காத்திருக்கிறேன் ஆவலுடன்
காத்திருக்கிறேன் ஆவலுடன்
காலநேரம் மறந்த மனிதனாய் !
நடந்திட்ட நல்லபல நிகழ்வுகளும்
விரைந்து சென்ற வருடங்களும்
மீண்டும் வந்திடுமா என்று !
மறைந்திட்ட உயிரான உறவுகளும்
வாழ்ந்து சென்ற அருமை நட்புகளும்
மீண்டும் வந்திடுமா என்று !
சுகமாய் கழிந்திட்ட நாட்களும்
சுற்றித் திரிந்த பொழுதுகளும்
மீண்டும் வந்திடுமா என்று !
பாசமும் நேசமும் இணைந்திட்டு
பண்போடு வாழ்ந்திட்ட மனங்கள்
மீண்டும் வந்திடுமா என்று !
உதவிடும் உள்ளமுடனே வாழ்ந்து
உலகை விட்டு சென்ற உள்ளங்கள்
மீண்டும் வந்திடுமா என்று !
சுயநலமின்றி சுழன்றிடும் பூமியில்
சுத்தமாய் சுற்றிய சுவாசகாற்றும்
மீண்டும் வந்திடுமா என்று !
காலத்தின் அருமை உணர்ந்து
ஞாலத்தில் உழைத்த நெஞ்சங்கள்
மீண்டும் வந்திடுமா என்று !
அடுத்தவர் வாழ இன்னுயிர் நீத்த
மண்ணில் வாழ்ந்த இதயங்கள்
மீண்டும் வந்திடுமா என்று !
ஊழலற்ற உண்மை உள்ளமுடன்
நேர்மையான ஆட்சி காலங்கள்
மீண்டும் வந்திடுமா என்று !
உண்டு வாழ உழுது பயிரிட்டு
தொழுது வாழ்ந்த விளை நிலங்கள்
மீண்டும் வந்திடுமா என்று !
மும்மாரி பெய்திடும் மழைபோல
மூன்று போக அறுவடை காலங்கள்
மீண்டும் வந்திடுமா என்று !
காத்திருக்கிறேன் ஆவலுடன்
காலநேரம் மறந்த மனிதனாய் !
நோக்குகிறேன் சென்ற பாதையை
ஏக்கமிகு நெஞ்சமுடன் நானும் !
திரும்பிடும் நிச்சயம் என்றே நான்
திரும்பிப் பார்க்கிறேன் ஆவலுடன் !
வரவேற்க காத்திருக்கிறேன் நானும்
வையகம் வாழ்ந்திட மகிழ்ந்திட !
பழனி குமார்

