விடியல்

அது நிஜமும் இல்லை; கனவும் இல்லை. அந்த உலகம் நிகழ்வதெல்லாம் பாதி உறக்கத்தில்தான். அந்த நிலையில் மனதில் பரவும் மகிழ்ச்சிக்குக் காரணம் கண்டுபிடிக்க முடியாது. அந்தக் கனவு நிலைக்கும் நிஜ உலகிற்கும் நடுவில் மிதந்து கொண்டிருந்தான் அவன். போதைப்பொருட்கள் உட்கொண்டால் கூட இப்படித்தான் இருக்கும் போல- என நினைத்துக் கொண்டான். ஆனால் அவனது மகிழ்ச்சியெல்லாம் கொஞ்சங்கொஞ்சமாக சத்தமில்லாத வெற்றிடத்தில் மறைவது போல் உணர்ந்தான். கடைசியில் அது மொத்தமாக மறைந்து ஏதோ ஒரு சினிமா பாடலாக ஒலித்தது- அவனது அலைபேசி.

பாதி கண்களை மட்டும் திறந்து அலைபேசியை எடுத்தான்.

"வீட்டு வாடகை கொடுத்துட்டியா, தம்பி?"

"இல்லண்ணா, நாளைக்கு மேல்வீட்டு அக்காகிட்ட கொடுக்கிறேன், வாங்கிக்கோங்க".

அலைபேசியை காதருகில் வைத்தபடியே அந்த பாதி உறக்க நிலையைத் தழுவப் பார்த்தான். ஆனால் அதுவோ வெகுதூரம் போய்விட்டது. உறங்குவதற்கு முன்னால் நடந்த சம்பவங்கள் ஒவ்வொன்றாக அவன் நினைவை உதைக்க ஆரம்பித்தன. வாக்குவாதம். பிரச்சனை. தலைவலி.

உள்ளாடை மட்டும் போட்டு உறங்கியதால் அவன் தொடைகளில் சில்லெனக் காற்றை உணர்ந்தான். விலகியிருந்த போர்வையை இழுத்து கால்களை மூடிக் கொண்டு உட்கார்ந்தான்.

"நான் ஏன் அவள காதலிச்சேன்?"

"அழகா இருந்தா"

"அது மட்டுமா?"

"இல்ல.... சந்தோஷமா இருந்தோமே. இந்த பிரச்சனைலாம் எப்பலயிருந்து?"

"சரியா தெரியல"

அவனுக்குள்ளேயே பேசிக் கொண்டான். அதற்குள் பின்னாலிருந்து எவனோ அழைத்தான்.

"டேய், கோயம்புத்தூருக்கு சாப்பிடப் போறோம், வர்றியா?"

"இல்லடா. நீங்க போயிட்டு வாங்க", என்று சொல்லி கண்களை மூடினான். அவள் முகம் கண்முன் வந்து நின்றது.

"நில்லுங்கடா. நானும் வரேன்".

மணியைப் பார்த்தான். 7.30 ஆகியிருந்தது. இரவு நேரங்களில் நண்பர்களோடு வெகுதூரம் சென்று சாப்பிட்டு வருவது, அவன் நண்பர்களிடையே உருவாகி வரும் புதிய கலாச்சாரம். அவசர அவசரமாக முகம் கழுவி பேன்டை மாட்டிக் கொண்டு வெளியே வந்தான்.

"நீ ஷெகின் கூட ஸ்கூட்டில வந்திடு", என்றான் அவன் நண்பர்களில் ஒருவன்.

ஷெகின் ஒரு மலையாளி. அடுத்த 40 நிமிடத்தை இந்த மலையாளி கூடத்தான் செலவு பண்ணனுமா என்று மலைத்தான். அது ஏனோ ஓர் இனம்புரியா வெறுப்பு மலையாளத்தின் மீது அவனுக்கு இருந்தது. ஆனாலும் பரவாயில்லை. என்னதான் மனதில் தோன்றினாலும் அது அத்தனையையும் மறைத்துவிட்டு புன்னகையை மட்டும் உதட்டில் காட்டி பேசுவதுதானே நாகரிகத்தின் விளக்கம். இல்லையென்றால் மனநிலை சரியில்லாதவன் என்று கண்டுபிடித்து விடுவார்கள். அதை அவன் விரும்பவில்லை.

ஷெகின் கூட ஸ்கூட்டியில் செல்லும் போது பேச்சுவார்த்தைக்கு முயற்சி செய்தான். ஆனால் அது வெகு நேரம் தொடரவில்லை. மெளனம் ஆக்கிரமித்தது. நெடுஞ்சாலையின் மஞ்சள் விளக்குகள் அவனைப் பார்த்துப் புன்னகைப்பதைப் போல் உணர்ந்தான். அவனும் புன்னகைத்தான். தேவையான அளவு வெளிச்சம்; தேவையான அளவு இருள்; உடலைச் சிலிர்க்க வைக்கும் அளவு தேவையான குளிர்ந்த காற்று; இந்த சுதந்திரம் அவனுக்குப் பிடித்திருந்தது. ஷெகின் ஒரு மலையாளி என்பதை மறந்தான். தேவர்களின் புஷ்பரதத்தில் ஏறி சொர்க்கத்ததைச் சுற்றி வருவது போல் உணர்ந்தான்.

