எதை வாழ்வென்பது

என்னை இணையாக்க
நீ எடுத்த தயாரெடுத்தல்களை
இப்போதும் எண்ணிப் பார்த்து
இரவு,பகல் வியக்கிறேன்

அனுமானித்தவர்களை நம்ப வைக்க
அநியாயத்துக்கு
நடிக்க வேண்டியிருக்கிறது நான்

என் குடியிருப்பை,
நான் பூவாய் மலர்ந்த வாசலை
கொல்லைப் புறத்தை மற்றும்
வாப்பாவின் வயல் காணி,
வங்கிக் கணக்கிலிருந்த பாக்கிப் பணம்
உம்மாவின்,தூக்கு தொங்கட்டான் என
வாழ்வென்று சொல்லி
எஞ்சியிருந்த எல்லாவற்றையும் தான்
உன்னிடத்தில் ஒப்படைத்தாகிற்று

இன்றென்னிடம்....,
வெப்பிசாரங்களால் ஊதி நிரப்பப்பட்ட பலுனாய்
உடைய காத்திருப்பதை தவிர ஒன்றுமில்லை

உன்னிடமிருந்து
சடப் பொருட்களுக்கு கொடுக்கும்
சலுகைகள் கூட பல சந்தர்ப் பங்களில்
மறுக்கப் படுகின்றன இந்த மனசுக்கு

என்னை தோற்கடித்து ஈட்டும் வெற்றிகளை
உன்னை ஆறுதல் படுத்த நான்
நியாயத்திற்கு முரணாய்
கொண்டாட வேண்டி இருக்கின்றன
உன் சாபத்திற்கு ஆளாகாமல் இருக்க

அளக்கின்ற படிகளுக்கு தராசாக நீயிருந்து
முள்ளாக நிறுத்துகிறாய் என்னை
வாழ்க்கை எப்படியென்று
இனி யாராவது கேட்டால்
கேட்க இருக்கிறேன்....,
நீங்கள் சொல்லும்
வாழ்க்கை என்றால் என்ன?


ரோஷான் ஏ.ஜிப்ரி-இலங்கை.

எழுதியவர் : (6-Mar-14, 12:20 am)
பார்வை : 190

மேலே