முதிர் கன்னிக் கனவுகள்

முதிர் கன்னிக் கனவுகள்
மார்கழி இரவு. மனதுக்கிசைந்த குளிர். கதகதப்பு தேடும் மேனி.
அவர் என்னையே பார்த்துக்கொண்டிருக்கிறார். நானும் அவ்வப்போது அவரைப் பார்க்கிறேன். வெட்கப்படுகிறேன். வெட்கம் அழகைக் கூட்டுகிறதாம். அவர் சொன்னார்.
நான் சினுங்குகிறேன். இதற்கு முன்பு நான் இப்படிச் சினுங்கியதில்லை.
தும்பைப் பற்களால் என் கீழுதட்டைக் கடிக்கிறார், வலிக்கவில்லை. ஆனாலும் “ஆ” என்கிறேன். இழுத்து அணைக்கிறார். மூக்கும் மூக்கும் அடிக்கடி மோதிக்கொண்டதில் யாருக்கும் காயமில்லை. அவர் மூச்சில் மூலிகை கலந்திருந்தது.
நானும் கொஞ்சம் தைரியத்துடன் அவரை முடிந்த மட்டும் இழுத்து அணைக்கிறேன். என் கைகள் அவர் முதுகிலே முடிவு பெற்று விடுகின்றன.
இவ்வளவு அழகான அன்பான கணவர் கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். மயக்கத்திலும் கடவுளுக்கு நன்றி சொல்ல நான் மறக்கவில்லை.
”பேசியே இரவு முடிந்து விடுமா” அவர் கேள்வி
இதற்கே மூச்சு வாங்குகிறேனே” என் பதில்
காது மடலை அவர் கடித்த போது உயர் அழுத்த மின்சாரம் என்னில் பாய்ந்தது. கூந்தலில் ஐ விரல் கொண்டு நீவுகிறார்.
”பாண்டிய மன்னனின் சந்தேகம் சரிதான் என்கிறார்.
நீங்களாக இருந்திருந்தால் என்ன தீர்ப்பு சொல்லியிருந்திருப்பீர்கள். என்று கேட்டேன்.
நான் பரம சிவன் பக்கம் நின்றிருப்பேன் என்று சொல்லி சிரிக்கிறார்.
இருவரும் சிரித்திருந்த இடைவெளியில் அவர் கைகள் என்னைச் சிறை செய்தது.
எண்ணை திரியில் ஏறுவது போல் இனம் புரியா இளஞ்சூடு மூளைக்கேறியது. அவர் தொட்ட இடமெல்லாம் சொர்க்கத்தின் கதவுகள். ஆடைகளை இருவருமே சமமாக இழந்திருந்தோம். வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படவில்லை.
பூவும் பூவும் மோதிக்கொள்ளும் அதிகாலை நேரம். என் தோழிகள் கோவிலுக்கு செல்ல என்னை எழுப்புகிறார்கள். இங்கிதம் தெரியாதவர்கள். கல்யாணம் ஆன புதிதில் இப்படி தொந்தரவு செய்யலாமா. என்று சொல்லிக்கொண்டே நான் எழுந்தபோது தான் உண்மை புரிந்தது. மதியம் மணி மூன்று. இன்று பஞ்சாலையில் எனக்கு வார விடுமுறை.
போஸ்ட் மேன் என்னைக் கடிந்து கொண்டார். ஏம்மா எவ்வளவு கத்தறது. அப்படி என்ன தூக்கமோ என்றபடி தபாலைக் கொடுத்தார்.
கோபம்மாள் அவர்கட்கு,
தாங்கள் முதிர் கன்னி உதவித்தொகை கோரி மனுச் செய்துள்ளீர்கள். தங்களுக்கு மருத்துவர் சான்றின் படி வயது 35. ஆகவே அரசு விதிகளின் படி 50 வயதுக்குட்பட்டோருக்கு முதிர் கன்னிகளுக்கான உதவித்தொகை வழங்க மார்க்கமில்லை
தனி தாசில்தார்
சமூகப் பாதுகாப்பு திட்டம்