கவிஞன் - கே-எஸ்-கலை
இவன்....
மழையில் காய்வான் !
வெயிலில் நனைவான் !
காற்றுக்கு குடைப்பிடிப்பான் !
நாற்றுக்கு பொட்டுவைப்பான் !
பூக்களுக்கு சேலைகட்டி
பூவையாக்கி அழகு பார்ப்பான் !
====
பனிமலையில் பாய்விரித்து
பக்குவமாய் படுத்திருப்பான் !
எரிமலையில் தீயெடுத்து
வெண்சுருட்டுப் பற்றவைப்பான் !
சருகில் சறுக்குண்டு
சஞ்சலத்தில் போராடுவான் !
====
பூமிக்கு இழுக்கென்றால்
பூகம்பம் இவனாவான்...!
நிலவுக்கு விளக்குவைத்து
நீங்காத ஒளிகொடுப்பான் !
புளுட்டோவில் வீடுகட்டி
புற்தரையில் புரண்டிருப்பான் !
ஓசோனின் ஓட்டைகளுக்கு
ஒத்தடங்கள் கொடுத்திருப்பான் !
====
பெருங்குடலும்
சிறுகுடலும்
வெறுங்குடலாய் கிடந்தாலும்
ஊர்ப்பசியை விரட்டிவிட
பெருங்கடலாய் கொந்தளிப்பான் !
====
விலையில்லா
மோனைக்கொண்டு
வீணைக்கும்
உயிர்க்கொடுப்பான் !
உலையில்லா
பானைக் கண்டும்
உல்லாசம் அனுபவிப்பான் !
===
பாடையிலே போகையிலே
ஈக்கள் மட்டும் கூடவரும் !
கருமாதி செய்யக்கூட
ஒருநாதி இருக்காது !
===
உள்ளவரை புறக்கணித்த
உலகம் இவனுக்கு...
செத்த பின் தான் விருதளிக்கும் !
விருந்தளிக்கும் !