மனிதக் காட்சி சாலை
முதியோர் இல்லம்
மனிதக் காட்சி சாலை
தோளில் தூக்கி சுமந்த மழலைகள்
தூக்கி விசிய குப்பைத்தொட்டி.
இரவும் பகலும் விழித்திருந்து
காப்பாற்றிய மகனும் மகளும்
தங்கள் வசதிக்காய் - எங்களை
ஓரங்கட்டிய இடம்.
மிருகக் காட்சிச் சாலையில் விலங்குகளுக்கு
விசிஎறியும் உணவுப் பொட்டலங்களைப் போல்
அவ்வப்போது எங்களைப்
பார்க்கவரும் மனிதர்கள் தரும்
ஆடைகளும் உணவுகளும்
எத்தனையோ ஏக்கர் நிலங்களை விற்று
இவன் கல்விக்காய் செலவிட்டோம்
இவன் கட்டிய இரண்டடுக்கு வீட்டில்
எங்களுக்கு இடமில்லை என்கிறான்.
பழங்கள் விதைகளுக்காக
மரங்களைப் வெட்டுவதைப் போல
தன் மகன் வளர என்னை இந்த
முதியோர் இல்லத்தில்
முடக்கியிருக்கிறான் என் மகன்
ஆலமரம்போல் கிளைப்பரப்பி
விழுதிறக்கி காப்பாற்றாமல்
வாழை மரம்போல் தான் வளர்ந்து
என்னை பலியாக்கிவிட்டான்
இன்றுநான் பிடித்திருக்கும்
ஊன்றுகோல் உதவும் அளவுகூட
உதவாமல் போய்விட்ட மகன்
இன்று புரிகிறது நான் பாறையில்
விதைதிருக்கின்றேன் என்பது
நுனி மரத்தில் அமர்ந்து
அடி மரத்தை வெட்டும் மகனே
விழுந்துவிடப் போகிறாய்
எச்சரிக்கை !!!