நான் திரு நங்கை
நான் அவனில்லை
நான் அவளில்லை
அவளாகவும் அவனாகவும்
இல்லாத அவதார நங்கை -
திரு நங்கை.
திரு நங்கை -
திரு இல்லாத நங்கை
சிற்பி சிலை செதுக்கி முடிக்குமுன்
உளி உடைந்து போனதால்
முழுமை பெறாமல் போன அழகுச் சிலை.
களங்கமில்லா தாய்ப்பாசம்
தடுமாறியது கொஞ்சம்
எங்களை தனியே பார்த்தாள் தாய் -
எங்களை தனியே விட்டாள் தாய்-
ஐயோ என்ன கொடுமை இது
அடுத்து வந்த உடன்பிறப்புகள்
அண்டவிடாமல் பார்த்தாள் தாய்.
நீதிமன்ற நிலுவை வழக்குகள் போல
எங்கள் கோரிக்கைகள்
கண்ணுக்கெட்டிய தூரம்
கானல் நீராய்.....
சமூக அவலங்களில்
சாக்கடைக்கு வீசப் படுகிறோம்
சந்தனம் கேட்கவில்லை
சந்தானம்எங்களுக்கில்லை
சேறள்ளிப் பூசாமல் சிரிக்க விடுங்கள்
கொஞ்சம் சிந்திக்க விடுங்கள்
கூத்தாடும் ஆண்டவன்
எம்மைப் படைத்ததாய்
எல்லோரும் சொல்கிறார்கள்
படைத்த பிரமனே
பாராமுகம் காட்டினால்
பாரினில் எவரெமை
பாசம் காட்டுவர்.
வந்த கர்ப்பப்பை
ஓன்று என்றாலும்
வாழ்க்கைமுறை
வேறாகிப் போனது.
கருவறை தொடங்கி
கல்லறை வரை
கல்லடி பட்டே நோகிறோம்
பெற்றோர் தொடங்கி
பலபேரின் சொல்லடியில்
தினம் நொந்தே சாகிறோம்.
விண்ணப்ப படிவங்களில்
பாலினம் குறிப்பிட
இனி -
மூன்றாம் கட்டம் போடுங்கள்
அதில் -
திருநங்கை என்று எழுதுங்கள் .
குடிமக்கள் அனைவருக்கும்
குடும்ப அட்டை -
எங்களுக்கு கொடுக்க
என்ன தடை
வாக்குரிமை இருபாலுக்கும்
கொடுத்தது போல்
எம்பாலுக்கும் கொடுங்கள்
எங்களையும்
சட்டசபை அனுப்புங்கள்.......
துவைத்தீர் -கல்லில் சேலையாய் துவைத்தீர்
சுவைத்தீர்-கரும்புச் சாறாய் சுவைத்தீர்
நகைத்தீர் - கண்ணில் நீர்வர நகைத்தீர்
விதைத்தீர்-நெஞ்சில் விஷமத்தை விதைத்தீர்
வடிவுக்கு உள்ளேயும்
வாடி நிற்குது ஒரு மனசய்யா
காமக்கண் மூடி
ஞானக் கண்ணில் பாருமைய்யா
வெகு நாளாய் ஒடிக்காமல்
வீணாகிப் போகுது ஒரு தனுசய்யா.
எம்மை ஒதுக்காமல் செதுக்குங்கள்
முழுச் சிலையாய் மாறுவோம்
நசுக்காமல் பதுக்குங்கள்
பவுன் போல ஒளிர்வோம் .
எம்மக்கள் வல்லவர்கள்-
நீள்விசும்பு அதையும்
வில்லாக வளைப்பார்கள்
ஆழ்கடல் ஆழத்தையும்
அம்பாக துளைப்பார்கள்.
ஆணுக்கு ஒருதினம்
பெண்ணுக்கு ஒரு தினம்
அதுபோல்-
எங்களுக்கும் ஒருதினம் வையுங்கள்
எங்களுக்கும் மனசுண்டு அதைப் பாருங்கள்