பாத்திரம் அறிந்து

பாத்திரம் அறிந்து.
சின்ன வயதில் அம்மா கற்றுக் கொடுத்த பாடம் ,வெள்ளி ,சனி ஆகிய இருதினங்களில் கண்டிப்பாகக் கோவிலுக்குப் போக வேண்டுமென்பது. அதனைத் தவறாமல் பின்பற்றி வருகிறான் செல்வம். அப்பொழுதான் மனம் ஒரு தெளிந்த நீரோடையாக இருக்கும் என்பது அவனது உறுதியான நம்பிக்கை.
அன்றும் கல்லூரி முடிந்து மாலை விடுதிக்கு வந்தவன் ,அவசர அவசரமாக முகம்,கை கால்கள் அலம்பி, உடை மாற்றிக் கொண்டு ,விடுதி உணவகத்தில் தேனீர் அருந்தி விட்டு, தன்னுடைய நண்பன் முத்துவுடன் கோவிலுக்குப் புறப்பட்டான்.
விடுதியின் நீண்ட நடைபாதையில் நடந்து ,பிரதான வாயில் வழியாக , சாலைக்கு வந்தார்கள். அந்த நகரின் முக்கியச் சாலையாக அந்தச் சாலை இருந்தமையால், வாகனங்கள் விரைவாக இரண்டு திசைகளிலும் சென்று கொண்டு இருந்தன.
சாலையின் ஓரமாக இருவரும் நடந்து கொண்டு இருந்தார்கள். சிறிது தூரம் சென்றதும், தெருவிளக்குக் கம்பத்தின் கீழ் உட்கார்ந்து இருந்த ஒரு பெரியவரைக் கண்டார்கள். ஒல்லியான உடல் வாகு .இடது கண்ணை மறைந்து,பச்சைத் துணியினால், ஒரு திரையினைத் தொங்கவிட்டு இருந்தார். கண் புரை அறுவை சிகிச்சைப் பண்ணினவர் போலும். அந்த வழியாகப் போவோர் வருவோரிடம், 'ஐயா! ஏதாவது உதவி பண்ணுங்கய்யா ' என்று கேட்டுக் கொண்டு இருந்தார்.
செல்வமும் ,முத்துவும் அவர் அருகில் வந்தவுடன் ' ஐயா ! ஏதாவது உதவி பண்ணுங்கய்யா' என்றார்.
'என்னய்யா பெரியவரே ! என்ன உதவி வேண்டும்' என்று செல்வம் கேட்டான்.
குரல் கேட்டு ஏறிட்டுப் பார்த்தவர், இவர்கள் கல்லூரி மாணவர்கள் என்பதைத் தெரிந்து கொண்டு 'தம்பிகளா! நான் கண் அறுவை சிகிச்சைக்காக கன்னியாகுமரியில் இருந்து இங்கே வந்தேன். திரும்பிப் போகப் பணம் இல்லை. ஏதாவது பணம் கொடுத்தீங்கன்னா ஊருக்குப் போய் திரும்ப அனுப்பி விடுகிறேன் ' என்றார்.
'ஏன் பெரியவரே ! உங்களுடன் வேறு யாரும் துணைக்கு வரவில்லையா? ' என்று முத்து கேட்டான்.
'என்னோட மனைவி இறந்துட்டா. பெத்த பிள்ளைங்க என்னைத் தனியாக விட்டுட்டு, அவன் அவன் குடும்பத்தோட தனித்தனியாகப் போயிட்டாங்க...இப்போ நான் ஒரு தனிமரமா நிற்கிறேன் ' என்றவரின் கண்கள் குளமாயின.
'கவலைப் படாதிங்க பெரியவரே, பணத்தை நாங்க ஏற்பாடு செய்து தருகிறோம் ' என்றான் முத்து.
'ரொம்ப நன்றி தம்பிகளா !'
'பெரியவரே ! ஏதாவது சாப்பிட்டீங்களா? ' என்று கேட்டான் செல்வம்.
' நேற்றுக் காலையில் இரண்டு இட்லி சாப்பிட்டேன் . அவ்வளவுதான் '
'இங்கே உட்கார்ந்து இருங்க... பணமும் ,சாப்பாடும் ஏற்பாடு செய்து எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கிறோம் ' என்று கூறிவிட்டு இருவரும் நகர்ந்தார்கள்.
'பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஆளாக்கியும், வயசு காலத்துல அனாதையா ஆக்கிட்டுப் போயிடுறாங்க பிள்ளைங்க.. என்ன மனிதர்களோ? என்ன பாசமோ? ' என்று அலுத்துக் கொண்டான் செல்வம்.
இருவரும் அவசர அவசரமாக அருகில் இருந்த பிள்ளையார் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு ,அதே வழியாக ஒரு அரை மணி நேரத்தில் திரும்பி வந்தார்கள்.
அந்தப் பெரியவர் அதே இடத்தில் உட்கார்ந்து இருந்தார். இருள் வெளிச்சத்தை விழுங்கத் தொடங்கி இருந்தது.,
'என்ன பெரியவரே ! இங்கே உட்கார்ந்து இருங்கீங்க ?' என்று கேட்ட செல்வத்திடம்,
