விவசாயிகளை மேயும் வேலி---அஹமது அலி-----

வேலியே
பயிரை மேய்வது புதிதல்ல...
அவ்வப்போது!
இப்போது
விவசாயிகளையே
மேய்கிறதே!
(0)
இவர்கள்
ஜனநாயகத்தின்
அரண்கள் -செயல்கள்
முரண்கள்!
(0)
கலவரத் தடுப்புகளே
தொடுப்புகளாக
துடுப்புகளாக...!
(0)
ஜனநாயகத்தின் மீதான
விருப்புகள்
மறுப்புகளினால்
வெறுப்புகளாக உருமாற
நல்ல உறுதுணைகள்!
(0)
அடக்குமுறைகளின் வழி
அமைதி என்பது
ஜனநாயகத்திற்கு கட்டும்
உயிரோடே சமாதி!
(0)
அடக்குமுறைகள்
அடங்காமல் போகக் காட்டும்
வழி முறைகள்.!
(0)
நீதித் தராசின்
நியாய முட்கள்
அநியாயமாக
நீதி கேட்பவர்களின்
நெஞ்சிலும் குத்தி விடுகிறது!
(0)
விறைப்பான
காக்கிச் சட்டைகளும்
காந்தி தலைகளை கண்டதும்
மடிந்து விடுகிறது
தேச பக்தியல்ல...
பணபக்தி!
(0)
நிதிப் பொறியில்
வீழ்ந்திடும் எலிகளாக
சாதிப் போதையில்
சாக்கடையாகும் சாமனியர்களாக
வாகன வழிப்பறி
கொள்ளையர்களாக
நடுச்சாலை
யாசகர்களாக...
(0)
சீருடையணிந்த துறையினர்
சீர்கெட்ட துறையினராக
பேர் கெட்டு போனதில்
பெருமை கொள்ளுமா
என் தேசம்?
(0)
நேர்மையின் கூர்மையில்
நெஞ்சுரம் மிகுந்து
கடமை புரியும்
சில காவலரை நினைக்கையில்
கண்ணியம் கட்டுப்பாடின்றி
வருகிறது!
(0)
ஜனநாயகத்தின் மீதான
நம்பிக்கை எப்போதாவது
மிச்சமாய் துளிர்க்கிறது!