நான் யார் ஏன் எதற்காக - மணியன்
இருட்டறையில் நான்
சுற்றிலும் நீரால் சூழ்ந்து. . .
மூழ்கியும் நான் உயிரோடு ! !
திடீரென்று ஓர்
இனம் புரியா அதிர்வு
என் மேல்
படர்ந்தது போல்
ஓர் உணர்வு . . . . . .
காரணம் விளங்காமல்
காத்து இருந்தேன். . .
இரவா பகலா
குளிரா மழையா
சூரியனா சந்திரனா
எதுவும் நான் அறிந்ததில்லை
இன்று வரை. . . . .
வெளியே கேட்குது
பேச்சுக் குரல்கள். .
குரலை வைத்து அறிந்தேன்.
என் தாய்மொழி. . . .
அழித்து விடு வேண்டாம் நமக்கு
என்ன அழித்து விடுவது
எதை ? ஏன் ?
புரிய வில்லை எனக்கு.
காது மடல் இருப்பதாய்
எண்ணி விரித்துக் கொண்டேன். .
காத்து இருந்தேன். . மீண்டும். . . .
எங்கோ தூரத்தில்
ஒரு அழுகுரல் . .
எனக்கு மிகவும்
பரிச்சயமானதாய் நினைவு. . .
இந்தக் குரலை
இது நாள் வரை
இனிமையாக கேட்ட ஞாபகம். . .
இப்போது என்ன
இந்த குரல்
இப்படிக் கேட்கிறது. . . .
ஒரு கரம்
என் மெய் தடவியது.
என் மீது பட்டது . .
என் மீது படவில்லை. .
குழப்பமாய் குழம்பி நான். . . .
எதோ ஒரு சத்தம்.
சரக் . . சரக்கென்று . .
எதுவோ அரைபடுகிறது . .
என்பது மட்டும்
எனக்கு எப்படித் தெரிகிறது. .
எனக்கு உள் உணர்வெல்லாம் உண்டா. . .
புரியாமல் குழப்பமாய்
மீண்டும் நான் காத்திருந்தேன். . .
என் கண்ணே
உன்னை அழித்துவிட
அன்னையெனக்கு மனமில்லை. .
உன்னோடுச் சேர்ந்து
நானும் இந்த
மண்ணோடு போகிறேன். . . .
மீண்டும் அந்தக்குரல்தான்
தீண்டிச் சொன்னது. .
இதே குரல்தான் . .
அதே குரல்தான். .
நிதமும் நான் கேட்ட
அதே குரல்தான். . .
யார் நீங்கள் புரியவில்லை
நான் எங்கே போகிறேன் தெரியவில்லை.
நீங்களும் என்னுடன் . . ஏன் விளங்கவில்லை. .
புரியவில்லை. . .
தெரியவில்லை. . .
விளங். . . . . . .
*-*-*-*-* *-*-*-*-* -*-*-*-* -*-*-*