என்னை போன்ற பேரன்களுக்கு
இன்று ஏசும் பேச்சுகளும் ,அதிகார குரலும் ஏனோ காணவில்லை .இறுதிக் கட்டத்தில் இருக்கிறார் என்பது நன்றாக தெரிந்தது .இன்று அமாவாசை ஆதலால் நிச்சியம் அடங்கிவிடும் என்ற முடிவில் உறவினர்களும் தெரிந்தவர்களும் வீட்டில் கூடிவிட்டனர் .அனைவரது முகமும் ஏதோ ஒன்றிற்காக காத்துக்கொண்டு இருப்பது போல் இருந்தது .
"பாலாஜி கடைசியா வந்து தாத்தாவ பாருடா !"என்று அழுகையுடன் சித்தி கூற தயக்கத்துடன் உள்ளே செல்ல மனமில்லாமல் அவர் அறையின் வெளியில் நின்றுக்கொண்டு அவரை பார்த்தேன் .அவருடன் நான் செய்த வாதம்,அவரை நான் கூறிய கடுஞ்சொற்கள் இன்று என் மனதை அழுத்தின . என்ன செய்வது என்று தெரியாமல் " ஐயோ! நான் என்ன பண்ண போறேன் " என்று கதறும் பாட்டியை கண்டு நான் நொந்து போனேன்.
தொந்தி தாத்தா என்று அழைக்கப்படும் கோபால் தாத்தா .கண்டிப்புடன் உண்மையுடன் இருப்பதால் என்னவோ .என்னைப்போல் பலருக்கு அவரை கண்டாலே ஆகாது. நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று இருப்பதால் பிடிவாதக்காரன் என்றும் ,சற்று ஆணாதிக்கம் தென்படுவதால் முரடன் என்றும் ,தன் பெண் குழைந்தைகளை கரை சேர்க்க வேண்டும் சிக்கனமாக வாழ்ந்ததாலும் மகா கருமி என்றும் பெயரெடுத்தவர் .
பெத்தது மூணுமே பொண்ணு . " ஐந்து பெண் குழந்தைய பெத்தா அரசனே ஆண்டியாவன் இவனெல்லாம் எம்மாத்திரம் "என்று கூறியவர்களின் நடுவில் மூன்று பெண்களுக்கும் கல்வி அவசியம் என்று டிகிரி கல்வியை தந்து முடிந்த சீர்வரிசை தந்து திருமணம் செய்து வைத்து அனைவரும் வாய் அடைக்க செய்தேன் என்று அவர் தன்னை பற்றி பெருமையாய் கூறியது இப்போது ஞாபகம் வருகிறது .
காதியில் வேலை செய்த அவரிடம் ஒரு காந்தியக் கொள்கை தென்பட்டது உண்மை பேசுவது ,இதனால் பலர் சிக்கலில் மாட்டிக்கொள்வர். இதனால் உயர் அதிகாரிகளிடம் நன் மதிப்பு பெற்று இருந்தாலும் ,சக ஊழியர்களிடம் வெறுப்பையே சம்பாதித்து கொண்டார் .அதை பற்றி அவர் கவலை கொள்ளவும் இல்லை .
ஓய்வு பெற்றதால் என்னவோ பொழுது போகாமல் வீணாக பேசி சிக்கலில் மாட்டிக்கொள்வர் . அவர் ஏதோ கூறிய வார்த்தை வீட்டில் ஒரு கலவரத்தையே ஏற்படுத்திவிடும் ."உக்கார்ந்து படி ! " என்பதற்கு பதிலாக " அவனை பார் அவன் எவ்ளோ நன்றாக படிக்கிறான் அவன் ******* வாங்கி குடி " என்றுக் கூறியும் "பணத்தை சேமித்து வை !" என்பதற்கு பதிலாக " ஊதாரியாய் செலவு செய்துவிட்டு பின்னால் பிச்சை எடுக்காதே"என்று கூறியும்,"பெண் குழந்தைக்கு திருமணம் செய்தல் நல்லது !"என்பதற்கு பதிலாக " பாத்து யாராச்சு கூட்டிட்டு ஓடிர போறா !"என்று பேச தெரியாமல் பேசி பலரின் வெறுப்புக்கு ஆளாகி விட்டார் .இவரிடம் பேசினால் பிரச்சினை என்று பலர் ஒதுங்க ஆரம்பித்தனர் அவர்களில் நானும் ஒருவன் .
