விஞ்ஞானத்தின் விபரீதங்கள்
இரு கண் இருந்தும்
இருளில் இருந்தோம்!
விஞ்ஞான விளக்கால்
திசைகள் தெளிந்தோம்!
விண்முட்டும் வளர்ச்சி
தந்த விஞ்ஞானம்
விளைவித்த விபரீதம்
நூறு விதம்!
இயற்கையின் சுதந்திரத்தில்
தலையிட்டோம்!
இயன்றவரை ஓசோனில்
துளையிட்டோம்!
இணையத்தின் இடுக்குகளில்
சிறைபட்டோம்!
இயந்திரமாய் வாழ்வதற்கு
இசைவுற்றோம்!
நேரத்தை நெடுந்தொடரில்
செலவிட்டோம்!
நெஞ்சை முட்டும்
தொப்பைக்கு வழிவிட்டோம்!
கணினிக்குள் கண் புதைத்துக்
களைப்புற்றோம்!
கைபேசிக் கதிர்வீச்சால்
புலன் கெட்டோம்!
விஷமான மண்ணுழுது
விதை நட்டோம்!
இரசாயன உணவுகளால்
இரணப்பட்டோம்!
காற்றையெல்லாம் மாசாக்கும்
கலை கற்றோம்!
தண்ணீரையும் தரம் பிரித்து
விலையிட்டோம்!
பண்பாட்டுப் பழமைகளை
பலியிட்டோம்!
அடுக்குமாடிக் கூண்டு தேடி
அடைபட்டோம்!