல்
தென்றலுக்கு ஆடிய கிளை
வாழ்வு முடிந்து உதிர்ந்தது இலையொன்று !
கிளை பிரிந்து
மண்ணைத் தொடுமுன்பு
ஞானம் பிறந்தது இலைக்கு !
வசந்த காலம் ஒன்றில்
பிறந்தேன் !
பச்சைநிற அழகி என்று
இறுமாப்பு கொண்டேன் !
பழுத்த இலை கண்டு
கைகொட்டி சிரித்தேன் !
சுடும் சூரியன் கண்டு
நாணமுற்று நின்றேன் !
நிலவொளியில் குளித்து
மகிழ்ந்தேன் !
புயல் மழைக்கும்
சுழல் காற்றுக்கும்
சவால் விட்டு நின்றேன் !
நாடி தளர்ந்து
உயிர் வற்றி
வருடவந்த தென்றலுக்கு
பிடிதளர்ந்து விழுந்தேன் !
மேலே கைகொட்டி சிரிக்கின்றன
இளம் இலைகள் !
மண்ணிலே பிறந்தவர்கள் எல்லாம்
மாய்ந்துவிட தானே போகின்றோம்!
இளமையும் முதுமையும்
பிறப்பும் இறப்பும்
எல்லோருக்கும் வருமே!
குறுகிய வாழ்வில்
மகிழ்ச்சியாய் இருப்போம் !
மண்ணிலே புதைந்து
மறுபடியும் பிறப்போம் !
நல்ல மரமாகவோ
இல்லை
நல்ல மனிதனாகவோ!
* * *
கோடீஸ்வரன்