வறுமைக்கோடு

முண்டாசுக் கட்டுகளாகியிருந்தன
முகில் கூட்டங்கள்
முதுகைக் காட்டிக் கிடக்கும்
முதுவானக் காட்டிற்கு
ஏனிந்த வெஞ்சினக் கருமை
அவற்றின் முகவெட்டிற்கு?
எனக்கும்தான் இந்த
ஏன்.
அவற்றில் மூழ்கிக்கொண்டிருந்தது
என் உலோகப் பறவை.
பஞ்சுப் பொதிகள்
பதுக்கி வைத்துக்கொண்டன
என் எந்திரக்கனவை.
கண்ணுக்கெட்டாவென்
கனவின் பின்னால்
என் வறுமைக்கோடு மட்டும்
எட்டாத உயரத்தில்
வளப்பமாக....
வளர்ந்து கெட்டது வானம்,
வீழ்ந்து கெட்டது என் கனவு.
இப்போது காணவில்லை
அந்த
முண்டாசுக் கூட்டங்களை.
நிராயுதபாணியாய்
நிற்கிறேன் நான் இப்போது
நிலத்தில் கால்வைத்து....