உணவகம் சென்று வறுத்த கோழி, சுட்ட கோழி, பொரித்த கோழி என ஒரு கோழி வம்சத்தையே விழுங்கினார்கள். இருந்தும் கோழியை அருகிவரும் உயிரினமாக யாரும் அறிவிக்கவில்லை. விந்தை! பின்னர் திரையரங்கம். அந்த கொடூரமான சீன ஆங்கிலத்திலிருந்து தப்பித்து அவர்கள் வீடு வந்து சேர மணி பனிரெண்டு ஆகிவிட்டது.

அவன் வீடு வந்து, படுக்கையில் படுத்தான். விளக்குகள் அணைக்கப்பட்டன. அனைவரும் உறங்கினர். ஆனால் அவன் விழிகள் அந்த இருளை வெறித்து நோக்கின. அந்த மயான அமைதி அவன் காதுகளைக் கிழித்தது. தலையணை அடியில் வைத்திருந்த தனது அலைபேசியைத் துழாவி எடுத்தான். அவளை அழைத்தான். அவள் பெயர் சுதந்திரா. 'சுதா' என்று செல்லமாகக் கூப்பிடுவான். அவனது இதயத்தின் படபடப்பும் அழைப்பு மணியும் இணைந்து ஒலித்தன. அந்த ஒலியின் முடிவில் ஒரு மெளனம்.

"சுதந்திரா! நாண் கொஞ்சம் பேசணும். இத முடிச்சுக்கலாம். இப்படியே என் வாழ்க்கை முழுசா போயிடுமோனு பயமா இருக்கு". அந்த முனையிலிருந்து ஒரு அழுகைச் சத்தம் மெல்ல புறப்பட்டது.

"அழாத. வைக்கிறேன்". அந்த அமைதியான இருள் உலகம், மறுபடியும்.

"நான் இதுவரைக்கும் என் வாழ்க்கையில் சூரியன் உதிக்கிறத பார்த்ததேயில்ல. நாளைக்குக் காலையில சீக்கிரம் எழுந்து சூரியன் உதிக்கிறத பார்க்கணும். அது ரொம்ப அழகா இருக்கும்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா சூரியன் எத்தன மணிக்கு உதிக்கும்? 5.30 மணிக்கு அலாரம் வச்சா சரியா இருக்கும்", என்று மனதிற்குள் ஏதேதோ நினைத்துக் கொண்டு உறங்கிவிட்டான்...

அலாரம் ஒலித்தது. சட்டென விழித்தான். மணியைப் பார்த்தான். 5.30. எழுந்து பல் துலக்கி மொட்டை மாடிக்குச் சென்றான். இரவிலிருந்து மீளாமலிருந்தது வானம்.

அவள் உதிப்பதை முதல் முறையாக பார்க்கப் போகிறான். அவளா? சூரியன் - ஆண்பால் அல்ல?

இல்லை. இல்லை. அழகாக இருந்தால் ஆண்பால் அல்ல. பெண்பால்!

ஒரு பிரச்சனை உதித்தது. சூரியன் எந்தத் திசையில் உதிக்கும்? 'சூரியன் உதிக்கும் திசை கிழக்கு' என்ற பள்ளிப்பாடத்தை அவன் மறக்கவில்லை. ஆனால் கிழக்கு எது என்பதில் தான் சந்தேகம். மொட்டை மாடியில் இருந்து பார்க்கும் போது எல்லா திசைகளும் ஒன்றாகவே தெரிந்தன. இருந்தும், அவன் இன்றைய சூரிய உதயத்தைத் தவற விரும்பவில்லை. கலங்கரை விளக்கத்தைப் போல் நின்ற இடத்திலேயே சுற்ற ஆரம்பித்தான். அவள் எந்த நேரம் வேண்டுமானாலும் எந்த திசையில் வேண்டுமானாலும் உதிக்கலாம்!

பெண்களும் பறவைகளும் தான் முதலில் எழுபவர்கள் என கண்டு கொண்டான்; அதிகாலை காற்று உற்சாகத்தைத் தருவதாகக் கண்டு கொண்டான்; 'அமைதியும் அமைதியும்' காலையில் அதிகம் என கண்டு கொண்டான். ஆனால் அவளைக் காணவில்லை.

மணி ஆறானது; ஆறரையானது; ஏழானது. அவள் மட்டும் உதித்த பாடு இல்லை.

வானம் எங்கிருந்தோ எபபடியோ தெளிந்து விட்டது. பொழுது மெல்ல விடிந்து விட்டது.

சூரியன் எங்கோ எப்படியோ மேலெழும்பி விட்டது. இந்த மந்தமான மேகமூட்டத்திற்கிடையே எங்கோ ஒளிந்திருக்க வேண்டும். இல்லை! இந்த மேகங்கள் சூரியனை மறைத்து விட்டன.

"பரவாயில்லை. நாளை நான் சூரிய உதயத்தைக் காண்பேன்", என முடிவு செய்து கீழே இறங்கி சென்று விட்டான்.

எழுதியவர் : இரா. சரவணகுமார். (8-Mar-14, 7:49 pm)
Tanglish : vidiyal
பார்வை : 883

மேலே