வருகை குறித்து
நீ வருதல் வேண்டி
அலங்கரித்தலின் பொருட்டு
சில பல வெண்மை மலர்களை
கொய்து கொண்டேன்
அவைகளை பூச்சிகளோ தேனிக்களோ
தேடிச் சோர்ந்திருக்ககூடும்
அவைகளின் விருப்பங்களை நான் என்
காதலின் விரல்நகத்தால்
கிள்ளியெறிந்துவிட்டதாய் கூடயிருக்கலாம்
அவையாவும் ஓருசேர
மனங்களால் அளக்கமுடியாத
வசவுகளை எனக்கருகே
காற்றில் பரப்பி வைத்திருக்கலாம்-எனினும்
உன் கனிவுவேண்டி கொடைவேண்டி
அலங்கரிக்கிறேன்…
வண்ணவிளக்குகளும் மாபெரும்
தோரண வாயில்கள் இல்லையென்றாலும்
பலமுறை துடைத்து சுத்தபடுத்தி
சில முறை நானே நீயாக மாறி
நடந்து உடகார்ந்து எழுந்து
காற்றோடு நறுமணங்கள் கலந்து
சிரித்து நடித்து எப்படிப் பேசுவதென
எல்லா ஒத்திகைகளுக்குள்ளும்
ஒளிந்து உன்னை
உன் அன்பு கொண்ட மனத்தை
எனக்கானதாக்கிவிடும் அந்த வருகைக்காக
விரயமாக்கிவிட்ட காலத்தினிடத்து
மெல்ல நகர்!.. அவள் வருகை
இந்தப்பொழுதுக்குள்ளேயே
பொறித்துவைக்க உன்னால்
முடிந்ததை செய்யென… கட்டளையிட்டு
பார்வைகளை வார்த்தைப் படிமங்களாக்கி
அழைத்து காத்து அழைத்து காத்து
உன் இருப்பிடம் வரை நடந்து
வந்தபின்னாலும் நளினமுற்ற
உன் தடயத்தை காணவில்லை
ஆனாலும் உன்
வருகையை வேண்டி
ஒவ்வொரு கனமும் கடவுள்களுக்காக
எழுப்பப்படும் பிரசங்கப்பாடல்களாய்
மனத்தை கட்டமைக்கிறேன்
மழைக்கு முன் திரளும்
மேகங்களையொத்து அன்பை என்
அகப்பையில் ஏந்துகிறேன்
நலம் விரும்பி
காதிற்கினிய இசையை
பரத்திவைக்கிறேன்-முற்றிலுமாக
இனி நீ
வருவது மட்டும்தான் பாக்கி.