டும் டும் டும்
"வாங்கண்ணே.. எப்படி இருக்கீங்க? வாங்கண்ணீ... ராசாத்தி எப்படி வளர்ந்துட்ட... ஏந்தாயி நல்லாருக்கியா..? அப்படியே உங்க ஆயாவோட மொக ஜாடை...ம்.. அண்ணே.. எத்தன நாள் லீவு? தம்பி பையன் கல்யாணம் முடிஞ்சி கிளம்பிடுவிங்களா.. இல்ல ஒரு பத்து நாளாவது இருப்பிங்களா..!!"
"ஏன் தாயி எங்கயாவது என்ன பேசவிட்டியா..! நீயே வலவலன்னு பேசிக்கிட்டு இருக்க... அந்த சின்னப்புள்ளத்தனம் இன்னும் போகல...
பத்து நாள் என்ன, ஒரு மாசம் கூட இருக்கலாம்! வேலைய எழுதிக்குடுத்துட்டு
வந்துடட்டுமா..!"
"அச்சச்சோ! அண்ணே.. அப்படியெல்லாம் செஞ்சிடாதிங்க.. நம்ம ஊரிலேயே நீங்க தான் அரசாங்க வேலையில இருக்கீங்க.. உங்களத்தான் நாங்க இந்த ஊரு பசங்ககிட்ட..அது என்னமோ சொல்லுவாங்கலே.. ம்..... ரோல்மாடல்ன்னு சொல்லுவோம்.."
"ஹா ஹா"
"என்ன அண்ணே சிரிக்கிறீங்க? உண்மையத்தான் சொல்றேன்"
"சரி தாயி! சாயங்காலமா பாக்கலாம்.. வீட்ல நிறைய வேலை இருக்கு.. நான் அப்படியே காலாற நடந்து வீட்டுக்கு போறேன்.."
"நீ சீக்கிரம் வேலைய முடிச்சுட்டு வந்து கொஞ்சம் ஒத்தாசை பண்ணு", என்று சொல்லியவாறே மனைவி மற்றும் மகளுடன் அவர் தனது தம்பி வீட்டினை அடைந்தார்.
இவர்கள் வந்தடைந்த சிறிது நேரத்திலேயே தனம் வேகவேகமாக ஓடிவந்து வீட்டினை அடைந்தாள். அங்கே இவரது பெண் பாத்திரம் தேய்ப்பதை கண்டவள் உடனே குரல் கொடுத்தாள்...
"அம்மாடி சிவகாமி.. நீ எழுந்திரு.. நான் தேக்கிறேன்.. இந்த பாத்திரத்தையெல்லாம்.."
"இல்ல வேண்டாங்க நானே தேக்கிறேன்"
"என்னது ங்கவ.. அண்ணே இங்க பாரு ஒம்பொண்ண.. என்ன அத்தேன்னு வாய் நெறைய கூப்பிடச்சொல்லு"
"சரிதாயி ஏன் இப்படி கத்துறவ.."
"அம்மாடி சிவகாமி.. இங்க உள்ளவங்களெல்லாம் மரியாதையா ஏதாவது முறைவைத்துதான் கூப்பிடணும்.. அவங்கள நீ அத்தேன்னு கூப்பிடு..
இங்க எல்லாரும் நம்ம சொந்தம் மாதிரிதான் பழகுவாங்க.. சொந்தம் மாதிரி என்ன.. சொந்தம் தான்.."
"சரி.. சரி.. இரவு சாப்பாடு மண்டபத்துல சொல்லியிருக்கு.. நம்ம வீட்டுக்கு வர்றவங்களுக்கு நாமதான் சமைக்கணும் சரியா?"
"ம்.. ம்.. அதை நாங்க பாத்துக்கிறோம்.. அண்ணே நீங்க கவலையை விடுங்க"
இந்த வேலையில் கல்யாண மாப்பிள்ளை கணேஷ் அங்கே வருகிறான்.
"சிவகாமி! சிவகாமி! அண்ணன் இந்த ட்ரெஸ்ல எப்படி இருக்கேன்?"
"சூப்பரா இருக்கீங்க அண்ணே.. என்ன அண்ணிய பாக்க மண்டபத்துக்கா..!!!"
"ம்.. ம்.."
"சரி.. சரி.. அம்மாவுக்கு நீ அடுப்படியில உதவி செய்யுடா.. நான் இப்ப வந்துர்றேன்.."
"ம்.. ம்.. சரிண்ணே.. அண்ணே அண்ணிக்கி நாந்தான் நாத்தனார் முடிச்சு போடுவேன்..சரியா..?"
"நீதாண்டா போடணும்.. அந்த உரிமை ஒனக்குதான்"
"அம்மாடி தாயி சிவகாமி.."
"என்ன சின்னம்மா?"
"அம்மாடி வெளியில யாராவது இருந்தா கூப்புட்ரா.. இந்த அரவ சாமான கொஞ்சம் அரச்சி தரச்சொல்லு.. கொழம்ப கூட்டி போட்டா ஒரு வேலை முடியும்.."
"கொடுங்க சின்னம்மா... நான் அரைச்சுத்தரேன்.."