தன்னை யாரும் மதிப்பதில்லை ,தான் பேசுவதை யாரும் செவிக்கொடுத்து கேட்பது இல்லை போன்றவை அவரை சங்கடத்தில் ஆழ்த்தின.தான் பேசினால் பிரச்சனை என்று பிறர் கூறுவதால் தான் ஒரு பித்தனோ என்ற நினைப்பும் அவரிடம் இருந்தது . தன்னிடம் யாரும் பேசுவதில்லை என்றக் கோபத்தால் தான் சொன்னால் மறு பேச்சு பேசாமல் கேட்கும் மனைவியிடம் சண்டை செய்து அவரை திட்டித்தீர்பார் .
அவர் பேசாமல் இருந்ததால் என்னவோ பிணி அவர் உடலுக்குள் புகுந்து ஆட்கொண்டது . மூன்று மாதங்களாக நெருப்பில் சிக்குண்ட புழுபோல் துடிப்பது எங்கள் மனதிலே கலங்கத்தை உண்டு செய்தன . அவர் பேச நினைத்தாலும் பாவம் முடியவில்லை .என்னிடம் ஏதோ பேச அறையின் வெளியில் எட்டிப்பார்பார் .பேசினால் பிரச்னை வந்துவிடுமோ என்று எண்ணி அவர் முகத்தை வேறு திசைக்கு மாற்றிக்கொள்வார். அவரது நல்ல பேரனாக நான்ஒருபோதும் இருந்தது இல்லை ,அவரும் எனது நல்ல தாத்தாவாக இருந்தது இல்லை போன்ற ஈகோ என்னை இன்று வெட்கித் தலைகுனிய செய்கிறது .
பிணி நன்றாக அவரிடம் உறவுக்கொண்டு அவரை மரண படுக்கைக்கு அழைத்துச்சென்றது . மரணத்தை நினைத்து அவர் பயப்படவில்லை ."யாரு தான் சாகல ! நா இருந்து என்ன பண்ண போறேன் ,எல்லோர்க்கும் கஷ்டம் சீக்கிரம் போனதா நல்லது !" என்று அவர் பாட்டியிடம் கூறியது எனக்கு வியப்பையும் வாழ்கை பற்றிய புரிதலும் ஏற்படுத்தியது .
அனைத்தயும் நினைத்துக்கொண்டு மெதுவாக உள்ளே சென்றேன் .இப்போது உயிர் ஊசல் ஆடிக்கொண்டு இருந்தது .அவரிடம் மன்னிப்பு கேட்க முயற்சித்தேன் .பொல்லாத ஈகோ என்னை மீண்டும் தடுக்க பார்த்தது ," தாத்தா பாலாஜி வந்துருக்கேன் தாத்தா!" என்றேன் உடல் அசையாமல் புறப்பட தயாராக இருந்தது ." மனிச்சுடுங்க தாத்தா என்ன மனிச்சுடுங்க " என்று மனதில் கூறி வெளியே அழத்தொடங்கினேன் . என் மன்னிப்பை ஏற்றுக்கொண்டார் போலும் , மூச்சை இழுத்துக் கொண்டு வெளியேவிடாமல் புறப்பட்டார்.
என்னை போன்ற பேரன்களுக்கு : தாத்தாவின் திட்டுகளும், கொஞ்சல்களும் உங்கள் வாழ்வில் ஒரு முறையே பின்பு எங்கு தேடினாலும் கிடைக்காது .
அன்பு தாத்தாவிற்கு
பாலாஜி லெனின்.