பெண்ணே கலங்காதே

பாசமும் பாவமும் கொண்டுபுனைந்தே
பால்வெளி வீதியிற் கோள்களுமிட்டு
தேசமு மாழியுந் தென்றலுங் கொண்டு
திங்கள் வலம்வரப் பூமியுஞ் செய்து
நாசமும் தீமைகொள் நாடுக ளாக்கி
நாம்பெறு மேனியை நீரொடு மண்ணும்
கேசமுந் தோலுடன் கொட்டவும் ரத்தம்
கூடியெலும் புடன் கொள்ளப் பிணைத்து

ஆசை பொறாமைகொள் ளகமும் வைத்து
ஆடித் துடித்திடு மங்கமும்செய்து
பாசை ,வினோத மெனப் பயி லாட்டம்
பேசி மகிழ்ந்தவர் பெண்ணவள் ஆணும்
கூசுங் குரோதங்கள் கொள்ளிழி வாழ்வில்
கூடிக் குலாவெனக் கோலமுஞ் செய்து
பூசி மறைத்தொரு புன்மைகொள் மேனி
பூ இதுவேயெனக் காதிலும் சுற்றி

கூடி யிணைந்தொரு குழந்தையுஞ் செய்து
கொண்டபெருஞ் சுக மென்று மரற்றி
மூடி விழித்திட மோகமு மின்பம்
மெல்லச் சிரிப்பதில் மேனி சிலிர்த்து
தேடிப் பொருள்கொள ஆவெனக் கத்தி
தென்ற லுடல்மணங் கொள்ள முகர்ந்து
ஓடிநடந்திடுஞ் செய்கை வியந்து
ஒரடியில் விழ உள்ளங் கலங்கிப்

பாலைக் குடித்திடப் பரவசமாகிப்
பார்த்தே யழநிலை பதைபதைத் தேது
சேலை படுக்கையில் சிற்றெறும் புண்டோ
செய்வினை செய்தெவர் விட்டமை தானோ
சூலை வயிற்றிடை செய் யழல்போலே
சொல்லவொணா வலி சேர்ந்திடலாமோ
மேலை யிருந்தருள் செய்கண நாதா
மென்மை வலித்திட செய்வது நீயா

என்றே துடித்தவ ளள்ளி யணைத்தே
ஆற்றிட எண்ணவு மரும்புக் காலால்
முன்னே யுதைத்திட முகமதிற் பட்டு
மெல்ல வலித்திட புன்னகை கொண்டும்
தன்னில் விடும்சிறு நீரில் குளித்து
தலையிடைகேசமும் பற்றியிழுத்தும்
கூனென மேனிகிடந்திட முதுகில்
கொண்டவள் சூ வெனக் குதிரையுமாடி

ஆயிரமாய்ப் பல வேதனைப் பட்டும்
அம்மா வெனுமொரு சொல்லினைக் கேட்டு
போயுளஞ் சூட்டினில் போட்டது வெல்லம்
போலு மினித்திடும் பாகென உருகி
நேய மெடுத்தவ ளம்மையை யிறைவன்
நீட்டியகையினிற் தாயுயிர் கேட்டோன்
காய மழிந்திடக் கருவத னுயிரை
கள்வனென் றேகவர் வேளையிற் கதற

மேனி எடுத்தவன் நாமும் புலம்பி
மீளக் கொடுப்பனோ மெய்யது பொய்யே
மாநிலம்விட்டொரு மாபெரும்வெளியில்
மங்குமொளிக் கரு மாயவிநோதச்
சூனிய வானிடை சோதியாம் சக்தி
சூட்டினிலே பெரும் சூடெனும் தீயை
தானிணைந்தே நலம் காணில் விடுத்தே
தன்மை இயல்பெனில் பொன்மகள் தேறாய்!

எழுதியவர் : கிரிகாசன் (3-Mar-14, 4:56 am)
சேர்த்தது : கிரிகாசன்
பார்வை : 84

மேலே