"அய்யய்யோ கையெல்லாம் எரியுமே"
"அதெல்லாம் ஒண்ணும் ஆகாது.. நீங்க இப்படி வாங்க", என்று சொல்லிய சிவகாமி வேக வேகமாக குக்கரில் பருப்பு வைத்து, மிக்சியில் தேவையானது அரைத்து அத்தனையும் முடித்துவிட்டாள்.
"அம்மாடி பட்டணத்துல படிச்ச பொண்ணு.. ஒண்ணும் ஒனக்கு தெரியாதுன்னுல்ல எல்லாரும் நினைச்சோம்.. எங்க நெனப்பெல்லாம் கெடுத்துட்டியே தாயி"
"அண்ணே.. அண்ணே.. உங்க பொண்ணு எண்ணமா வேலை செய்யுது.. படிச்ச பொண்ணு மாதிரியே தெரியில.. அந்த சேலைய தூக்கி சொருகிக்கிட்டு சும்மா மடமடன்னு அம்புட்டு வேலையும் முடிச்சிடுச்சி.. நாங்க இப்பவும் பருப்பு வேகவைக்கணும்ணா சட்டியிலயோ.. இல்லன்னா அலுமினிய பாத்துரத்துல தான் வைப்போம்... அதை வேக வைக்கரத்துக்குள்ள போதும் போதுன்னு ஆயிடும்.."
"ஆனா அந்த சாம்பார் எவ்வளவு ருசியா இருக்கும் தாயி.."
"போங்கண்ணே நீங்க எப்பவுமே இப்படித்தான்.. சிவகாமிய நல்லா வளத்து இருக்கீங்க அண்ணே.. போற இடத்துல நல்லா இருப்பா..
"எங்கிட்ட சொல்லாதே.. உங்க அண்ணிக்கிட்ட சொல்லு.. நான் காலைல போய்ட்டு, இரவு தான் வீட்டுக்கு வருவேன்.. உங்க அண்ணி தான் எல்லாத்துக்கும் காரணம்.."
"அம்மாடி சிவகாமி! உங்க சின்னம்மாவுக்கு எப்படி குக்கர்ல.. மிக்சியில செய்யறதுன்னு சொன்னியாம்மா..?"
"ம் ம் அவங்க நிமிஷத்துல எங்கிட்ட கேட்டு தெரிஞ்சி கிட்டாங்கப்பா"
"தனம், சிவகாமிக்கு ஒரு நல்ல பையனா பாரு.. நம்ம ஊருலையே கல்யாணத்த முடிச்சர்லாம்.."
"போண்ணே சிவகாமி நல்லா படிச்ச பொண்ணு.. இந்த ஊர்ல யாரு படுச்சுருக்கா.."
"ஏந்தாயி உங்க அண்ணி படிச்ச ஆளா... நான் அவள கல்யாணம் பண்ணிக்கலை"
"போண்ணே அதுக்கெல்லாம் உங்கள மாதிரி நெறஞ்ச மனசு வேணும்"
"தாயி யாராவது ஒருத்தர் படிச்சு இருந்தா போதும்.. நம்ம ஊரு சனங்கள்ட்ட நல்ல மனசு இருக்கு.. அது போதும்"
"ஆனா இப்போ கணவன் மனைவி இரண்டு பேரும் படிச்சவங்களா நிறைய பேர் இருக்காங்க.."
"அதுவும் தப்பில்ல தாயி.. இப்ப இருக்கிற சூழலுக்கு ஏத்தமாதிரி மாறினாலும் மாறலாம்.."
"ஆனா நான் பழைய ஆளாவே இருக்க ஆசைப்படறேன்..ஏன் உன் பையனவே எடுத்துக்கவே.. ரொம்ப நல்ல பையன்"
"அண்ணே என் பையன் பஸ் டிரைவரா இருக்கான்.. ஆனா சிவகாமிக்கு பிடிக்குமானு தெரியல.."
"அத்தை எல்லாத்தையும் நான் கேட்டேன்.. டிரைவர்னா என்ன? அவங்கள நம்பி தான் அத்தன பேரும் பஸ்ல உக்கார்ரோம்.. நல்ல நாள் கெட்ட நாள் பாக்காம.. வெயில் மழை பாக்காம உழைக்கிரவங்க.. சில ட்ரைவருங்க அவங்களுக்கும் அறியாம தவறு செய்யும் போது.. இவங்க என்ன செய்வாங்க? ரோட்ல போறவங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி திட்டும் போது, அந்த சாபத்தையெல்லாம் வாங்கிக்கிட்டு நம்மளுக்காக உழைக்கிறாங்க..
நிச்சயமாக உங்க பையனை நான் கல்யாணம் பண்ணிக்கிறேன்.. என்ன அத்தை சொல்றீங்க?"
"என்னத்த நான் சொல்ல? சும்மா தீபாவளி பட்டாசு மாதிரி பொரிஞ்சி தள்ளீட்ட.. உங்க அப்பாவ கேளும்மா.."
"அப்பா...!"
"இனி என்னடா நான் சொல்ல..இப்ப ஊருக்கு போயிட்டு வருவமா.."
"ம்.."
"ஒரு கல்யாணத்துக்கு வந்து அடுத்த கல்யாணம் முடிவாகிடுச்சு.."
"டும் டும் டும்
டும் டும் டும்"