ஊமை புல்லாங்குழல்
எப்போதும் போல்
இப்போதும்
ஒரு கூட்டம்
வந்து போயிற்று !
எதைச்சொல்லி
நிராகரிப்பதென்று
வந்த கூட்டமும்
எப்படியாவது
சம்மதம் வந்து விடாதாவென
இந்தக் கூட்டமும் !
கருப்பினை மாநிற மென்றும்
ஏழ்மையினை பாந்தமென்றும்
அடிமையாயிருக்க சம்மதமென்பதை
அனைத்து வேலைகளும்
தெரியுமென்றும்
ஆயிரம் பொய் சொல்லி
இந்த முறையாவது
நிச்சயமாகி
முழுக்கமிஷன்
கிடைத்து விடாதவென
தரகரும் !
இவர்களுக்கெல்லாம்
தெரியுமா ?
எனது தலையணை ...
எனது பட்டுப்புடவை ...
எனது கண்ணீர் ...
எனது வீட்டு தேநீர்கோப்பை
இவைகளுக்குள்
படமெடுத்துக் கிடக்கும்
இரவு நாகத்தின்
நிசப்த விஷம் ...
ஒவொரு முறை
பேச்சுவார்த்தை முறியும்
போதும்
சமூகச் சொல்லெறி தாங்காது
எனைப் பெற்றவர்கள்
ஒருவருக்கொருவர்
எரிந்து விழுமெல்லா இரவுகளிலும்
ஓராயிரம் பத்தினிக் கதைகளில்
பதியம் போட்டு
பறிக்க முடியாது
முற்றிக் கிடக்கும்
எனது பருவச் செடியின்
ஏக்கப் பொதி சுமந்து
இரவேற முடியாமல்
துடிக்கும் இமைக்கழுதை
விழுந்து கிடக்கும்
எனது தலையணை ...
ஆடியும் , மார்கழியும்
தவிர
மற்ற மாதங்களில்
ஆண்டு தோறும்
காட்சிப் பொருளாக
என் மேனி சுற்றி
கசங்காமல்
நான் அவிழ்த்து வைக்கும்
போதெல்லாம்
கரும்பாக இனிக்க வேண்டிய
என் இளமை
இரும்பாக் இறுகிக் கிடப்பதறிந்து
ஜரிகையில் ஜொலிப்பதர்க்குப் பதில்
சருகாக மங்கிக்கிடக்கும்
என் பட்டுப் புடவை ...
தோழிகள் அனைவரும்
அவரவர்
திருமணப் பத்திரிக்கைகளை
தந்து விட்டுச் செல்லும் போதெல்லாம் -
சேமித்து வைத்தால்
ஒரு தேசத்திற்கான
உப்பளத்தை உருவாக்குகிற
அளவிற்கு
அடக்க முடியாமல்
அணை உடைக்கும்
என் கண்ணீர் ...
பார்த்து விட்டு
பார்த்து விட்டு
தேநீர் அருந்திச் சென்றவர்களின்
உதட்டு எண்ணிக்கை
கணக்கறியாததால்
சூடு தணியாது கொப்பளித்துக் கிடக்கும்
என் வீட்டு தேநீர் கோப்பை ...
இவைகளுக்கெல்லாம்
தெரியும் -
இந்த ஏழைக் கொடி
பற்றிப்படர
பெருந்தேர் தேவையில்லை
ஒரு கொழு கொம்பு
போதுமென்பது ...
ஆனால் -
உங்களுக்குத் தெரியுமா
பாரிகளே ?
தேவை