மனசின் அக்கரை

மனசின் அக்கரை

"அன்று செவ்வானக்கருசிலிர்த்து
மலைப்பசுமைகளை ஒன்றுகூட்டி
வாகைப்புனையல்கள் இறகுகளாக

இரதியுடுத்திய தாரகைச் சிதிலங்களோடு
வியர்வைத்துளிகள் மினுக்களாகி
செங்கதிர்ச்சிரித்த இலகரியையணைத்து

மிழிகளையிறுகச்செய்த காற்றுமாலை
மெதுமெதுவாய் வெம்மையுணர்த்த
சூழ்ந்த நீர்நிறைமண்டலக்குழைவுகள் மெத்தைவிரித்தது"

மிருதுவான இளங்கரங்கள்
வளையல் மறந்த தோரணங்களாகமாறி
பொன்வதனந்தூவி வரவேற்க
எக்களித்துதாவிய வயதினந்திமம்
எதுக்களித்து எடுக்கக்கொடுத்தது

பின்னிருந்துநீவிய விரல்கட்டுகளொவ்வொன்றாய்
தண்டுவட எலும்புகளோடு
சும்பனவோலைமீட்ட
புதுவாசமுதிர்த்த நுனிமூச்சின் லயனங்கள்
புதிர்நாணல்வீச இசைந்தேகொடுத்தது

கூட்டைப்பிரிகின்ற சிறுவெளிச்சமொன்று
நழுவி உருவிக்கொண்டே
ஒளிநிரம்பிய புகைக்கூண்டினுள்ளே
சுயம் நுழையுங்கட்டளைக்காளான அந்தநிமிடம்
நெளிநாவு கட்டுண்டெனை மிதக்கவேச்செய்தது

சுமந்துபோகின்ற சவமஞ்சக்கிடப்பில்
திண்ணென விழுந்தக்காட்சிகளோடு
புலப்படுகின்றவெதற்கோ ஒன்றிற்கு
பூஜைசடங்குகளுடன் கூடிய
இராஜமரியாதையின் அப்பகல்வேளையில்

சிவந்தகன்னங்களை ஒருபுறமாய்ச்சாய்த்த
சுமங்கலியொருவளின் அடிவயிற்றின்
மெல்லியத் தழுவல்களின் அரவணைப்பில்
இதமுணர்ந்த கதியிலியாய் மறுப்பிரவேசம்

அனுசரன்

எழுதியவர் : அனுசரன் (3-Mar-14, 4:04 am)
பார்வை : 111

மேலே