' ஐயா ! இரண்டு தம்பிங்க வந்தாங்க. ஊருக்குப் போகப் பணமும், பசிக்கு உணவும் எடுத்துட்டு வர்றோம்ன்னு சொல்லிட்டுப் போனாங்க. அதான் உட்கார்ந்து இருக்கிறேன் ' என்றார்.
இருட்டில் மங்கிய வீதி விளக்கு ஒளியில், தங்ளை அடையாளம் தெரியவில்லை என் இவர்கள் எண்ணிக்கொண்டார்கள்.
'முத்து . இவர் நம்மகிட்டே உண்மையைத்தான் சொல்லி இருக்கணும். இல்லாட்டி நம்ம வார்த்தைகளை நம்பி இங்கேயே உட்கார்ந்து இருப்பார?' என்று செல்வம் சொல்ல,
'இவருக்கு நிச்சியமாக நாம உதவி செய்தே ஆகணும் ' என்றான் முத்து.
விடுதிக்குச் சென்றவர்கள் ,தங்கள் தங்கள் பெட்டிகளை அலசி ,கிடைத்த பணத்தை எடுத்து எண்ணிய போது கிட்டத்தட்ட ஒரு முப்பது ரூபாய் தேறியது.அப்போது கன்னியாகுமரிக்குக் கட்டணம் இருபது தான் என்பதனால் ,இது போதுமானதாக இருக்கும் என்று முடிவு செய்து, விடுதி உணவகத்தில் இருந்து ஒருவருடைய இரவு சாப்பாட்டுக்கான சப்பாத்தியைப் பொட்டலம் கட்டி எடுத்துக் கொண்டு விரைந்தார்கள்.
அதே இடத்தில் உட்கார்ந்து உதவி கேட்டுக் கொண்டு இருந்த பெரியவரை அணுகி,
' இந்தாங்க பெரியவரே , பேரூந்து கட்டணத்துக்கு உண்டான பணம். இந்தப் பொட்டணத்துல சப்பாத்தி இருக்கு. சாப்பிட்டு விட்டுக் கிளம்பி ஊர் போய் சேருங்க' என்றான் செல்வம்.
'ரொம்ப நன்றி தம்பிங்களா. உங்க உதவியை என்றைக்கும் மறக்க மாட்டேன்.உங்க முகவரியைக் கொடுங்க. ஊருக்குப் போனதும் பணத்தை அனுப்பி வைக்கிறேன் ' என்றவரின் குரலில் மகிழ்ச்சி இருப்பதை உணர்ந்தார்கள்.
'அதெல்லாம் ஒண்ணும் அனுப்ப வேண்டாம். நல்லபடியா ஊர் போய் சேர்ந்தா அதுவே போதும்.' என்று கூறிய முத்துவின் மனதில் ஏதோ ஒரு பெரிய உதவி செய்து விட்டோம் என்னும் உணர்வு மேலோங்கி நின்றது. செல்வத்துக்கும் அது சொல்லொண்ணா மன மகிழ்வைக் கொடுத்தது.
அவரிடம் விடை பெற்றுக் கொண்டு விடுதி வந்து சேர்ந்தனர்.
இது நடந்து ஒரு பத்து நாட்கள் சென்றிருக்கும். நெல்லை பேரூந்து நிலையத்தில் ,ஒரு ஓரமாக உட்கார்ந்து ஒரு பெரியவர் வருவோர் போவோரிடம் உதவி கேட்டுக்கொண்டு இருந்தார். அவரும் ஒரு கண்ணில் பச்சைத் துணியில் ஒரு திரை போட்டு இருந்தார்.அந்தப் பெரியவரை அருகில் சென்று பார்த்த முத்துவும் ,செல்வமும் திகைத்து நின்றனர்.
பத்து நாட்களுக்கு முன்னாடி பணமும் ,உணவும் பெற்றுக்கொண்ட அதே பெரியவர்தான் அவர்.
அருகில் சென்று நின்றார்கள்.இவர்களை அவருக்கு அடையாளம் தெர்ந்ததா ? இல்லையா ? என்பது இவர்களுக்குத் தெரியவில்லை. ஆனால் அவரை இவர்களுக்கு நன்றாக அடையாளம் தெரிந்தது. தாங்கள் ஏமாற்றப் பட்டு விட்டதை எண்ணிப் பார்க்க வருத்தமாக இருந்தது.
இப்படியும் ஒரு பிச்சையா?
'நாம் இரக்கப்பட்டுச் செய்தது உதவி. அதனை தவறாக பயன்படுத்தி ,நம்மை ஏமாற்றியது அவரது தவறு. இப்படியும் ஒரு நூதன பிச்சையா?. பாத்திரம் அறியாது உதவி செய்தது நமது தவறுதான்.' என்று கூறிய முத்துவின் வார்த்தைகள் உண்மைதான் என்பதை செல்வமும் உணர்ந்தான். இருப்பினும் தாங்கள் உதவி செய்தது, ஒரு முதியவருக்குத்தான் என்பதில் , ஒரு மனநிறைவு கிடைத்தது என்பதை மறுக்கமுடியாது என்று இருவரும் தங்களுக்குள் ஆறுதல் கூறிக்கொண்டார்கள்.

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (28-Feb-14, 9:25 pm)
Tanglish : paathiram arinthu
பார்வை : 145

மேலே