நினைத்துப் பார்க்க இயலுமோ

காதோரம் கிசுகிசுப்பாய்
கன்னல்மொழி பேசிடுவாய் !

நட்புணர்வு பெருக்கிடுவாய்
நகைச்சுவையும் கூட்டிடுவாய் !

காலமும் காட்டிடுவாய்
கானமும் இசைத்திடுவாய் !

படங்களும் பிடித்திடுவாய்
பிடித்ததைப் பகிர்ந்திடுவாய் !

குறுஞ்சேதி அனுப்பிடுவாய்
குறும்புகள் புரிந்திடுவாய் !

காதலுக்குத் தூதாவாய்
கடலைபோட துணைபோவாய் !

இணையுமுடன் இணைந்திருப்பாய்
இணையில்லா வரமாவாய் !

இதயங்கள் இடமாற்றிடுவாய்
இல்வாழ்வில் இணைத்திடுவாய் !

வழித்துணையாய் வந்திடுவாய்
வழித்தடமும் காட்டிடுவாய் !

விளையாட களமாவாய்
விவரம்பல தந்திடுவாய் !

விந்தைகள் நிகழ்த்திடுவாய்
விஷமத்தனம் செய்திடுவாய் !

அதிகாலை எழுப்பிடுவாய்
அர்த்தசாமத்திலும் குரல்கொடுப்பாய் !

ஆக்கமும் அளித்திடுவாய்
அழிவுக்கும் வழிவகுப்பாய் !

பசிவந்தால் அணைந்திடுவாய்
புசித்தபின் மலர்ந்திடுவாய் !

பக்கத்திலே நீயிருப்பாய்
பக்கபலமாய் தானிருப்பாய் !

நீயில்லா நாளொன்றை
நினைத்துப்பார்க்க இயலுமோ .....???

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (5-Mar-14, 10:38 pm)
பார்வை : 970

மேலே