மலர் மங்கை ------------------
கெஞ்சிடும் விழி சேர்த்து இரக்கத்தை ஈட்டுவாள்
கொஞ்சிடும் மொழிகோர்த்து கோவிலும் கட்டுவாள்
அன்பில் பூப்பூக்கும் ஆனந்தம் காட்டுவாள்
ஆறுதல் அர்ப்பணிப்பு அறமென்று ஓங்குவாள்
பாரதியின் கனவவள் பார் போற்றும் புகழவள்
பாசத் திலகமிட்ட பைந்தமிழ் சிறப்பவள்
பாலூட்டும் நிலவவள் பச்சிளம் தூயவள்
பாராட்ட உகந்தவள் போராட்ட முடிவவள்
மலராய் மணப்பவள் மார்போடு அணைப்பவள்
மழலை செல்வத்தை மகிழ்வுடன் படைப்பவள்
குடும்பத்து விளக்கவள் குழப்பத்தின் விடிவவள்
குறும்புக்கு விருப்பவள் குமுதத்தின் மிதப்பவள்
தாயாகி தவமாவாள் தனியாகி தரமாவாள்
தாரம் உன் துணையாவாள் தாலாட்டும் நினைவாவாள்
தழும்பின் தாழாவாள் தயக்கத்தில் மெழுகாவாள்
தவிப்போடு தவிப்பாகி தள்ளாடும் நிலையாள்வாள்
கனவினை மறிப்பவள் காதலின் கரும்பவள்
கருவோடு உருவான காலத்தின் சுவடவள்
பெருமையின் சிமிழவள் பெருமித நடையவள்
பெண்மையின் பேரின்பம் இறப்பிலும் காண்பவள்
மலர் மங்கை பூந்தளிரே மலரிடை தேன் துளியே
மான்குட்டி துள்ளல்களே மதிப்பின் மகுடங்களே
குழலூதும் குளிர் பனியே குறுகுறுக்கும் அருவிகளே
குறளின் குங்குமமே குலம் காக்கும் தேவதை நீயே
மங்கையாய் பிறப்பதே மாதவப் பலனடா
மங்கையை மதிப்பதே மானிடன் சிறப்படா
இறக்கை விரித்திங்கு மேகமும் குடை பிடிக்கும்
இயற்கை புன்னகைக்க இமயமும் தலைவணங்கும்
சிலம்பினை எடுப்போம் சிசுவதை தகர்ப்போம்
வரதட்சனை கேட்போரை வணங்காமல் எதிர்ப்போம்
சொத்தில் சமபங்கை பெண்களுக்கு கொடுப்போம்
பெண்மையை வேட்டையாடும் பேடிகளை துளைப்போம்
அமிலத்தை வீசுவோரை அகிலத்தில் ஒழிப்போம்
சொர்க்க வாசலை பூமியிலே திறப்போம்…..!
தனித்துவ தாரகையே தரணி போற்றும் பெண்மையே
ஆண்டின் அத்தனை நாளும் அர்பணித்தல் போதாது
ஆற்றாமை எமை சூழ அவதரித்த மகளிர் தினம் உம்
மென் மனம் வாழ்க வாழ்வாங்கு... வாழிய வாழியவே ......!!
இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் நண்பர்களே.... !