மீட்டாத வீணை

வயதோ முப்பத்தாறினைத் தொட
அப்பனுக்கோ
இன்னும் நானோர் கைக்குழந்தையாம் !!
எங்களைப் பார்த்த
இராமன்களுக்கு மட்டும்
ஏனோ ?
மண நாள் யோகம்
அடுத்த முகூர்த்தத்திலேயே !!
நாங்களோ மீட்டாத வீணையாய்...
ஆங்கே முகாரி ராகங்கள் மட்டும்
தேசிய கீதங்களாய் !!
இடரலான வார்த்தைகளை
களைந்தும்
எங்கள் கவிதையில் மட்டும்
ஆயிரம் எழுத்து பிழை !!
மருதம், நெய்தல், பாலையென
எதிலும் சேராத
வெற்றிடம் நாங்கள் !!
ராகு கேது என
தோஷம் இருப்பின்
புண்ணிய நதியினில்
கழித்தாவது இருப்பர்
இல்லாத தோஷத்தை
எங்கணம் கழிக்க ?
நூற்றியெட்டு விளக்குகள் ஏற்றியும்
எங்களுக்கு மட்டும்
விடிவெள்ளி என்றோ தாயே?!!
பாரதி இருப்பின்
பராசக்தியை கொன்றே இருப்பான் - அன்றி
வழக்காடி மடிந்திருப்பான் - இன்று
ஆயுள் கைதிகளாய் நாங்கள்